

காதல் கொண்டால் காதலன் பெயரைக் காதலியும் காதலி பெயரைக் காதலனும் பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் நாம் அறிந்ததே. இளைஞர்களின் ஃபேஷன்களில் ஒன்றான டாட்டூ மேலை நாட்டின் பச்சை குத்து என்றுகூடச் சொல்லலாம். டாட்டூவின் வடிவமும் வண்ணமும் எளிதில் ஈர்க்கக் கூடியதாக இருப்பதால் அதில் எளிதாக இளைஞர்கள் விழுந்துவிடுகிறார்கள். ‘கடவுள் பாதி மிருகம் பாதி’ பாடிய ஆளவந்தான் நந்துவின் உடம்பில் பயமுறுத்தும் டாட்டூ இடம்பெற்றிருந்தது ஞாபகம் இருக்கிறதா?
அமெரிக்காவில் ஆண்களைவிடப் பெண்களே டாட்டூவை அதிகம் பயன்படுத்துகிறார்கள். டாட்டூ என்பது மற்றவர்களைக் கவர விரும்புவர்களின் தேர்வாகவே இருக்கிறது. எதிலும் தனித்துத் தெரிய வேண்டும் என்னும் ஆர்வமே விதவிதமான டாட்டூவை உருவாக்குகிறது. ஆனாலும் ஹார்ட்டையும், ஏஞ்சலையும்தான் அதிகமானோர் டாட்டூ படமாகக் குத்திக்கொள்கிறார்கள். டாட்டூவின் நிறத்துக்காகச் சில வேளைகளில் அதில் சிறுநீர் கூடக் கலக்கிறார்களாம். இது டாட்டூ குத்திக்கொள்பவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ?
முதுகு, மார்பு, மணிக்கட்டு, மூட்டு, தோள் எனப் பல இடங்களில் டாட்டூவைக் குத்தும் வழக்கம் இருக்கிறது. டாட்டூ இன்று நேற்று தொடங்கிய பழக்கமல்ல. சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பிரான்ஸ், போர்ச்சுகல், ஸ்காண்டிநேவியா போன்ற நாடுகளில் டாட்டூக்கான கருவிகள் இருந்ததைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பதினெட்டாம், பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய, ரஷ்ய அரச குடும்பங்களில் டாட்டூ பிரபலமாக இருந்திருக்கிறது. அப்போது டாட்டூ பயங்கர செலவுவைக்கும் காரியம். எனவே சாதாரணமானவர்களால் டாட்டூவை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாதாரணமானவர்களும் நெருங்கக் கூடிய நிலைக்கு வந்தபோது பெருங்குடும்பங்கள் டாட்டூவை இழிவான ஒன்றாகக் கருதத் தொடங்கின.
இன்று அமெரிக்காவில் சராசரியாக 1.65 பில்லியன் டாலர்கள் டாட்டூவுக்காகச் செலவழிக்கப்படுகிறது என்றால் டாட்டூ எனும் கலையின் மகத்துவத்தைத் தெரிந்துகொள்ளலாம். இங்கே சில வித்தியாசமான டாட்டூக்கள் உங்கள் பார்வைக்காக…