

ஓடும் ரயிலில் டிக்கெட் பரிசோதிப்பவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? மெக்கானிக்கலாக வேலை பார்ப்பார்கள், கலை உணர்ச்சியற்றவர்களாக இருப்பார்கள் என்றெல்லாம் தவறாக நினைத்திருந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்திய ரயில்வேயின் நாக்பூர் டிவிஷனில் தலைமைப் பயணச் சீட்டுப் பரிசோதகராக இருப்பவர் பிஜய் பிஸ்வால். இவரது ஓவியங்களை ஒருமுறை பார்த்தால் போதும் நீங்கள் பேச்சிழந்து போவீர்கள்.
ஏதோ ஒளிப்படத்தை ஃபோட்டோ ஷாப்பில் வைத்து ஒர்க் பண்ணியிருப்பாரோ எனச் சந்தேகம் கொள்வீர்கள். அந்த அளவுக்கு தத்ரூபமான ஓவியங்களைப் படைத்துள்ளார் இவர். சுமார் 25 வருடங்களாக ஓவியம் வரையும் இவருக்கு அக்ரிலிக் பெயிண்டும், வாட்டர் கலரும் மிகப் பிடித்தமானவை. ’
சுமார் நான்கு வயதில் கரித் துண்டைக் கொண்டு சுவரில் வரையத் தொடங்கிய இவர், தன் முதல் வாட்டர் கலர் ஓவியத்தை டீன் ஏஜ் முடியும் தறுவாயில் வரைந்துள்ளார். உலக அளவில் புகழ்பெற்றபோதும் ரயில்வே வேலையை விடாமல் இருக்கிறார். அந்த வேலையால்தான் ஊர் ஊராகச் சுற்ற முடிகிறது. அங்கேதான் என் கலையும் பிறக்கிறது எனப் பெருமையாகச் சொல்கிறார் பிஸ்வால்.