

பழைய ரூபாய் நோட்டு செல்லாது
உங்களிடம் நிறைய ரூபாய் நோட்டுகள் இருக்குதா? முதலில் அது எப்போது அச்சடிக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். அதை எப்படிய்யா பார்ப்பதுன்னு கேட்குறீங்களா? ரூபாய் நோட்டின் பின் பக்கத்தில் அடிப்பகுதியில் நடுவில் வருடம் அச்சடிக்கப்பட்டிருக்கும். அப்படி ஆண்டு எதுவும் உங்கள் ரூபாய் நோட்டில் அச்சிடப்படவில்லை என்றால் அது 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சடிக்கப்பட்டது. அப்படியான நோட்டுக்களை வைத்திருந்தால் அதை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள்.
ஏனெனில் ஜூன் 30-ம் தேதிக்குப் பின்னர் இந்த நோட்டுகள் செல்லாதவையாகிவிடும். இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிஸர்வ் பேங்க் ஆஃப் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது. ஒருவேளை ஜூன் முப்பதாம் தேதிக்கு மேல உங்களிடம் ஏதாவது பழைய நோட்டு இருந்தாலும் அது செல்லாதோ எனப் பயப்பட வேண்டாம். வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம்.
உரிய அடையாளச் சான்றிதழ்களைக் காட்டினால் போதும் உங்கள் பழைய நோட்டை வாங்கிக்கொண்டு புதிய நோட்டைக் கொடுத்துவிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஹிட்லரின் ஓவியங்கள்
ஹிட்லரை உங்களுக்கு நல்லாத் தெரியும். அவர் ஒரு ஓவியர்ங்கிறதும் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சமீபத்தில் ஜெர்மனியின் நுயுரெம்பெர்க் நகரில் அவரோட 14 வாட்டர் கலர் ஓவியங்களை வெய்டுலெர் நிறுவனம் ஏலம் விட்டிருக்குது. அவை 3,91,000 யூரோவுக்கு (ரூ. 2,77,60,987) ஏலம் போயிருக்குது.
நாடோடிக் கதைகளில் இடம்பெறும் பவாரியாவில் உள்ள நியூச்வான்ஸ்டெயின் கோட்டையின் (Neuschwanstein castle) ஓவியத்தை மிக அதிக விலைக்கு ஏலம் எடுத்திருக்கிறார்கள். பெண்ணின் நிர்வாணம், வியன்னா நகரின் தோற்றம் ஆகியவை ஹிட்லரால் ஓவியங்களாகத் தீட்டப்பெற்றிருந்தன. இவை 1904-ம் ஆண்டிலிருந்து 1922-ம் ஆண்டுக்குள் வரையப்பட்டவை என்கிறார்கள்.