

மிது
சென்னை நகரில் தினமும் பேருந்து அல்லது ரயில் பயணம் செல்பவரா? அப்படியானால் பயணத்தில் எல்லோரும் குனிந்த தலையாக ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்று எல்லோருமே பயணங்களில் வயது வித்தியாசமின்றி கைபேசியோடு பிஸியாகிவிடுகிறோம்.
பயணத்தில் ஒரு பொருளோடு லயித்து வேறொரு உலகத்துக்குச் செல்லும்போது இயல்பாகவே நம் ஞாபகத்துக்கும் பங்கம் ஏற்பட்டுவிடுகிறது. கைப்பேசியில் மூழ்கிவிட்டு, திடீரென ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதே மறந்துவிடுகிறது அல்லவா? அதனால் என்ன? கூகுள் ‘லொகேஷன் மேப்’பைப் பார்த்துவிட்டால் போதும் என்று நீங்கள் சொல்வீர்களானால், எப்போதுதான் மொபைலிலிருந்து விடுபடுவீர்கள்?
நம் அருகில் அமர்ந்து பயணிக்கும் புதியவர்கள், ‘அடுத்த ஸ்டாப் என்ன?’ என்று கேட்டுவிட்டால் திடீரென என்ன சொல்வதென்றே தெரியாமல் தடுமாறிவிடுகிறோம் அல்லவா? கைபேசி மட்டுமே உலகம் அல்ல.
பயணத்தில் ஏற்படுகிற ஒவ்வொரு நிகழ்வும் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் எதிரொலிக்கக்கூடியதுதான்.
மொபைலைத் தாண்டிப் பயணங்களில் உள்ள சக மனிதர்களையும், வரும் வழியில் நடக்கும் நிகழ்வுகளையும் கொஞ்சம் கவனியுங்களேன். கவனத்தைத் திசை திருப்பிக் கட்டளைகளுக்குப் பழக்கப்பட்ட ரோபோ மாதிரிப் பயணிப்பதால் என்ன பயன்?