செய்திப்பிரிவு

Published : 30 Jul 2019 10:51 am

Updated : : 30 Jul 2019 10:51 am

 

வலை 3.0: அமேசான் எனும் புத்தகக் கடல்!

history-of-amazon-books

ஒரு நாள் நீளமான கார் பயணத்தில் இருந்தார் பெசோஸ். அப்போது தனது வர்த்தக எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கான நினைவில் மூழ்கியிருந்தார். இணையத்தில் புத்தக விற்பனை செய்வது எனத் தீர்மானித்தவர், 1994-ல், தான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சியாட்டில் நகரில் குடியேற முடிவு செய்தார். பெசோஸ் பணியாற்றிய நிறுவனத் தலைவர், அவரது முடிவை மாற்ற எவ்வளவோ முயன்றார். ஆனால், பெசோஸ் அதில் உறுதியாக இருந்தார்.

அதற்குக் காரணம், அவருடைய மனைவி பெசோஸுக்கு ஆதரவாக இருந்ததுதான். நல்ல வேலையை விட்டுவிட்டு, வெற்றி நிச்சயமற்ற சொந்தத் தொழிலைத் தொடங்க இருக்கிறேன் என அவர் மனைவியிடம் கூறினார். மனைவியோ கவலைப்படமால் இறங்குங்கள் எனக் கூறி, தன் பங்குக்குப் பணமும் கொடுத்தார்.

இந்த உற்சாகத்தோடு பெசோஸ், சியாட்டில் நகரில் தனது வீட்டின் கார் காரேஜில் நிறுவனத்தைத் தொடங்கினார். அங்கிருந்துதான் அவருடைய ஆன்லைன் புத்தகக் கடை செயல்படத் தொடங்கியது. முதலில் தனது நிறுவனத்துக்கு ‘கடாப்ரா’ (Cadabra) என்று பெயர் சூட்டினார். எனினும், ஓர் உரையாடலில் அவருடைய வழக்கறிஞர் அந்தப் பெயரைத் தப்பாக உச்சரிக்கவே, வேறு பெயரை மாற்ற நினைத்தார் பெசோஸ். பிரவுஸ்.காம், புக்மால்.காம் எனப் பல பெயர்களைப் பரிசீலித்து இறுதியில், அகராதியிலிருந்து ‘அமேசான்’ எனும் பெயரைத் தேர்வு செய்தார்.

பெசோஸ் நிறுவனம் அவருடைய வீட்டிலிருந்தே செயல்பட்டது. நிறுவன ஊழியர்கள் கூட்டத்தை அருகே இருந்த புத்தகக் கடையில் நடத்தினர். புதிய வர்த்தகம் என்பதால், புத்தகங்களைக்கூடச் சிக்கனமாகவே ஆர்டர் செய்தனர். எல்லாம் தயாரான நிலையில், 1995 ஜூலையில் அமேசான் ஆன்லைன் புத்தகக் கடை விற்பனை தொடங்கியது. இணையம் மூலம் புத்தகம் வாங்குவது புதிய விஷயம் என்பதால், தெரிந்த 300 பேருக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. 

யாரேனும் அமேசான் தளத்துக்கு விஜயம் செய்தால், வீட்டில் மணி அடிக்குமாறும் ஏற்பாடு செய்திருந்தனர்.

அடுத்த சில மணி நேரத்தில், அமேசான் தளத்துக்கு வருகை தந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் வீட்டில் மணி இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. அதுவே அமேசான் வெற்றிகரமான தொடக்கத்துக்கு வழிவகுத்தது. அடுத்துவந்த மாதங்களில், அமேசான் இணையதளம் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் புத்தகங்களை விற்பனைசெய்தது.

விரும்பிய புத்தகத்தை இணையதளத்தில் பார்த்துத் தேர்வு செய்வது எளிதாக இருந்தது. அந்தப் புத்தகம், அஞ்சலில் வீடு தேடி வந்தது. இதுவே. அமேசான்.காமின் வெற்றியாக, இ-காமர்ஸின் வெற்றியாக அமைந்தது.

“முதல் சில நாட்களிலேயே, இது மிகப் பெரிதாக இருக்கப்போகிறது எனத் தெரிந்துவிட்டது. நாங்கள் கனவு கண்டதைவிட, மிகப் பெரிய விஷயத்தில் நுழைந்திருக்கிறோம் என்றும் புரிந்தது ” என்று அமேசான் ஆரம்ப வெற்றி பற்றி பெசோஸ் குறிப்பிடுகிறார். ஆனால், இது வெறும் தொடக்கம்தான். இ-காமர்ஸில் அமேசான் பல புதுமைகளைப் புகுத்தியது.

அமேசானின் வெற்றி இ-காமர்ஸ் பற்றிப் பரபரப்பாகப் பேசவைத்தது. எதிர்பார்த்தது போலவே இந்தப் பிரிவில் போட்டித் தளங்கள் முளைத்தன. முக்கியமாகப் புத்தக விற்பனையில் முன்னணியில் இருந்த ‘பார்னர்ஸ் & நோபல்’ நிறுவனம் இ-காமர்ஸில் நுழையத் தீர்மானித்தது. பார்னர்ஸ் & நோபல் அமெரிக்கா முழுவதும் புத்தகக் கடைகளை நடத்திவந்த மெகா நிறுவனம். சிறிய புத்தகக் கடைகளை எல்லாம் மூட வைக்கும் அளவுக்கு அதன் வளர்ச்சி இருந்தது.

(வலை வீசுவோம்)
​​​​​​​- சைபர்சிம்மன்
டர்புக்கு: enarasimhan@gmail.com

அமேசான் பெசோஸ்இணையத்தில் புத்தக விற்பனைபுத்தக விற்பனை தளம்CadabraAmazon boosAmazon bezosஇ காமர்ஸ் புத்தகம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author