

கும்கி திரைப்படத்தின் ‘அய்யய் யய்யோ… ஆனந்தமே’ பாட்டிலும் 36 வயதினிலே திரைப்படத்தின் ‘வாடி ராசாத்தி’ பாடலின் இடையிலும் ஒலிக்கும் ஒற்றை வயலின் இசை நம் காதுகளுக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருக்கும். அது கார்த்திக் ஐயரின் வில் (violin bow) வண்ணம்தான்.
8 வயதிலிருந்து வயலினை நேசிக்க ஆரம்பித்த கார்த்திக்கின் 20 ஆண்டு இசை அனுபவம், விளம்பரங்களுக்கு இசையமைப்பது, திரைப்படப் பாடல்களுக்குப் பின்னணி இசையமைப்பது எனப் பல கிளைகளாகப் பரந்து விரிந்திருக்கிறது. அடுத்த இசை முயற்சியாக Indosoul என்னும் இசை ஆல்பத்தை நாளை சென்னை, மியூசியம் அரங்கத்தில் கார்த்திக் ஐயர் வெளியிட இருக்கிறார்.
திருமண நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள் எனப் பல மேடைகளிலும் புகழ்பெற்ற பாடல்களைத் தன்னுடைய ‘கார்த்திக் ஐயர் லைவ்’ என்னும் பேண்டின்மூலம் வாத்திய இசையாகப் பொழிந்துவருகிறார்.
ஐக்கிய நாடுகளின் கிளாஸ்டன்பரி, அமெரிக்காவின் கென்னடி சென்டர் ஃபார் பர்பார்மிங் ஆர்ட்ஸ், ஸ்பெயினின் வுமேட், பெர்த்தின் ஒன் மூவ்மென்ட் போன்ற உலகின் முக்கிய இசை சார்ந்த நிகழ்ச்சிகளில் தன்னுடைய இசைப் பங்க ளிப்பைத் தந்திருப்பவர் கார்த்திக் ஐயர்.
கேள்வி பிறந்தது அன்று
பல இசைக் கலைஞர்களுடன் வாசித்து வந்தாலும், மூன்று நான்கு வருடங்களாக கார்த்திக் ஐயர் பேண்டில் தன்னுடன் சேர்ந்து வாசிக்கும் விக்ரம் விவேகானந்த் (கிடார்), நவீன் நேப்பியர் (பேஸ்), ராம்குமார் கனகராஜன் (டிரம்ஸ்), சுமேஷ் நாராயணன் (மிருதங்கம் மற்று தாள வாத்தியங்கள்) ஆகியோருடன் ஒரு இயல்பான ஒன்றுபட்ட மனநிலை உண்டானது என்கிறார் கார்த்திக்.
“அப்போது எங்களுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. நல்ல இசை என்பது எதுவாக இருக்க முடியும்? கர்நாடக இசை, மேற்கத்திய இசை எனப் பல பாணிகளை அடிப்படையாகக் கொண்டதா, குறிப்பிட்ட வாத்தியங்களை, அதிலிருந்து வெளிப்படும் ஒலிகளில் இருந்து வெளிப்படுவதா இப்படிப் பலவற்றையும் அந்தக் கேள்விக்குப் பதிலாய்ப் பொருத்திப் பார்த்ததில், மனங்களைச் சங்கமிக்கச் செய்யும் இசையே நல்ல இசையாக இருக்க முடியும் என்னும் முடிவுக்கு வந்தோம்” என்கிறார்.
சங்கமித்த மனசுகள்
கார்த்திக்கின் குழுவில் இருக்கும் கலைஞர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பாணிகளில் இசை கற்றிருந்தாலும், அவர்களுடைய இசை ஒரே புள்ளியில் சங்கமிக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாகவே இண்டோசோல் (Indosoul) என்னும் இசை ஆல்பத்தைத் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. “இதில் பல பாணி இசையில் இருக்கும் இந்தியத் தன்மையை உணர்த்துவதே எங்களுடைய நோக்கம்” என்றார் கார்த்திக்.
உள்ளே வெளியே
Indosoul ஆல்பத்தின் முதல் டிராக் Boundless. எல்லைகள் இல்லாதது இசை என்பதை உணர்த்தும் வகையில் கம்பீரமாக ஒலிக்கிறது. At the theatre என்னும் டிராக்கில் மட்டும் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஒரு பாடலை எழுதிப் பாடியிருக்கிறார் கார்த்திக். ஒரு நாடக அரங்குக்குள் பிரவேசிக்கும் அனுபவத்தை நமக்கு அளிக்கிறது இந்தப் பாடல்.
உலகமே நாடக மேடை நாம் அனைவருமே அதில் பாத்திரங்கள் என்னும் கருத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்தப் பாடலில் இழையோடும் மென் சோகம், மனதில் மீண்டும் மீண்டும் ரீங்காரமிடுகிறது. வெவ்வேறு பாணி இசையின் உள்ளே இருக்கும் இந்தியத் தன்மையை ஆல்பத்தின் ஒவ்வொரு டிராக்கும் எதிரொலிக்கிறது.