Published : 01 Oct 2019 09:59 AM
Last Updated : 01 Oct 2019 09:59 AM

வலை 3.0: காக்க... காக்க..  இணையம் காக்க!

சைபர்சிம்மன்

இணையத்தில் உலவும் எல்லோருக்கும் புதிய இணையதளங்களையும் பயனுள்ள இணைய தளங்களையும் அறிமுகம் செய்துகொள்வதில் ஆர்வம் பொங்கிக் கொண்டிருந்த காலம் அது. யாஹுவுடன் இணைய கையேடு சேவையும் ‘கூல் சைட் ஆஃப் தி டே’ போன்ற சேவைகளும் இதை ஓரளவு நிறைவேற்றின. என்றாலும், இணையம் வளர்ந்த வேகத்தில் இணையதளங்களைக் கண்டறிய இன்னும் சிறந்த சேவை தேவைப்பட்டது.

இணையதளங்களைப் பட்டியலிடுவதன் மூலம் ‘அலெக்சா’ இதைச் செய்தது. ‘அலெக்சா’ அதன் பயனாளிகளுக்கு ஒரு ‘டூல்பா’ரை வழங்கியது. இந்த ‘டூல்பா’ரைத் தரவிறக்கம் செய்து நிறுவிக்கொண்டால், அது பயனாளிகள் பிரவுசர் பின்னே ஒளிந்துகொண்டு, இரண்டு விஷயங்களைச் செய்யும். ஒன்று, பயனாளிகள் எந்த இணையதளத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார், அதிலிருந்து எந்தெந்தத் தளங்களுக்குச் செல்கிறார் எனும் தகவல்களைச் சேகரித்துக் கொள்ளும். இந்தத் தகவல்கள் மூலம், இணைய பயனாளிகள் உலா வரும் தளங்களுக்கான வரைபடத்தை உருவாக்கிக் கொள்ளும்.

இந்தத் தகவல் மூலம் இணைய வாசிகள் மத்தியில் எந்தத் தளங்கள் பிரபலமாக இருக்கின்றன என அறிய முடிந்தது. இதுவே அலெக்சா முன்னணித் தளங்கள் பட்டியலானது. அதேநேரத்தில், இவ்வாறு சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு பிரபலமாக உள்ள இணையதளம் எது, பயனாளி பார்த்துக்கொண்டிருக்கும் இணையதளத்தின் ஜாதகம் என்ன? அதனுடன் தொடர்புடைய இணையதளங்கள் எவை என்பது போன்ற தகவல்களையும் அலெக்சா வழங்கியது.
ஆக, ஒரு பக்கம் பயனாளிகளிட மிருந்து தகவல்களைத் திரட்டியது.

இன்னொரு பக்கம் அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய தகவல்களை அளித்து, அவர்களுக்கு இணையத்தில் வழிகாட்டியது. அந்த வகையில் அது ஓர் உலாவி இயந்திரமாகச் (சர்ஃப் இன்ஜின்) செயல்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நெட்ஸ்கேப் பிரவுசர், அலெக்சாவின் இந்த சேவையைப் பயன்படுத்தி, தொடர்புடைய இணையதளப் பரிந்துரையை வழங்கியது.

ஒருவிதத்தில், அலெக்சா ஒரு தேடு இயந்திரம் போலவும் செயல்பட்டது. இணையத்தைத் துழாவுவதற்கான அதன் மென்பொருள்கள் இணையத்தில் உலா வந்து அதைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தது. இந்த இணைய பிரதிகளே, டிஜிட்டல் காப்பகமான இண்டெர்நெட் ஆர்கேவுக்கு அடித்தளமாயின.

1999-ம் ஆண்டு அலெக்சா சேவையை அமேசான் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இண்டெர் நெட் ஆர்கேவ் திட்டத்தை புருஸ்டர் கால் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்திவருகிறார். இந்தச் சாதனைக்காக அவர் இணைய புகழரங்கிலும் இடம்பெற்றார். 2001-ம் ஆண்டு முதல் வேபேக் மெஷின் எனும் வசதி மூலம், இணையக் காப்பகத்தின் பக்கங்களைப் பொதுமக்களும் அணுக வழி செய்துள்ளார்.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x