

வா.ரவிக்குமார்
தாய்லாந்தில் நடந்த ஓபன் பாடிபில்டிங் போட்டியில் தங்கப் பதக்தத்தையும் ஆசிய பாடிபில்டிங் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று திரும்பியிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார். சர்வதேச அளவில் 15 பேர் பங்கேற்ற இப்போட்டியில், இந்தியாவின் சார்பாக களமிறங்கிய சந்தோஷ் குமார் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் ஒருசேர பெருமை தேடிக்கொடுத்திருக்கிறார்.
சென்னையின் பரபரப்பான திருவல்லிக்கேணியில் ஒண்டுக்குடித்தன வீடொன்றில் வசிக்கும் சந்தோஷுக்கு 14 வயதிலிருந்து பாடிபில்டிங்கின் மீது தீராக் காதல். ஆரம்பப் பயிற்சிகளை வலுதூக்கும் வீரரான பாபுவிடம் கற்றுக் கொண்ட சந்தோஷ், பள்ளி இறுதிவரை மட்டுமே படித்தவர். அதன்பின் கைத்தொழிலாகத் தண்ணீர், கழிவுநீர் குழாய்களைப் பராமரிக்கும் பிளம்பிங் வேலையைக் கற்றுக்கொண்டார்.
அந்தத் தொழிலை இப்போதும் செய்கிறார்.
அத்துடன் சென்னை, திருவள்ளூர் என எங்கே போட்டிகள் நடந்தாலும் ஆஜராகிவிடுகிறார். ‘மிஸ்டர் சென்னை’ போட்டிகளில் 4, 5-வது இடத்துக்கு வந்ததன் அடிப்படையில் கடந்த 2004-ல் மயிலாப்பூர் கிளப்பில் இருக்கும் ஜிம்மில் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கிறார்.
உறுப்பினர்கள் கொடுத்த உற்சாகம்
“என்னுடைய பாடிபில்டிங் திறமை வெளியே தெரிவதற்கும் போட்டிகளில் பங்கேற்றதற்கும் மயிலாப்பூர் கிளப்பில் உள்ள ஜிம் உறுப்பினர்களின் பங்கு மகத்தானது. ஜிம்முக்கு வந்தவர்களில் பிரபாகர் தனிப்பட்ட முறையில் ஸ்பான்சர்களைப் பிடித்து சேர்த்து 2009-ல் ‘மிஸ்டர் சென்னை’ போட்டியில் பங்கெடுக்கவைத்தார். அதில் மூன்றாம் இடத்தைப் பிடித்தேன்” என்கிறார் சந்தோஷ்.
மகனால் கிடைத்த வெற்றி
கடந்த ஆண்டு சந்தோஷிடம் அவருடைய மகன் இவ்வளவு
பேருக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களே.. நீங்கள் ஏன் எதிலும் முதலிடத்துக்கு வரவில்லை என்று கேட்ட கேள்வி மீண்டும் சந்தோஷைப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தூண்டியிருக்கிறது.
“காஞ்சிபுரத்தில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்தேன். பெங்களூருவில் சவுத் இந்தியா அசோசியேஷன் நடத்திய போட்டியில் மாஸ்டர்ஸ் ஏஜ் கேட்டகிரியில் ஜெயித்தேன். இந்த வெற்றியின் மூலம் தாய்லாந்தில் நடந்த சர்வதேச பாடிபில்டிங் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
மயிலாப்பூர் கிளப், உறுப்பினர்கள் ரூ.50 ஆயிரம் நிதிதிரட்டி என்னை தாய்லாந்துக்கு அனுப்பிவைத்தார்கள். அந்தப் போட்டியில் தசைத்திரட்சியின் அமைப்பு சிறந்ததாக உள்ளது என்ற அடிப்படையில் எனக்கு விருதைக் கொடுத்திருக்கிறார்கள்” எனும் சந்தோஷ், “செயற்கையாக மருந்துகளைப் பயன்படுத்தி பாடிபில்டிங் செய்வது பின் விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரிக்கிறார்.
பயிற்சிக்கேற்ற புரதத் தேவை
“கடுமையான உடற்பயிற்சி செய்வதற்கேற்ற உணவை உட்கொள்ள வேண்டும். அதிலும் கார்போஹைட்ரேட் இருக்கக் கூடாது. புரோட்டின் சப்ளிமென்ட்டுக்கு மட்டும் ஒரு நாளைக்கு 500 ரூபாய்வரை செலவு ஆகும். குழந்தைகள், அவர்களின் படிப்பு என்று கைக்கும் வயிற்றுக்குமே எனக்குச் சரியாக இருக்கிறது. எங்களைப் போன்றவர்களை அரசு ஆதரித்தால்தான் தொடர்ந்து போட்டிகளில் பங்கெடுக்க முடியும். ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி மூலம் நிரந்தரமான வேலைவாய்ப்பு கிடைத்தால் பாடிபில்டிங்கில் திறமையாளர்கள் பலரை உருவாக்க முடியும்” என்கிறார் தன்னைவிட வயது குறைந்தவர்களுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கும் 44 வயதான சந்தோஷ்.