

கேக்கைப் பார்த்ததுமே வாயில் எச்சில் ஊறும். ஆனால் கேத்தரின் சப்பாத் செய்யும் கேக் நாள் முழுவதும் பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கச் சொல்லும். அடர் வண்ணங்களில் அட்டகாசமாக அலங்காரம் செய்யப்பட்ட உலகிலேயே மிக அழகான கேக்குகள் இவருடையவை!
இன்ஸ்டாகிராமில் கேக்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கேத்தரின் பள்ளி ஆசிரியர். 11 வயதிலேயே அவர் செய்த முதல் கப் கேக் அவருடைய நண்பர்களைப் பெரிதும் ஈர்த்தது. சிறு வயது முதல் வண்ணங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்ததால் ஓவியராக ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அதில் பொருளாதார முன்னேற்றம் அடைவது கடினம் என்பதால் கேக் மீது இவரது கவனம் திரும்பியுள்ளது.
“நான் யாரிடமும் கேக் செய்முறைகளைக் கற்றுக்கொள்ளவில்லை. புத்தகங்களைப் பார்த்தே கற்றுக்கொண்டேன். உலகில் எத்தனையோ பேர் அற்புதமான கேக்குகளைத் தயாரிக்கிறார்கள். ஆனால் என் வழி தனி வழி என எப்படிக் காட்டலாம் என யோசித்தபோது வண்ணங்கள் கண் முன்னே வந்து நின்றன” என்கிறார் கேத்தரின்.
வியட்நாமில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் படகில் ஏறி, அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் கேத்தரின் அம்மா. அம்மாவின் சொல்படி பட்டப்படிப்பு முடித்தவுடன் பள்ளி ஆசிரியரானார் கேத்தரின். ஆரம்பத்தில் விடுமுறை நாட்களில் கேக் செய்வார். அவற்றைத் தன் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிப் பாராட்டுகளைக் குவித்துவந்தார். கேக் செய்து விதவிதமான புகைப்படங்கள் எடுத்து ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட ஆரம்பித்தார். அதன்பின் இரண்டே ஆண்டுகளில் உலகம் முழுவதிலுமிருந்து 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் இவரைப் பின்தொடர்கிறார்கள்!
ஒரு கேக் 20,000
ஒருகட்டத்தில் கேக் ஆர்டர்கள் ஏராளமாகக் குவிய முழு நேர கேக் கலைஞராக மாறினார் கேத்தரின். வாடிக்கையாளரின் விருப்பம், பட்ஜெட் எல்லாம் கேட்டறிந்த பின்னர் தன்னுடைய கற்பனையில் ஒரு கேக்கை உருவாக்குகிறார். முதல் நாள் பேக் செய்யப்பட்ட கேக்கில் மறுநாள் ஐசிங் ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறார். மூன்றாவது நாள் உறைந்த கேக்கின் மீது சாக்லேட்கள், மிட்டாய்கள், லாலிபாப்கள், வண்ண பிஸ்கெட்கள், உலர் பழங்கள், பருப்புகள் போன்றவற்றை வைத்து அலங்கரிக்கிறார். எல்லாம் தனக்குத் திருப்தியாக வந்தவுடன் ஒளிப்படங்கள் எடுத்துக்கொள்கிறார். பிறகு அது வாடிக்கையாளர்களின் கைகளுக்குப் போய்விடுகிறது.
“ஒரு வாரத்தில் ஒரு கேக் ஆர்டர் மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். ஒரு பிறந்தநாள் கேக்கின் விலை சுமார் 20 ஆயிரம் ரூபாய். அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு கேக்குக்கு இந்த விலை நியாயமானதுதான். தேவை இருப்பவர்களுக்கு மட்டுமே கேக் செய்து தருகிறேன். அத்துடன் 24 மணிநேரமும் சமையலறையில் இருப்பது எனக்குப் பிடிக்காது. சமையலைத் தாண்டியும் உலகம் இருக்கிறது” என்கிறார் கேத்தரின்.
ரெயின்போ கேத்தரின்
தற்போது கேத்தரின் கேக் அலங்காரத்துக்கான பயிற்சி வகுப்புகள் எடுக்கிறார். தொலைக்காட்சிகளில் கேக் நிகழ்ச்சிகளை வழங்குகிறார். கேக் புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். “வெளியில் செல்லும்போதெல்லாம் மற்றவர்கள் உடுத்தும் உடைகளைக் கூர்ந்து கவனிப்பேன். உடைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றிலிருந்துதான் எனக்கு கேக் அலங்கரிக்கும் யோசனை உதிக்கும். அதில் என்னுடைய கற்பனையைக் கலந்து தரமான பொருள்களை பயன்படுத்தி கேக் உருவாக்கிவிடுவேன்” என்கிறார்.
தான் உருவாக்கும் ஒவ்வொரு கேக்கும் தன்னைக் கவர்ந்ததுதான் என்றாலும் எல்லோரையும் கொள்ளைகொண்ட ‘ரெயின்போ’ கேக் மீது கூடுதல் அன்பு இருப்பதாகச் சொல்கிறார் கேத்தரின். அதனால்தான் அவரது தலைமுடியைக்கூட அடிக்கடி ரெயின்போ வண்ணங்களில் மாற்றிக்கொள்கிறார்!