வைரல் உலா: சின்ன சின்ன ஆசை... வயதாகக் கொஞ்சம் ஆசை!

வைரல் உலா: சின்ன சின்ன ஆசை... வயதாகக் கொஞ்சம் ஆசை!
Updated on
1 min read

குத்துமதிப்பாக 40 வயதைத் தொட்டவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தங்களது ஒளிப்படங்களை எளிதில் மாற்ற மாட்டார்கள். தங்களுக்கு வயது ஆகிவிட்டதைக் காட்டக் கூடாது என்பதற்காகச் சிலபல ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த ஒளிப்படங்களையே பயன்படுத்துவார்கள். ஆனால், இன்றோ நிலைமை தலைகீழ்.

பதின்பருவத்தில் உள்ள இளைஞர்கள்கூடத் தாங்கள் வயதானால் எப்படி இருப்போம் என்பதைக் காட்டும் ஒளிப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கிவிட்டார்கள். அதற்குப் பாதை அமைத்துக் கொடுத்தது ‘ஃபேஸ் செயலி’.  கடந்த வாரம் ஃபேஸ்புக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் எம்.எஸ். டோனி, விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்களின் வயதான தோற்றத்துடன் கூடிய ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாயின.

இதைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா நம் இளைஞர்கள்.   உடனே ‘ஃபேஸ் செயலி’யைத் தங்களுடைய மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களுடைய வயதான ஒளிப்படங்களைப் பகிர ஆரம்பித்துவிட்டார்கள். இதேபோல தங்களுக்குப் பிடித்த சகலமானவர்களையும் ‘ஃபேஸ் செயலி’யில் நுழைத்து, அதை மீம்களாக்கி உலவவிட்டுவந்தார்கள். கடந்த வாரம் சமூக ஊடகங்களை ‘ஃபேஸ் செயலி’தான் ஆக்கிரமித்திருந்தது.

‘ஃபேஸ் செயலி’யில் வயதான தோற்றம் மட்டுமல்லாமல், வயது குறைந்த தோற்றத்தையும் காட்டுவதால், அதைப் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்தது எகிறியது. கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 15 கோடிப் பேர் இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து எண்ணிக்கையை எகிறடித்திருக்கிறார்கள். பதிவிறக்கத் தரவரிசையில்  ‘ஃபேஸ் செயலி’யே முதலிடத்தில் இருந்தது. இதில் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்தவர்களின் தகவல்களை அந்நிறுவனம் திருடிவிட்டதாகத் தனிக் கதையும் ஓடிக்கொண்டிருக்கிறது.

- மிது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in