உறவுகள்: கண்ணை மறைக்கும் காதல்

உறவுகள்: கண்ணை மறைக்கும் காதல்
Updated on
3 min read

எனக்கு வயது 22. இரண்டு வருடங்களாக ஒருவரைக் காதலித்துவந்தேன். அவர் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது குடும்பத்தில் சொல்ல மறுத்தார். எங்கள் காதல் விவகாரம் என் பெற்றோருக்குத் தெரியவந்தது. அவர்கள் என்னைக் கண்டித்தார்கள். என் காதலர் என்னைப் பணத்துக்காகக் காதலித்து ஏமாற்றுவதாகக் கூறினார்கள். நான் அதை மறுத்து அவருடனான காதலைத் தொடர்ந்தேன். என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சொன்னேன். ஆனால் அவர் தொடர்ந்து மறுத்துவந்தார். காதலித்தபோது அவர் என்னிடம் ஏராளமான பணத்தையும், லேப்டாப், செயின் போன்ற விலையுர்ந்த பொருள்களையும் பெற்றுக்கொண்டார். ஒரு முறை நான் வீட்டை விட்டு வெளியேறினேன். அப்போதும் என்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டார்.

நான் பெற்றோரைப் பிரிந்து தனியாக ஆறு மாதங்கள் வாழ்ந்தேன். பின்னர் என் பெற்றோர் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் என்னால் அவரை மறக்க முடியவில்லை. அவரோ என்னை மிரட்டுகிறார். என்னால் என் பிரச்சினைகளை வீட்டில் சொல்லவும் முடியவில்லை. எனது குடும்பம் என் காதலரால் நிறைய அவமானங்களைச் சந்தித்துவிட்டது. நான் மேலும் அவர்களைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. இப்போது அவர் வேறு கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டார். நான் அவரது வாழ்வில் தலையிடக் கூடாது என்று மிரட்டுகிறார். எனது விலையுயர்ந்த பொருட்களையும் தர மறுக்கிறார். என் பெற்றோர் இவற்றை அறிந்தால் அவமானத்துக்கு ஆளாவார்களோ என்று பயந்து என் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்வதால் நரக வேதனையை அனுபவிக்கிறேன். நீங்களே சொல்லுங்கள், இப்போது நான் என்ன செய்வது?

என்னம்மா தோழி இப்படி ஒரு வம்பிலே மாட்டிக்கொண்டுவிட்டீர்களே! காதலர் கேட்டபோதெல்லாம் காமதேனுவைப் போல் நீங்கள் கொடுத்துக்கொண்டே இருந்தால் அவருக்கு இந்த உறவு பிடித்திருக்கும். ‘மாட்டேன்’ என்று முரண்டுபிடித்ததால் மிரட்ட வேண்டியதுதான் என்றெண்ணி பயமுறுத்துகிறார். நீங்களும் மிரண்டுபோயிருக்கிறீர்கள்! அப்படியானால் உங்களைப் பற்றிய அந்தரங்கச் செய்திகள் அவரிடம் இருக்கின்றன. அதைத்தான் துருப்புச் சீட்டாக வைத்து விளையாடுகிறார். மிரட்டலுக்குப் பயந்து பணம் கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒரு நாள் உங்கள் பெற்றோருக்குத் தெரிந்துவிடாதா? அந்த நாள் இப்போதே வரட்டும். அவர்களிடம் இந்த மிரட்டல் படலம் எப்படி ஆரம்பித்தது என்று சொல்லிவிடுங்கள்.

உங்களை ஆளாளுக்கு வசை பாடலாம்; ஏன் அடிக்கக்கூட செய்யலாம். அடித்துவிட்டு அணைக்கும் கைகளும் அவர்களுடையதுதான். அவர்களது பக்கபலத்தோடு உங்கள் முன்னாள் காதலரை எதிர்த்துப் போராட முடியும். உறவுகளில் லாப நஷ்டக் கணக்குப் பார்ப்பவரிடம் பாசமா கிடைக்கும்? வீட்டை விட்டு வெளியேறி நிராதரவாக நின்றபோதுகூட, அவர் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லையே! மண்குதிரையை நம்பி நட்டாற்றில் இறங்க முடியுமா? தரம் குறைந்தவர் என்று புரிந்தபின் வெட்டிவிட வேண்டியதுதான். பல சிவப்புக் கொடிகள் காட்டப்பட்டாலும், காதல் கண்ணை மறைத்துவிட்டது. காதலிக்கும்போது வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்; மீறிவிட்டால் பாதிப்பு பெண்களுக்குத்தான். பல ஆண்கள் தூசியைத் தட்டிவிடுவதுபோல, களங்கத்தைத் தட்டிவிட்டுக்கொண்டே போய்விடுகிறார்கள். உங்கள் குடும்பத்தார் உதவியை நாடுங்கள்.

நான் இன்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். என்னுடன் படிக்கும் ஒரு பெண்ணை இரண்டாம் ஆண்டில் சந்தித்தேன். அவள் மீது எனக்கு காதல் மலர்ந்தது. பழகிய ஒரு வாரத்தில் அவளிடம் என் காதலை வெளிப்படுத்தினேன். அவள் அன்றே தனது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்வேன் என்று முடிவாகச் சொல்லிவிட்டாள். அதன் பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாகவே பழகிவருகிறோம். நாங்கள் வேறு வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். அவளுடைய தாய்க்குக் காதல் திருமணம் பிடிக்காது. பெற்றோர் பேச்சை மீறி ஏதும் செய்ய மாட்டேன் என்கிறாள்.

