

சைபர்சிம்மன்
புருஸ்டர் கால் இணைய யுகத்தின் டிஜிட்டல் காப்பான். இணையத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் பிரதியெடுத்துப் பாதுகாக்கும் ‘இண்டெர்நெட் ஆர்கேவ்’ எனும் அமைப்பை நடத்திவருகிறார். அதன் அங்கமான வேபேக் மிஷினின், கடந்த காலப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்க வழிசெய்கிறது. ஆர்கேவ் தளத்துக்குச் சென்று பார்த்தால், புருஸ்டர் எத்தனை சவாலான விஷயத்தைச் செய்துவருகிறார் என அறியலாம்.
இணையத்தில் எண்ணிக்கையில் அடங்காத இணையதளங்கள் உள்ளன. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட தளங்கள் பல காணாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் கோலோச்சிய தளங்கள்கூட, கால ஓட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன.
இந்தத் தளங்களின் அந்தக் காலத் தோற்றத்தைப் பார்க்க விரும்பினால், ‘இண்டெர்நெட் ஆர்கேவ்’தான் ஒரே வழி. அதேபோல, இணையத்தில் உலவும்போது, தேடிச்செல்லும் ஓர் இணையத்தில், இந்தப் பக்கத்தைக் காணவில்லை எனப் பிழையான செய்திகளைப் பார்த்து ஏமாற்றம் அடையும் அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். அந்தப் பழைய டிஜிட்டல் பிரதியைப் பார்க்க வேண்டும் என்றால், ‘இண்டெர்நெட் ஆர்கேவ்’தான் புகலிடம். இதற்குக் காரணம், புருஸ்டர் உருவாக்கிய அமைப்பு, சீரான இடைவெளியில் இணையத்தைப் பிரதியெடுத்து பாதுகாக்கும் பணியைச் செய்துவருகிறது.
1996-ம் ஆண்டு முதல் புருஸ்டர் இப்பணியைச் செய்து வருகிறார். டிஜிட்டல் தரவுகளைப் பாதுகாப்பது என்பது பெரும் சவாலான விஷயம். இன்று உருவாகும் மென்பொருள் நாளை எல்லோரும் அணுகும் வடிவத்தில் கிடைக்குமா என்பதே சந்தேகமே. இப்போது டிஜிட்டல் வடிவில் தகவல்களையும் தளங்களையும் பாதுகாத்து வைப்பதில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த முயற்சியின் முன்னோடி புருஸ்டர் கால்.
வலையின் அறிமுகத்துக்குப் பிறகு இணையம் வளரத் தொடங்கிய காலத்தில் பலரும் புதிய தளங்களையும் சேவைகளையும் உருவாக்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனால், இந்தத் தளங்களும் சேவைகளும் பாதுகாக்கப்படுகின்றனவா என யாரும் கவனம் செலுத்தவில்லை. இது தேவை என்றுகூட நினைக்கவில்லை.
1994-ல் நூற்றுக்கணக்கில் இருந்த இணையதளங்களின் எண்ணிக்கை 1995-ல் ஆயிரக்கணக்காக மாறியது. பிறகு லட்சங்களாகவும் கோடிகளாகவும் மாறியது. புதிய இணையதளங்கள் உருவாக்கப்பட்ட வேளையில், பழைய தளங்கள் கைவிடப்பட்டன. இந்தத் தளங்களின் சுவடுகள் நமக்குக் கிடைக்காமலே போயிருக்கும். ஆனால், அது நிகழாமல் காப்பாற்றியதே புருஸ்டரின் சாதனை.
அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகப் பட்டதாரியான புருஸ்டர், 1990-களின் தொடக்கத்தில் தன் நண்பர் கில்லியட்டுடன் இணைந்து, வயஸ் (வைடு ஏரியா இன்பர்மேஷன் சர்வர்) எனும் தகவல் கண்டெடுத்தல் சேவையை உருவாக்கினார். இணையத்தில் தகவல் கோப்புகளைத் தேடும் இந்தச் சேவை, பின்னாளில் அறிமுகமான தேடு இயந்திரங்களுக்கான முன்னோடி. இந்தச் சேவையை 1995-ல் ஏ.ஓ.எல். நிறுவனத்துக்கு விற்று லட்சாதிபதியானார்.
அடுத்த ஆண்டு இருவரும் சேர்ந்து அலெக்சா இண்டெர்நெட் நிறுவனத்தை உருவாக்கினர். அப்போது வேகமாக வளர்ந்துகொண்டிருந்த இணையத்தையும், அதில் அங்கம் வகிக்கும் இணையதளங்களின் செல்வாக்கையும் மதிப்பிடும் சேவையாக அலெக்சா அறிமுகமானது. அந்தக் காலத்தில் அலெக்சா என்பது இணையத்தின் அளவுகோலாகவே இருந்தது.
புருஷ்டர் அலெக்சாவை மட்டும் உருவாக்கவில்லை. அதோடு ‘இண்டர்நெட் ஆர்கேவ்’ எனும் இரட்டை நிறுவனத்தையும் உருவாக்கினார். முன்னது, லாப நோக்கிலானது. இரண்டாவது லாப நோக்கில்லாதது. இரண்டாம் நிறுவனம் அவரது லட்சியத்திட்டம். அதை நடத்த நிதி ஆதார தேவையாகவே முதல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு:
narasimhan@gmail.com