Published : 16 Jul 2019 10:50 AM
Last Updated : 16 Jul 2019 10:50 AM

வலை 3.0: இ-காமர்ஸ் பிறந்தது!

சைபர்சிம்மன் 

வலையின் வளர்ச்சியில் 1995 முக்கிய ஆண்டாக மின்னுகிறது. இணையத்தின் எதிர்கால பாதையைத் தீர்மானித்த, இன்றுவரை இணையத்தின் அடையாளமாகத் திகழும் மைல்கல் இணையதளங்கள் பல, இந்த ஆண்டில்தான் அறிமுகமாயின! இணையம் வாயிலாக பொருட்கள் வாங்குவதை குறிக்கும் இ-காமர்ஸுக்கு வித்திட்ட அமேசான், இணைய ஏலத்தை அறிமுகம் செய்த இ-பே, இணையத் தேடலை எளிமையாக்கிய அல்டாவிஸ்டா, பொருத்தம் பார்க்க உதவும் மேட்ச்.காம், இணைய வரி விளம்பரங்களின் தொடக்கப்புள்ளியான கிரைக்லிஸ்ட் போன்ற தளங்கள் 1995-ம் ஆண்டில்தான் உதயமாயின.

இவற்றோடு வலைவாசலான எம்.எஸ்.என்.டாம், மீடியா தளமான என்.ஒய்டைம்ஸ்.காம் ஆகிய தளங்களும் இந்த ஆண்டுதான் அறிமுகமாயின. அதேபோல இந்த ஆண்டுதான் இந்தியாவில், வி.எஸ்.என்.எல் மூலம் இணைய வசதி முதன் முறையாகப் பொதுமக்களுக்கு அறிமுகமானது. மேலும், இணையத்தில் இந்த ஆண்டுதான் பிரவுசர் யுத்தம் வெடித்ததையும் ஏற்கெனவே பார்த்தோம். இணையத்தின் அங்கமாக வலை அறிமுகமாகி, வேகமாக மக்கள் கவனத்தை ஈர்த்துவந்த நிலையில், இணையத்தின் ஆற்றலை உணர்த்தக்கூடிய சேவைகளாகவும், புதிய நுட்பமான இணையத்தை வெகுமக்களுக்கு நெருக்கமானதாக மாற்றக்கூடிய சேவைகளாகவும், இந்த இணையதளங்கள் எல்லாம் அமைந்தன.

இணையம் என்றால் என்ன என்று விளக்கும் முயற்சியில், இணையத்தில் என்ன எல்லாம் செய்யலாம் எனப் பட்டியலிடும்போது, முதலில் வந்து நிற்கும் பல முக்கிய விஷயங்களை இந்த சேவைகள்தான் அறிமுகம் செய்தன. இவற்றில், இ-காமர்ஸுக்கு வித்திட்ட அமேசானி வெற்றிக்கதை தனித்துவமானது.
இ-காமர்ஸ் என்பது இன்று சர்வசகஜமாகிவிட்டது. எங்கோ குக்கிராமத்தில் இருப்பவர்கூட, கையில் மொபைல் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கவோ விற்கவோ முடிகிறது.

ஆனால், 1990-களில் இந்த சேவை முற்றிலும் புதுமையாக இருந்ததோடு, இதெல்லாம் சாத்தியம்தானா என மலைக்கவும் வைத்தது. இத்தனைக்கும், இணையம் மூலம் பொருட்களை வாங்கும் வசதி, இணையத்துக்கு அந்நியமானது எனச் சொல்வதற்கில்லை.
1970-களிலேயே டெலிஷாப்பிங் அறிமுகமாகியிருந்தது. ஆன்லைன் ஷாப்பிங் எனச் சொல்லப்படக்கூடிய வசதியும் பின்னர் பிரிட்டனில் அறிமுகமானது. பிரான்சில், உருவான மினிடெல் வலைப்பின்னல் வாயிலாக, வீட்டில் இருந்தே பொருட்களை வாங்குவதும் சாத்தியமானது.

(வலை வீசுவோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: enarasimhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x