அவள் மீதான காதலை வெறும் ஈர்ப்பு என்று என்னால் ஒதுக்கிட இயலவில்லை. நான் அவளோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். நான் வீட்டுக்கு ஒரே பையன். அவள் குடும்பத்தோடு ஒப்பிடும்போது எங்கள் குடும்பம் வசதி குறைவானது. என் பெற்றோர் அவளை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவள் வீட்டில் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் நிறையப் போராட வேண்டியிருக்கும். என் பெற்றோரை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அது என் சிறு வயது லட்சியம். முறைப்படி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்வதே என் முழு விருப்பம்.

அதற்கு முன் என் குடும்பத்தின் நிலையை உயர்த்தியாக வேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும். பின்பு அவளின் பெற்றோரிடம் சென்று முறைப்படி பெண் கேட்கத் தயாராக உள்ளேன். ஆனால், என் பெற்றோர் எனக்காக யாரிடமும் கெஞ்சக் கூடாது என்பதில் விழிப்புடன் உள்ளேன். அவள் எனக்குக் கிடைக்க நேர் வழியில் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக உள்ளேன். இதை அவளிடம் சொன்னால் அவளோ எனக்காக யாரும் கஷ்டப்பட வேண்டாம். நீ உன் வாழ்க்கையைப் பார் என்கிறாள். அவள் தனது முடிவில் தெளிவாக உள்ளாள், இது அவளிடம் எனக்குப் பிடித்த குணங்களில் ஒன்று.

அவள் பெற்றோர் சம்மதித்தால் என்னைக் கரம் பிடிப்பேன் என்று தெளிவாகக் கூறிவிட்டாள். அவள் கிடைக்கவில்லை என்ற பட்சத்தில் நாகரிகமாக ஒதுங்கிவிடுவதில் எனக்குப் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் அவளை நான் உண்மையாக விரும்புகிறேன். முயற்சி செய்யாமல் தோற்றால் காலம் முழுக்க அவளைத் தவறவிட்ட உணர்வு இருக்கும். நான் அவளைத் திருமணம் செய்துகொள்வதற்கான முயற்சியில் இறங்கலாமா?

வாழ்க்கையை பிராக்டிக்கலாக அணுகும் நண்பரே! தீர்மானம் எடுத்தபின்தான் என்னிடம் கேள்வி வந்திருக்கிறது! இருந்தாலும் உங்கள் சூழ்நிலையில் நடக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்வது உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் அணுகுமுறை கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. ஆனால், காதல் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது. அறிவாற்றலுக்கு அப்பாற்பட்டது.

இப்போது அந்தப் பெண் சம்மதம் கொடுக்கவில்லை; ஆனாலும் உங்களைக் காதலிக்கவில்லை என்று கூறவில்லை என்பதால், நீங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட முடிவு செய்துவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் அவரால் கட்டுப்படுத்த முடியாமல் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிடலாம். அதன்பின் அவரது பெற்றோரின் சம்மதத்தைப் பெறுவது என்பது பெரிய கேள்விக்குறி! முடியாது என்று பிடிவாதம் பிடித்தார்களென்றால், சம்மதம் வரும் வரை காத்திருக்கலாம். வரவேயில்லையென்றால்?

அவர்களுக்குத் தெரியாமல் மணம் செய்துகொள்ள நீங்கள் தயாராக இருக்கலாம்; அந்தப் பெண் கூட வருவாரா? அந்த நேரத்தில் உங்களுடைய இந்த லாஜிக்கெல்லாம் வேலை செய்யாது; ஏனெனில் அப்போது தீவிரமான காதல் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பீர்கள். ஒரேயடியாக ‘நெகட்டிவாக’ இருக்க நான் விரும்பவில்லை. நீங்கள் உங்கள் அந்தஸ்தில் அவர் குடும்பத்துக்குச் சரிசமமாக உயர்ந்த பின் பெண் கேட்டுப்போய், அவர்கள் ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி.

சாதியைக் காட்டி மறுத்துவிட்டால்? என்ன நடக்கும் என்று யாரும் ஆரூடம் கூற முடியாது. அதற்காக நீங்கள் முயற்சி செய்யாமல் விடுவதும் சரியல்ல. ஒத்துக்கொள்கிறேன். ஒன்று மட்டும் நிச்சயம். காதல் கதைகள் எங்கு ஆரம்பிக்கும், எப்படிமுடியும் என்பதை அந்த இறைவனால்கூட சொல்ல முடியாது! ‘ஆல் தெ பெஸ்ட்’ சொல்லிவிடுகிறேன். அந்தப் பெண்ணைப் பற்றி எவ்வளவு தெரியும் உங்களுக்கு? உணர்வைச் சற்றே ஒதுக்கி வைத்து, அறிவாற்றலால் உங்களுக்கு ஏற்ற ஜோடியா அவர் என்று அலசுங்கள்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in