

கனி
காதலிக்கும் காலத்தை வசந்த காலமாக நினைக்கும் பெரும்பாலான காதலர்கள், அதற்குப் பிறகான கல்யாண காலத்தைப் பல காரணங்களால் போர்க்காலமாக மாற்றிவிடுகிறார்கள். காதல் கல்யாணத்துக்குப் பிறகான வாழ்க்கையில், தம்பதிகள் எதிர் கொள்ளும் சவால்களை நகைச் சுவையாகப் பேசியிருந்தது 2017-ம் ஆண்டில் வெளியான ‘கல்யாணம் – கன்டிஷன்ஸ் அப்ளை’ வலைத் தொடர்.
ஜெரால்ட் இயக்கத்தில், சின்னத் திரையின் பிரபல காதல் ஜோடியான ‘மிர்ச்சி’ செந்தில், ஸ்ரீஜா இருவரும் இத்தொடரில் நடித்திருந்தனர். இத்தொடர் இணைய ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. தற்போது, இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் ‘கல்யாணம் – கன்டிஷன்ஸ் அப்ளை 2.0’ வெளியாகியிருக்கிறது. ஜஸ்வினி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்த இரண்டாவது சீசனில், ‘மிர்ச்சி’ செந்தில், ஸ்ரீஜா ஜோடி தங்கள் கலகலப்பான நகைச்சுவையால் அசத்தியிருக்கின்றனர். கல்யாண வாழ்க்கையில், மனம்புரிந்த வர்கள் எதிர்கொள்ளும் சுவாரசியமான பிரச்சினைகளை இத்தொடர் ஜாலியான நகைச்சுவையுடன் பதிவுசெய்துள்ளது.
கல்யாணத்துக்குப்பிறகு, காதல் தம்பதியிடம் பெரும்பாலும் என்னென்ன காரணங்களுக்காகச் சண்டைகள் ஏற்படுகின்றன, காரணமே இல்லை என்றாலும் மோதல்கள் ஏன் என்பதை யதார்த்தமாகப் பேசியிருக்கிறது இத்தொடர். தேனிலவுக்குச் செல்லும் திட்டம் தோல்வியடைவது, அடுக்குமாடிக் குடியிருப்பில் நடக்கும் சிறந்த தம்பதிப் போட்டியில் வென்றே தீர வேண்டிய கட்டாயம், சாப்பாட்டு சண்டை சாலையில் முடிவது, ஆன்லைன் ஷாப்பிங்கின் அட்டகாசங்கள், வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும் பாஸ், ஸ்மார்ட்போனால் கெடும் அமைதி என ஆறு எபிஸோட்களுடன் இரண்டாவது சீசன் வெளியாகியிருக்கிறது. காதல் கல்யாண வாழ்க்கையின் ஜாலியான கன்டிஷன்ஸை தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் இத்தொடரைப் பார்க்கலாம்.
தொடரைப் பார்க்க: