Published : 19 Jun 2015 03:12 PM
Last Updated : 19 Jun 2015 03:12 PM

உறவுகள்: யாரையும் ரொம்பவும் சார்ந்திருக்க வேண்டாம்!

நான், என் அண்ணன், அம்மா, அப்பா என்று சந்தோஷமான குடும்பம் எங்களுடையது. அப்பாவும் அம்மாவும் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் என்னையும் அண்ணனையும் எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்தனர். கஷ்டமான குடும்பச் சூழலிலும் அப்பா தன் சக்தியை மீறி எங்கள் இருவரையும் பொறியியல் படிக்க வைத்தார். இப்போது நாங்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறோம். எங்களைக் கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்கவைத்த அப்பாவையும் அம்மாவையும் நாங்கள் நல்லபடியாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கனவுடன் உழைத்துவருகிறோம்.

ஆனால் ஆறு மாதங்களாக எங்கள் வீட்டில் ஒரு பிரச்சினை. எங்கள் வீட்டின் மொத்த நிம்மதியும் போய்விட்டது. என் அப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால் அளவாக அருந்திவிட்டு வீட்டுக்கு வருவார். சாதாரணமாகத்தான் நடந்துகொள்வார். ஆறு மாதமாக மிதமிஞ்சிக் குடித்துவிட்டு வருகிறார். நாங்கள் சிறு கடை ஒன்றை நடத்திவருகிறோம்.

எங்கள் அம்மாதான் அதைப் பார்த்துக்கொள்கிறார். அம்மாவுக்கும் பக்கத்துக் கடைக்காரருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அம்மாவுடன் அப்பா சண்டை போடுகிறார். அம்மா இதனால் மனமுடைந்துபோயுள்ளார்; அழுகிறார். அப்பாவுக்கு வயது 56. அம்மாவுக்கு 45. இத்தனை வருடங்களாக இல்லாமல் ஏன் திடீர் என இந்தப் பிரச்சினை? எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்களுக்கு உதவ முடியுமா?

நண்பரே, நிலைமை இன்னும் மோசமாக ஆவதற்கு முன்பே ஆலோசனை கேட்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். உங்கள் அப்பாவுக்குக் குடிநோய் இருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த நோயின் ஆரம்ப காலத்தில் குடி ஒரு பிரச்சினையாகவே தென்படாது. அளவோடுதான் அருந்துவார்கள். குடிக்கும் பழக்கமும் அளவும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்; நாளடைவில் கட்டுப்படுத்த முடியாத குடிப் பழக்கம் அவர்களைத் தனக்கு அடிமையாக்கிவிடும். அது இல்லாமல் வாழ முடியாது எனும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அந்நிலையில்தான் இந்தப் பழக்கத்தை விட வேண்டும் என்று முயல்வார்கள்.

ஆனால், பிறரது உதவியோ, மருத்துவ சிகிச்சையோ இல்லாமல் அதை நிறுத்துவது அவர்களால் முடியாது. உங்கள் தந்தையிடம் வெளிப்படும் சில அறிகுறிகள் இது குடிநோய்தான் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் இருக்கின்றன. உங்கள் அம்மாவைச் சந்தேகப்பட்டுப் பேசுவது குடிநோயின் காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்பால்தான்; குடிபோதையில் சிந்தனைகள் கோணலாகிவிடும். பாட்டிலில் உள்ள திரவத்தின் வழியே வாழ்க்கையைப் பார்ப்பதால், அந்தப் பக்கம் உள்ளவை கோணலாகவே தெரியும்!

போதை நோய்க்கென்று வைத்தியம் செய்யும் மையங்கள் பெரிய நகரங்களில் உள்ளன. அவரை அதில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். அவர் வர மறுத்துவிட்டால், குடும்பத்தார் யாராவது அங்கு சென்று அவரைப் பற்றிச் சொல்லுங்கள். அவரை சிகிச்சைக்கு வரவழைக்க வழி சொல்வார்கள். குடிநோயைக் கட்டுப்படுத்தத்தான் முடியும்; குணப்படுத்த முடியாது என்றெல்லாம் சொல்லப்படும் கட்டுக்கதைகளைக் கேட்டுப் பயப்பட வேண்டாம்; சிகிச்சைக்குப் பின் மறுபடியும் அவர் குடியைத் தொடாமலிருப்பதற்கான வழிமுறைகளை மையத்தில் கற்றுக்கொடுப்பார்கள். குடியில்லாத வாழ்க்கை சாத்தியமே!

