

'சூப்பர்வுமன்' லில்லி சிங் சர்வதேச யுடியூப் பிரபலம். யுடியூப் பயனாளிகளில் பெரும்பாலோர் இவரது ரசிகர்கள். லில்லி சிங் இந்திய-கனடிய பின்னணியைக் கொண்டவர். நகைச்சுவை நடிகை, தன்னம்பிக்கைப் பேச்சாளர், ரேப்பர் என இவரது பல முகங்களையும் 'சூப்பர்வுமன்' யுடியூப் சேனலில் பார்க்கலாம். தற்போது இவர் உலகச் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார். ஆனால், எப்போதும் மற்றவர்களைச் சிரிக்கவைப்பதையே தன் முதல் வேலையாக வைத்திருக்கிறார்.
"வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில், மக்கள் சிரிப்பதை மறந்துவிடுகின்றனர். என் வீடியோக்கள் மூலம் அவர்களை சிரிக்க வைக்க முடியும் என்று நம்புகிறேன். வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். சிரிக்க மறந்தவர்களை, அவர்களுடைய வயது, பிரச்சினைகளைத் தாண்டி என் வீடியோக்கள் மூலம் சிரிக்க வைக்கிறேன். சிரித்து வாழ முடியும் என்பதைப் புரியவைக்கிறேன்" என்கிறார் 'சூப்பர்வுமன்' லில்லி சிங். இவை தன்னுடைய 'எ டிரிப் டு யுனிகார்ன் ஐலேண்ட்' (A Trip to Unicorn Island) என்னும் உலகச் சுற்றுலாவின் இந்தியப் பயணத்தின்போது அவர் பகிர்ந்துகொண்டவை.
தன் வீடியோக்களைப் பார்க்கும் ரசிகர்கள் எதைப் பெற வேண்டும் என்று சூப்பர்வுமன் விரும்புகிறார் தெரியுமா? "வாழ்க்கை மோசமானதல்ல. என் நகைச்சுவை வீடியோக்கள் எல்லாமே மனசை லேசாக்கக்கூடியவை. அவை யார் மனதையும் புண்படுத்தாதவை. அவற்றில் தீவிரத்தன்மை கிடையாது. நேர்மறையான விஷயங்களையே அவை பேசுகின்றன. மக்கள் என் வீடியோக்களைப் பார்த்தால் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது என்பதைப் புரிந்துகொள்வார்கள்".
உலகச் சுற்றுலா செல்வதைப் பற்றி 'சூப்பர்வுமன்' இப்படிச் சொல்கிறார்: "இது ஒரு வித்தியாசமான அனுபவம். இதை நான் வெகு நாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால், இப்போது இது ஒரு அற்புதமான அனுபவம். கடின உழைப்பு, அயர்ச்சி போன்ற பிரச்சினைகள் இருந்தாலும், இந்தச் சுற்றுலாவை இந்தியாவில் பெங்களூருவில் ஆரம்பித்தது சரியான முடிவு என்று நினைக்கிறேன். இங்கே ரசிகர்கள் எனக்களிக்கும் வரவேற்பு உற்சாகத்தைத் தருகிறது".
தன் பாதையில் தொழில் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு 'சூப்பர்வுமன்' லில்லி சிங் தரும் ஆலோசனை இது: "எனக்கு எதிர்பார்ப்புகள், கனவுகள், ஆசைகள் எல்லாம் கிடையாது. என் கவனமெல்லாம் வேலை, வேலை, வேலை மட்டும்தான். யாராவது கனவு கண்டால், அதை நனவாக்க வேலை செய்தாக வேண்டும். அதனால், உழைப்பதற்குத் தயாராக இருங்கள்".
சூப்பர்வுமனின் இதர ஆசைகளும் ஊடகத்தைச் சுற்றியதாகவே இருக்கின்றன. "நான் பதிவு செய்யும் பத்து நிமிட யுடியூப் வீடியோக்களை மிகவும் விரும்புகிறேன். ஆனால், அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, திரைப்படங்கள், இசைத் தயாரிப்புகளிலும் ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறேன்" என்கிறார்.
சூப்பர்வுமன் கடினமாக நினைப்பது எதைத் தெரியுமா? "எனக்கு முடியாது என்று சொல்வது கடினமானது. நான் மிகத் தீவிரமான உழைப்பாளி. அதனால், உடல்நிலை சரியில்லாதபோதுகூட வேலை செய்வதை நிறுத்தியது கிடையாது. நீங்களே ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும்போது, அந்நிறுவனத்தின் எல்லாப் பணிகளையும் நீங்களே செய்யும்போது, உங்களால் வாய்ப்புகளை மறுக்க முடியாது" என்று சொல்கிறார் இந்த 'சூப்பர்வுமன்' லில்லி சிங்.
'சூப்பர்வுமன்' லில்லி சிங் வீடியோக்களைப் பார்க்க: https://www.youtube.com/user/IISuperwomanII
தமிழில்: என். கௌரி
© தி இந்து ஆங்கிலம்