

ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு நல நிதி, குடும்ப பாதுகாப்பு நிதி ஆகியவற்றை அரசு வழங்கி வருகிறது. இதுகுறித்த விரிவான விவரங்களைத் தருகிறார் ஓய்வுபெற்ற அலுவலர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் கொ.சி.கருப்பன். ‘‘ஓய்வூதியர்களின் ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ.150 வீதம் நல நிதியாக பிடித்தம் செய்யப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் ரூ.5 பிடித்தம் செய்யப்பட்டது. படிப்படியாக அந்தத் தொகை அதிகரித்து தற்போது மாதம் ரூ.150 பிடித்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் தொகை மூலம் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் அவரது வாழ்நாளில் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளன. ஓர் ஓய்வூதியர் மாநிலத்தில் எந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். பொதுவாக முதியோர் தொடர்பான அனைத்து விதமான நோய்களுக்கான சிகிச்சைகளுக்கும் இந்தக் காப்பீடு பொருந்தும். சிகிச்சைக்குப் பின்பு மருத்துவமனையில் சேர்ந்த நாள், விடுவிக்கப்பட்ட நாள், மருந்து வாங்கியதற்கான ரசீது, மருத்துவமனை சிகிச்சைக் கட்டண ரசீது, மருத்துவமனை உள்நோயாளி தங்கல் கட்டண ரசீது உள்ளிட்டவற்றை தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்தில் வழங்க வேண்டும். கருவூலம் மூலம் அந்த ஆவணங்கள் இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும்.
அந்த அலுவலகத்தினர் ஓய்வூதியர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் கட்டிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு உரிய உபகரணம் உள்ளது என்பதற்கான சான்று வழங்குவர். அந்தச் சான்றிதழை கருவூல அதிகாரிகள் பெற்று ஓய்வூதியர் இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்புவர். அங்கிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் மருத்துவச் செலவுக்கான தொகை வழங்கப்படும். அதிகபட்சமாக மருத்துவ செலவு செய்த தொகையில் 75 சதவீதம் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
இது குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும். குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மாதம் ரூ.100 வீதம் அவர்களது மாத ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் முன்கூட்டியே பணம் வழங்கப்படமாட்டாது.
ஓய்வூதியதாரர்களுக்கு மற்றுமோர் அருமையான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்துள்ளது. அதைப் பற்றி நாளை பார்க்கலாம்.