

சைபர்சிம்மன்
இணையம் மூலம் வணிகத்தை அமேசான் அறிமுகம் செய்த அதே ஆண்டு இணையம் மூலம் ஏலத்தில் காலடி எடுத்துவைத்தது ‘இபே’ தளம். இணையம் என்பது வெறும் தகவல் அற்புதமல்ல, அது தொடர்புகொள்வதற்கும், நடைமுறை வாழ்க்கைக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் சேவைகளை பெறுவதற்கான இடமும்தான் என்பதை உணர்த்தியது ஆரம்ப கால முன்னோடியான ‘இபே’.
ஏலம் நடத்துவதில் சிறிதும் பெரிதுமாக நிறுவனங்கள் கோலோச்சிக்கொண்டிருந்தாலும், இணையம் மூலம் ஏலம் நடத்தலாம் என்பது யாருக்கும் தோன்றவில்லை. ‘இபே’ நிறுவனரான பியரி ஒமிட்யாருக்கு இந்த எண்ணம் தோன்றியது. ஆனால், அவரும்கூடத் திட்டமிட்டு ஏல தளத்தைத் தொடங்கவில்லை. ஈரானிய அமெரிக்கரான ஒமிட்யாருக்கு சிறு வயதிலேயே கணினி நிரல்களில் ஆர்வம் இருந்தது. கணினி அறிவியலில் பட்டம் பெற்ற பிறகு ஆப்பிளின் துணை நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். 1990-களின் தொடக்கத்தில் மென்பொருள் உருவாக்கத்துக்கான ‘இஷாப்’ எனும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். பின்னர் இந்நிறுவனம் மைக்ரோசாப்ட் கைக்குப் போனது.
ஒமிட்யார் ஜெனரல் மேஜிக் எனும் நிறுவனத்தில் வேலை பார்த்தபடி, பகுதி நேரமாக இணையதளங்களை உருவாக்கிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது பமீலா வெஸ்லி எனும் பெண்ணை அவர் காதலித்துக்கொண்டிருந்தார். பமீலாவுக்கு குறிப்பிட்ட டிஸ்பென்சர்களைச் சேகரிக்கும் பழக்கம் இருந்தது. இத்தகைய பொருட்களை வைத்திருந்தவர்களை எளிதாகத் தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் அலுத்துக்கொண்டார்.
பமீலாவின் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தனது சொந்த இணையத்தில் பொருட்களை வாங்கி விற்பதற்கான வசதியை ‘ஆக்ஷன் வெப்’ எனும் பெயரில் ஏற்படுத்தினார். அவர் சற்றும் எதிர்பாராத வகையில் இந்த வசதியைப் பயன்படுத்திப் பலரும் தங்களுக்குள் பொருட்களை வாங்கி விற்கத் தொடங்கினர்.
அதன்பின், ‘இபே’ எனும் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அந்தத் தளம் எதிர்பாராத வேகத்தில் வளர்ச்சி அடைந்தது. இணையவாசிகள் தங்களிடமிருந்த வேண்டாத பொருட்கள் தொடங்கிப் பலவற்றையும் ‘இபே’ மூலம் விற்றனர். தொடக்கத்தில் ‘இபே’ வெறும் வாங்கி விற்கும் தளமாகவே இருந்தது. ஒருவர் பட்டியலிடும் பொருளை மற்றவர்கள் விலை கேட்டு வாங்கும் வகையில் அமைந்திருந்தது. அதிக விலை கேட்டவருக்குப் பொருள் கிடைத்தது.
நாளடைவில், ஆயிரக்கணக்கானோர் இந்த சேவையைப் பயன்படுத்தவே தளத்தைப் பராமரிக்கும் செலவை ஈடுகட்ட, பொருட்களைப் பட்டியலிடச் சிறிதளவு கட்டணம், விற்பனைத் தொகையில் ஒரு சிறு தொகையைக் கட்டணமாக ஒமிட்யார் வசூலிக்கத் தொடங்கினார். இது சொற்பத் தொகையாக இருந்தாலும் வருவாய் கொட்டியது.
அடுத்த சில ஆண்டுகளில் ‘இபே’ இணையத்தின் வெற்றிகரமான தளங்களில் ஒன்றானது.
இணையம் மூலம் ஏல முறையில் எந்தப் பொருளையும் வாங்கவும் விற்கவும் வழிசெய்தது. குறிப்பாக, சாமானியர்கள் எளிதாக ஏலத்தில் பங்கேற்க வழி செய்தது. அதோடு, ‘இபே’வில் பொருட்களை விற்பதன் மூலமே பலர் வருமானம் பார்த்தனர். ‘இபே’ ஏலத்தில் ஈடுபடுபவர்கள் தனி இணைய சமூகமாக உருவாகினர்.
(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: narasimhan@gmail.com