கண்ணகியைத் தேடும் இளைஞர்கள்!

கண்ணகியைத் தேடும் இளைஞர்கள்!
Updated on
2 min read

டைம் மெஷினில் ஏறி, பண்டைய மதுரைக்குச் சென்றது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடக்கும் கண்ணகி வாசகர் வட்ட கூட்டம். கல்லூரி மாணவர்கள் பத்துப் பதினைந்து பேர் ஒன்றுகூடி, கண்ணகி வந்தபோது மதுரை எப்படியிருந்தது? அவள் மதுரையில் தங்கியிருந்த இடம் இப்போது எப்படியிருக்கிறது? என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

“சிலப்பதிகாரம் ஏற்படுத்திய பிரமிப்பும், கண்ணகி என்ற பாத்திரத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பும்தான் இந்த வாசகர் வட்டம் உருவாகக் காரணம்” என்கிறார் மாணவர் இனியன் எல்லாளன். சிலப்பதிகாரம் வெறும் கதையல்ல, அது சரித்திரம் என்பதைப் பறைசாற்றும் வகையில் மதுரையில் இப்போதும் தென்படும் தொல்லியல் எச்சங்களும் தங்கள் ஆராய்ச்சி எண்ணத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தன என்றும் கூறுகிறார் எல்லாளன்.

வாசகர் வட்ட மாணவர்கள் மாதத்தில் 3 நாட்களாவது சந்திக்கிறார்கள். கண்ணகியுடன் தொடர்புடைய இடங்களாகக் கருதப்படும், மதுரை கண்ணகி கோயில், சமணர்கள் கழுவேற்றப்பட்ட சாமநத்தம், சமணப் பள்ளிகள் இருந்த யானைமலை, கீழக்குயில்குடி என்று வெவ்வேறு இடங்களில் இந்தச் சந்திப்பை நடத்துகிறார்கள்.

தமிழகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகிதான் என்ற விஷயமும், கணவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட அரசனின் அரியணைக்கே சென்று துணிச்சலுடன் நீதி கேட்டவள் என்பதுமே கண்ணகி மீது தனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது என்று சொல்கிறார் ஆங்கில இலக்கிய மாணவி தெரசாள்.

காவிரிப்பூம்பட்டினம், கேரள வனப் பகுதியில் உள்ள பத்தினிதேவி கோயில் போன்ற கண்ணகியின் சுவடுகள் பட்ட இடங்களுக்கு இவர்கள் செல்கிறபோது, அந்த இடத்துக்கும் கண்ணகிக்கும் உள்ள தொடர்பை சீனியர்கள் சொல்வார்களாம். “அப்போது மனதில் நிறைய கேள்விகள் எழும். அதற்கான பதிலைத் தேடி அறிவதில் இருக்கிற சுவாரசியத்துக்கு ஈடு இணையே இல்லை. அதுதான் எங்களை இந்த வாசகர் கட்டத்தோடு பிணைத் திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்கிறார் தெரசாள்.

மதுரையில் சமணர்கள் சுமார் 800 பேர் கழுவேற்றப்பட்டதாக சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் குறிப்பு உள்ளது என்றும் அதே போல சைவம் பெரிதா, சமணம் பெரிதா என்று அனல், புனல் வாதங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகவும் சைவ இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன என்கிறார் இருதய ஜெரால்டு. இன்றைய சாமநத்தம்தான் அந்த இடம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். ‘சமணர் ரத்தம்’என்ற பெயர்தான் சாமநத்தம் என்று மருவிவிட்டது. இதற்கான ஆதாரங்கள் எதுவும் சமண இலக்கியங்களில் தென்படவில்லை. அவை அழிக்கப்பட்டுவிட்டனவா என்றும் தெரியவில்லை என்கிறார் அவர்.

சாமநத்தம் கிராமத்துக்கே போய் விசாரித்திருக்கிறார்கள் இவர்கள். அங்கே கழுவேற்றான்பொட்டல் என்று ஓரிடம் இருப்பதும், 2 தலைமுறைக்கு முன்பு வரையில் அங்கே வழிபாடுகள் நடந்திருந்ததும் அப்போது தெரியவந்திருக்கிறது. இப்போது அங்கே ஒரு சிறு நினைவுச்சின்னம் கூட இல்லை.

“நினைவுச் சின்னம் அமைக்க அரசு முன்வராவிட்டாலும்கூட, வட இந்தியாவில் வாழும் ஜைன மதத்தவர்களிடம் சொல்லிக் கல்வெட்டு அல்லது நினைவுத்தூண் எழுப்பச் செய்ய வேண்டும் என்று கோபி ஷங்கர், ஜான் மார்ஷல், கயல்விழி போன்ற சீனியர்கள் முயற்சி செய்துவருகிறார்கள்” என்றார் ஜெரால்டு.

“தமிழ் சமணத்தைப் பற்றியும், பௌத்தத்தைப் பற்றியும் படிக்க விரும்புபவர்கள் எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். எங்களுக்குத் தெரிந்த, ஆராய்ந்து கண்டுணர்ந்த அத்தனை விஷயங்களையும் இலவசமாக சொல்லித்தரத் தயாராகவே இருக்கிறோம். ஆர்வத்தோடு வந்தால் போதும்” என்கிறார்கள் பிரவீன்குமாரும், ஜார்ஜும்.

படங்கள்: ஆர்.அசோக்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in