Published : 01 Oct 2019 09:57 AM
Last Updated : 01 Oct 2019 09:57 AM

உதயமாகிறான் புதிய நாயகன்!

ரேணுகாதேவி

தோல்வியைக் கண்டு துவளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறுவதுதான் எந்த ஒரு விளையாட்டு வீரரருக்கும் அழகு. தோல்விகள் வெற்றிக்கான படிக்கட்டுகள் என்பதை ரஷ்ய டென்னிஸ் வீரர் டேனில் மெத்வதேவின் டென்னிஸ் வாழ்க்கையும் அவருடைய முன்னேற்றமும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கின்றன.

அண்மையில் நடைபெற்று முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலுடன் மோதினார் மெத்வதேவ். மலைக்கும் மடுவுக்கும் இடையான போட்டியாக இது வர்ணிக்கப்பட்டது. ஆம், ரபேலுக்கு இது 27-ம் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி. ஆனால், மெத்வதேவுக்கு இதுதான் முதல் கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டி.

மாரத்தான் போட்டி

இந்தப் போட்டியில் டென்னிஸ் உலகின் முன்னணி வீரரான ரபேல், மெத்வதேவை அவ்வளவு எளிதாக வென்றுவிடவில்லை. இருவருக்குமான போட்டி மாரத்தான் போல் நீடித்தது. சுமார் ஐந்து மணிநேரம் நீண்ட இப்போட்டியில் இருவரும் தலா இரண்டு செட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதி செட் ஆட்டத்தில் ரபேலுக்கும் மெத்வதேவுக்கு மான போட்டி இழுபறியாக நீடித்தது. இறுதியில் தன்னுடைய 19-ம் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார் ரபேல்.

ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக அமைந்த இப்போட்டியில் மெத்வதேவ் தோற்றாலும் டென்னிஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றார். அதே வேளையில் டென்னிஸ் உலகத் தரவரிசைப் பட்டியலில் 11-ம் இடத்திலிருந்து 4-ம் இடத்துக்குப் புலிப் பாய்ச்சலில் முன்னேறினார் மெத்வதேவ். இந்தப் போட்டி முடிந்த இரண்டு வாரங்களிலேயே செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கோப்பைக்கான போட்டிகள் ரஷ்யாவில் தொடங்கியது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் இறுதிப் பிரிவில் குரோஷிய வீரர் போர்னாவை வென்று சாதனை படைத்தார் மெத்வதேவ். 15 வருடங்களுக்குப் பிறகு ரஷ்ய வீரர் ஒருவர் வென்ற முதல் கோப்பை இது.

எதிர்கால வீரர்

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிவரும் மெத்வதேவ் இதற்கு முன்பு தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்காக நடைபெறும் ஏடிபி டென்னிஸ் போட்டிகளிலேயே அதிக அளவு பங்கேற்றுவந்தார். ஆனால், இந்த ஆண்டின் தொடக்கம் மெத்வதேவுக்குச் சாதகமாகவே அமைந்தது. ஏடிபி டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான பிரிஸ்பேன் போட்டியில் ஆண்டி முர்ரே, மிலோஸ் ராவ்னிக் போன்ற முன்னணி வீரர்களைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடை பெற்ற சின்சினாட்டி டென்னிஸ் தொடரில் உலகின் முதல்நிலை வீரரான நோவாக் ஜோகோவிச்சை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்தினார் மெத்வதேவ். இந்த வெற்றி மெத்வதேவ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

இறுதிப் போட்டியில் உலகின் 7-ம் நிலை வீரரான டேவிட் கோபின்னை வீழ்த்தி சின்சினாட்டி பட்டத்தை வென்றார். அதன்மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டிக்கு முதன்முறையாகத் தகுதிபெற்றார் மெத்வதேவ். 23 வயதான மெத்வதேவ் 10 ஆண்டுகளாகத்தான் டென்னிஸ் விளையாடி வருகிறார்.

2011-ம் ஆண்டு மெத்வதேவ் தொழில்முறை வீரராக டென்னிஸ் விளையாட்டைத் தொடங்கினார். அப்போது டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் அவரது இடம் 1000. ஆனால், வெற்றி தோல்வியைப் பற்றிச் சிந்திக்காமல் தொடர்ந்து முயன்றுகொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோள்தான் மெத்வதேவின் இன்றைய உயர்வுக்குக் காரணம்.

“நான் எத்தனை கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வெல்வேன் எனத் தெரியாது. ஆனால், ஒவ்வொரு கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் நான் கலந்துகொள்ள வேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம்” என்று தன்னுடைய வெற்றிக்குப் பிறகு மெத்வதேவ் கூறுவது வழக்கம். ‘மெத்வதேவ் உடல் அளவிலும் மனத்தளவிலும் உறுதிமிக்க வீரர். எதிர்காலத்தில் அவரால் பல போட்டிகளில் வெல்ல முடியும்.

மெத்வதேவின் ஆட்டத் திறமை என்னை மிகவும் வியக்கவைக்கிறது. ஒரு சிறந்த வீரருடன் விளையாடிய அனுபவம் கிடைத்தது” என கிராண்ட் ஸ்லாம் போட்டி வெற்றிக்குப் பிறகு குறிப்பிட்டார் ரபேல் நடேல். அடுத்து தலைமுறை நட்சத்திர வீரர்களின் பட்டியலில் மெத்வதேவ் இப்பொழுதே இடம்பிடித்துவிட்டார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x