

பெரும்பாலான தமிழ்ப் படங்களில் டாஸ்மாக் ஒரு காட்சியிலாவது இடம்பெறுகிறது. “நண்டு, சிண்டெல்லாம் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்கப்பா. ஸ்கூல் போற பையன் பேக்ல கூட சரக்கு பாட்டில் இருக்குது” என்று பெரியவர்கள் புலம்புகிறார்கள். ஆனால், பள்ளி மாணவர்களிடையே போதைப் பழக்கம் எப்படி அறிமுகமாகிறது? அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆய்வை நடத்தி முடித்திருக்கிறார்கள் எட்டு இளைஞர்கள்.
மதுரை பாத்திமா கல்லூரி மாணவிகள் எம்.சிவசங்கரி, பி.நந்தினி, மதுரைக் கல்லூரி மாணவர்கள் எஸ்.மணிகண்டன், எம்.அழகுமுருகன், அமெரிக்கன் கல்லூரி மாணவர் எம். யோகேஸ்வரன், கல்வியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர்தான் அந்த இளைஞர்கள்.
ஆய்வுக் களமாகக் கிராமப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் மாணவி சிவசங்கரி. ஊடகங்களில் சொல்லப்படுகிற அளவுக்கு மாணவர்கள் நிலைமை மோசமில்லை எனத் தொடங்குகிறார் அவர். கிராமத்தில் ஒருவன் தவறு செய்தால், யார் மூலமாவது பெற்றோரின் கவனத்துக்கு அது சென்றுவிடும் என்ற பயம் இருப்பதால் நல்ல சூழல் அங்கே இருக்கிறது என்கிறார் சிவசங்கரி.
25 சதவீத மாணவர்களுக்கு மது, சிகரெட், புகையிலை, பான்மசாலா, குட்கா, கஞ்சா போன்றவற்றில் ஏதாவது ஒரு பழக்கம் உள்ளது என்று சொல்லும் சிவசங்கரி, ‘எதற்காக இப்படிச் செய்கிறீர்கள்’ என்று அவர்களிடம் கேட்டபோது, ‘ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்’என்னும் தொனியில் பதில் சொல்லியிருக்கிறார்கள். “ஊரில் திருமணம், திருவிழா போன்றவற்றில் பெரியவர்கள் நடந்துகொள்ளும் விதமும், சினிமாக்களும்தான் இவர்கள் கெட்டுப்போக முதல் காரணம்” என்றார் சிவசங்கரி.
மதுரை மாநகர் பகுதியை ஆய்வுக் களமாக எடுத்துக் கொண்டவர் மணிகண்டன். நகர்ப் பகுதி மாணவர்களிடம் மது, புகையிலை பழக்கம் அதிக அளவில் இருக்கிறது என்றும் பள்ளி மாணவர்கள், வீட்டிலும் பள்ளிகளிலும் அன்றாடம் பயன்படும் சாதாரணப் பொருட்களை அடிப்படையாக வைத்து 15 விதமான சுயதயாரிப்புகளைப் போதைக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் அதிர்ச்சிகரமான தகவல்களை அடுக்குகிறார் மணிகண்டன். பந்தா, நண்பர்கள் தங்களை ஒதுக்கிவிடக் கூடாதே என்ற எண்ணம், சும்மா ஜாலிக்காக எனச் சொல்லியே இவர்கள் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள் என்கிறார் அவர்.
“கஞ்சா அடித்தால் சிந்தனை சக்தி அதிகரிக்கும், சில குறிப்பிட்ட மதுபானங்களை அருந்தினால் சளி, காய்ச்சல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்ற மூடநம்பிக்கைகளும் இவர்களுக்கு உள்ளன” என்கிறார் யோகேஸ்வரன்.
இதற்கான தீர்வு பற்றிப் பிரபல மனநல மருத்துவர்களிடம் கேட்டுள்ளனர் இந்தக் குழுவினர். குடிப்பழக்கம் உள்ளவர்களை அடித்தோ மிரட்டியோ திருத்திவிட முடியாது என்றும் அம்முயற்சி எதிர்மறை விளைவுகளைத்தான் தரும் என்றும் நந்தினி கூறுகிறார். பெற்றோர்களும் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பணம் செலவழிப்பது மட்டுமல்ல குழந்தைகளைக் கண்காணிப்பதும் பெற்றோரின் இன்றியமையாத கடமை. அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். “ பெற்றோர்கள் மாணவர்களின் தனிமையைத் தவிர்க்க வேண்டும். தவறு செய்வது தெரிந்தால், தண்டிக்காமல் கவுன்சிலிங் அழைத்துச் செல்ல வேண்டும் எப்போதும்போல் அப்போதும் அன்பு காட்ட வேண்டும்” என்கிறார் நந்தினி.
சமீபத்தில் நேரில் கண்ட ஒரு சம்பவமும், வாட்ஸ்ஆப்பில் பரவிய, 3 வயது சிறுவனை மது அருந்தச் செய்யும் வீடியோவும்தான் இந்த ஆய்வில் தங்களை ஈடுபட வைத்தன என்கிறார் இந்த ஆய்வை ஒருங்கிணைத்த, வேர்கள் அறக்கட்டளையைச் சேர்ந்த கல்வியாளர் பாலகிருஷ்ணன். இந்த ஆய்வு முடிவுகளைக் கல்வித் துறை அதிகாரிகளிடம் நேரில் ஒப்படைக்க உள்ளார்கள்.
மாணவர்களிடையே போதைப்பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற பிரச்சினை உள்ள மாணவர்களைக் கண்டறிந்து, கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார் அழகுமுருகன். “அனைத்துப் பள்ளிகளிலும் நிரந்தரமாக ஒரு ஆற்றுப்படுத்துநரை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்” என்று நிறைவாகச் சொன்னார் அவர்.
வெறும் ஆய்வறிக்கையுடன் நின்றுவிடாமல், கள ஆய்வு செய்த பகுதியில் மாணவர்களிடம் பக்குவமாகப் பேசி மாற்றத்தையும் ஏற்படுத்திவருகிறார்கள் இந்த மாணவர்கள்.