

சு. அருண் பிரசாத்
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் அடையாளங்களுள் ஒன்று புகழ்பெற்ற ‘நியூ யார்க்கர்’ இதழ். கலை, இலக்கியம், அரசியல், விமர்சனம் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றிய செறிவான கட்டுரைகளை வெளியிடும் நியூ யார்க்கரை முன்மாதிரியாகக் கொண்டு ‘மெட்ராஸுக்கான இதழ்’ என்ற அடைமொழியுடன் சென்னையின் தனித்த குரலாக இதழ் ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகியிருக்கிறது. அது அசைடு (Aside).
கேரளத்தின் எர்ணாகுளத்தில் 1934-ல் பிறந்த ஆப்ரஹாம் எராலி, சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் வரலாறு படித்தார். 1971-ல் அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த எராலி, ஒன்பது வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார். இந்நூல்கள் இந்தியாவைவிட வெளிநாட்டில் அதிகம் கவனம் பெற்றிருக்கின்றன.
இந்தியாவின் முதல் இதழ்
பேராசிரியர் பணி சலித்துப் போகவே, அதை ராஜினாமா செய்துவிட்டு ‘அசைடு’ இதழை 1977 நவம்பரில் தொடங்கி அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இந்தியாவில் ஒரு நகரத்தை மையப்படுத்திய முதல் இதழாக அசைடு விளங்கியது. மேல்தட்டு மக்களுக்கான இதழாகவும், இலக்கிய இதழ் பாணியிலும் வெளியான அசைடு, ஆறு மாதங்கள் மட்டுமே நீடித்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்கப்பட்டது. ஆனால், இருபது ஆண்டுகள் நீடித்து ஆச்சரியப்படுத்தியது.
அக்காலகட்டத்தில் அசைடு இதழில் தீவிரமான படைப்புகள் வெளியாயின. சென்னை மக்கள், மொழி, அதற்கே உரிய பல்வேறு தனித்தன்மைகளை வேறு எந்த இதழைவிடவும் ‘அசைடு’ விரிவாகப் பதிவுசெய்தது.
எட்டப்பட்ட இலக்கு
சந்தை அழுத்தத்தால் 1986-ல் மாதம் இருமுறை இதழாக ‘அசைடு’ மாறியது. செய்தி இதழாக அது மாறியிருந்தாலும், மெட்ராஸ் என்னும் நகரை அதன் கடந்த காலம், நிகழ்காலத்தோடு ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தை ‘அசைடு’ ஏற்கெனவே எட்டியிருந்தது.
தொண்ணூறுகளின் மத்தியில், தென்னிந்தியா முழுவதற்குமான இதழொன்றைக் கொண்டுவர வேண்டுமென்று எராலி நினைத்தார். அதற்காகத் தனியாக அச்சகம் ஒன்றை நிறுவவும் விரும்பினார். ஆனால், அவை எதுவும் சரியாகக் கூடிவராததாலும் பொருளாதாரக் காரணங்களாலும் 1997-ல் ‘அசைடு‘ இதழ் நின்றுபோனது.
தியடோர் பாஸ்கரன், ராண்டர் கய், எஸ். முத்தையா, ஹாரி மில்லர், ஆர். பார்த்தசாரதி, சதானந்த் மேனன், ரதீந்திரநாத் ராய், மித்ரன் தேவநேசன், எஸ்.ஜி. வாசுதேவ், அஜித் நைனன் ஆகியோர் ‘அசைடி’ன் தொடர் பங்களிப்பாளர்களாக இருந்துள்ளனர்.
‘அசைடு’-ன் பணியை ‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’, ‘மயிலாப்பூர் டைம்ஸ்’ போன்ற சென்னை நகரை மையப்படுத்திய இதழ்கள் இன்றும் தொடர்ந்து செய்துகொண்டுள்ளன.