வலை 3.0: ஓர் இளைஞனின் மனமாற்றம்!

வலை 3.0: ஓர் இளைஞனின் மனமாற்றம்!
Updated on
1 min read

சைபர்சிம்மன் 

வலையின் வருகையால், இணையம் வெகு வேகமாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. 1992-ம் ஆண்டில் வலையில் மொத்தமே 10 இணையதளங்கள்தாம் இருந்தன. 1993-ல் இந்த எண்ணிக்கை 130 ஆகவும், 1994-ல் இது 2,738 ஆகவும் உயர்ந்தது. இவற்றில் யாஹூ, மான்ஸ்டர்.காம் போன்ற முன்னோடி இணையதளங்களும் அடக்கம். அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையும் வலையில் குடியேறிருந்தது.

ஆக, இணையம் அசாதாரணமாக வளர்ந்துகொண்டிருந்தது. இணையதளங்கள் பெருகிக்கொண்டிருந்தன. பலரும் இணையத்தை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியிருந்தனர். இவர்களில் 30 வயதான ஜெப் பெசோஸும் ஒருவர். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் படித்த பெசோஸ், முதலீட்டு நிறுவனமான ‘டி.இ.ஷா’ என்ற நிதி நிறுவனத்தில் பணியாற்றினார். தொழில்முறையாக அமெரிக்க பங்குச் சந்தையைக் கவனிப்பதுதான் அவருடைய வேலை. என்றாலும், அப்போது பிரபலமாகிக்கொண்டிருந்த இணையமும் அவர் கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, இணையத்தின் அங்கமான வைய விரிவு வலை, மாதம் 2,300 மடங்கு வளர்ச்சி அடைந்துகொண்டிருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுவதைப் பார்த்து அசந்துபோனார். வலையின் இந்த அதிவேக வளர்ச்சி பெசோஸை யோசிக்கவைத்தது. இந்த அளவுக்கு வேகமாக வளரும் ஒரு மேடையில் பொருட்களை விற்பனை செய்யலாமே என அவர் யோசித்தார். அப்போதுதான் அமெரிக்க உச்ச நீதிமன்றம், விற்பனை மையங்களைக் கொண்டிராத தபால் வாயிலான விற்பனை நிலையங்கள் விற்பனை வரி செலுத்த வேண்டியதில்லை என்று தீர்ப்பு அளித்திருந்ததும் சாதகமாக அமைந்தது.

வலை வாயிலாக விற்கக்கூடிய பொருட்களுக்கு என்று பெசோஸ் நீளமான பட்டியலைத் தயாரித்தார். அவற்றிலிருந்து இறுதியாகப் புத்தகங்களை விற்பனை செய்வது எனத் தீர்மானித்தார். லட்சக்கணக்கில் புத்தகங்கள் அச்சில் இருப்பதால் அவற்றை விற்கலாம் என நினைத்தார். இந்த எண்ணத்தைத் தன் மனைவி, குடும்பத்தினர், நண்பர்களுடன் விவாதித்தார். (பெசோஸுக்குத் திருமணமாகச் சில மாதங்களே ஆகியிருந்த காலகட்டம் அது).
இந்த யோசனைகளுக்கு மத்தியில் ஒரு நாள் நீண்ட கார் பயணத்தை அவர் மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார்.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in