

அந்த அதிகாலை நேரத்தின் அமைதியைக் கிழித்துக்கொண்டு விரைந்த ரயிலில் அமர்ந்திருந்த திருநங்கையின் மொபைல் போன் திடீரென அலறியது. அப்போது ஒலித்த பாடல் ‘மதுர அழகரோ மாமதுர சொக்கரோ…’ என்பது. சுமார் இருபது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ஒரு படத்தில் இடம்பெற்ற பாடல் அது. அதன் பின்னர் மனதில் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பல சம்பவங்கள் நினைவிலாடின. மனவெளியில் ஏதேதோ எண்ண மேகங்கள் அடர் பஞ்சாய் உலவின.
அந்தத் திருநங்கை யாரோ, எவரோ? அவர் இந்த ரிங் டோனைத் தேர்ந்தெடுத்ததன் பின்னணியில் உள்ள உளவியல் காரணம் என்னவாக இருக்கும், இந்த ஒலி அவரிடம் என்ன விதமான எண்ணங்களை உருவாக்கும் என நினைவு புதுவித உலகைக் கட்டமைத்துப் பறக்கத் தொடங்கியது.
ஒரு ரிங் டோன் ஒரு மொபைலில் இருந்து வெளிப்பட்ட உடன் அந்த மொபைலை ஏந்திய நபர் பற்றிய சித்திரம் ஒன்றை நமது மனம் தீட்டிக்கொள்ளும். ரிங் டோன் என்பது நமக்குத் தொலைபேசியில் வரும் அழைப்பைக் கவனப்படுத்தும் வெறும் ஒலியல்ல. அது நமது ரசனையின் வெளிப்பாடு. அதில் வெளிப்படும் பாட்டை வைத்தே கண்ணை மூடிக்கொண்டு ஒருவருடைய வயதையே நாம் தீர்மானித்துவிடலாம்.
டி.எம்.எஸ். பாடலோ கண்ணதாசனின் வரிகளோ ஒலித்தால் மரியாதைக்குரிய மனிதர் அவர். அவர் வயதுக்கு மரியாதை தர வேண்டும் எனத் தோன்றும். இளையராஜா பாடல் என்றால் எழுபதுகளின் இறுதியிலோ எண்பதுகளிலோ பிறந்தவராகவோ இருப்பார். தொண்ணூறுகளில் பிறந்தவர்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் துள்ளல் பாடல்கள்தான் தெம்பைத் தரும்.
தனது ரிங் டோன் மட்டும் தனித்துவமாகத் தெரிய வேண்டும் என்ற ஆர்வமே பலரிடமும் தென்படுகிறது. சினிமாப் பாடல்கள், தீம் ம்யூசிக், காமெடி வசனங்கள், பக்திப் பாடல்கள் என விதவிதமான ரிங் டோன்கள் ஒலித்துப் பிறரது கவனத்தை ஈர்க்கும். நீண்ட நாள்களுக்கு ஒரே ரிங் டோன் என்பது வயது மூத்தவர்களின் பழக்கம். ஆனால் இளைஞர்கள் உலகில் இது செல்லுபடியாகாது. ஒரே நாளில்கூட ரிங் டோனை மாற்றிவிடுகிறார்கள்.
அவர்களுக்குத் தினம் புதிய ஒலியாக ரிங் டோன் இருக்க வேண்டும். அப்படி ஒரு வேளை ஒரே ரிங் டோனையே பராமரித்துவந்தார்கள் என்றால் அவர்கள் மனதுக்குப் பிடித்த யாரோ ஒருவரை அந்த ரிங் டோன் நினைவுபடுத்துகிறது என்றே பொருள். இன்பமயமான உலகையே இளம் மனம் விரும்பும் என்பதால் அவர்களது ரிங் டோனும் உற்சாகமானதாகவே இருக்கிறது.
சமீபத்தில் வந்து சக்கை போடு போடும் திரைப்படப் பாடல் என்றால் அதற்கு முதலிடம் கொடுத்துவிடுகிறார்கள். இவர்களை நம்பியே மொபைல் நிறுவனங்கள் பெருமளவில் காசு பார்க்கின்றன. மாதம் தோறும் குறைந்தது 30 ரூபாயாவது செலவிடுகிறார்கள். முப்பது ரூபாய் எல்லாம் ஒரு காசா என்று தோன்றுகிறதா? அப்படித் தோன்றினால் “அஞ்சு கோடிப் பேர் அஞ்சு பைசா...” என்னும் அந்நியன் வசனத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
ரிங் டோன்கள் சில சமயங்களில் அதை வைத்திருப்பவரை நெளிய வைத்துவிடவும் செய்யும். அதைத் தவிர்க்க சில நேரங்களில் ரிங் டோனின் ஒலியை அமைதிப்படுத்திவிடுவது நல்லது. அமைதியும் சில வேளைகளில் அழகே. அதுவும் நீங்கள் யார் என்பதைக் காட்டும்.