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான் பொறியியல் முடித்துள்ளேன். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டேன். கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தபோது எனது சீனியரான சிவா எனக்கு நண்பரானான். அவன் இப்போது தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். நான் அரசுத் தேர்வுகளை எழுதிவருகிறேன். இருவரும் எப்போதாவது சந்தித்துக்கொள்வோம். நானும் சிவாவும் கல்லூரி விடுதியில் பக்கத்து பக்கத்து அறைகளில் தங்கியிருந்தோம். ஆகவே, இருவருக்கும் இடையே பலமான நட்பு உருவானது.

என் நண்பன் சிவா ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அவனுக்கு அம்மா இல்லை. சிவாவுக்கு நான், அம்மா, அப்பா, தம்பி போன்ற அனைத்து உறவுகளும் கலந்த ஒரு நண்பனாக இருந்தேன். சிவாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மது அருந்திய சமயங்களில் அவனது குடும்பச் சூழலைப் பற்றி என்னிடம் கூறுவான். அவனது குடும்பச் சூழலை எண்ணி, நான் சிறு சிறு உதவிகளையும் செய்ய ஆரம்பித்தேன். இரண்டாம், மூன்றாம் ஆண்டு கல்லூரி நாட்களின்போது, எனக்குச் சிவாவை ரொம்பப் பிடிக்க ஆரம்பித்தது. அவன் மீது எனக்குக் கண்மூடித்தனமான பாசம்.

கல்லூரி முடியும் காலங்களில், அவனது பிரிவை நினைத்து நாள்கணக்கில் அழுதிருக்கிறேன். சிவாவுக்கு என்மேல் இந்த அளவு பாசம் இருப்பதாக என்னால் உணர முடியவில்லை. என்னிடம் சண்டை போட்டு, நாள்கணக்காகப் பேசாமல் இருந்திருக்கிறான். ஆனால், நான் வாரம் ஒரு முறையாவது சிவாவுக்கு போனில் பேசுவேன். அவனது பிறந்த நாளுக்கு என்னால் முடிந்த பரிசை வாங்கிக் கொடுப்பேன். ஆனால் என் பிறந்த நாளுக்கு அவன் போனில்கூட வாழ்த்தியதில்லை. சில நாட்கள் என்னிடம் அன்பாகப் பேசுகிறான். சில நாட்கள் என்னைக் காயப்படுத்துவது போல் பேசுகிறான்.

அவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனது அன்புக்கு ஏங்கி நான் அடிமையாக மாறிவிட்டேன். எதுவாக இருந்தாலும் அவனிடம் பகிர்ந்துகொள்ள நினைப்பேன். ஆனால், அவன் அதைக் கேட்கத் தயாராக இல்லை. அவன் என்னிடம் நடந்துகொள்ளும் விதத்தை நினைத்து தனிமையில் அழுதது உண்டு. இனிமேல் பேச வேண்டாம் என்று நினைத்து, நான் பேசாமல் இருக்க முயன்றாலும், ஒரு வாரத்துக்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க என்னால் முடியவில்லை.

ஒருசில நேரங்களில், நான் அனுப்பும் குறுந்தகவலுக்குக்கூடப் பதில் அனுப்ப மாட்டான் சிவா. அவன் என்னிடம் சண்டை போட்டாலும், அவனது வாழ்நாளில் என்னை மறக்க மாட்டான் என்ற எண்ணமும் என்னிடம் இருக்கிறது. அவனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவனை எண்ணி வருந்திய நாட்கள்தான் அதிகம். இதனால் என் அன்றாடப் பணிகளைச் சரியாகச் செய்ய முடியவில்லை. நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுங்கள்...

நீங்கள் சிவாவை உங்கள் வாழ்நாள் முழுவதும் கூடவே பயணிக்கப்போகும் ஒரு துணையாகப் பார்த்தீர்கள். அவர் உங்களை நட்பு எனும் வட்டத்துக்குள் அடைத்துவிட்டார். அதனால்தான் உங்கள் இருவருடைய எதிர்பார்ப்புகளும் வேறாகிவிட்டன! நீங்கள் அவர் மீது ‘டிபெண்டண்ட்’ ஆகிவிட்டீர்கள் (அவர் ஆகவில்லை).

இதனால்தான் இந்தத் தவிப்பு. நீங்கள் வளர்ந்த சூழ்நிலை பற்றிய தகவல்கள் ஏதும் கொடுக்கப்படாவிட்டலும், நீங்கள் அன்புக்காக ஏங்கியிருக்கிறீர்கள் என்று ஊகிக்கிறேன். அதனால் அன்பைப் பொழிய ஒரு நண்பர் கிடைத்ததும், அவரை விடக் கூடாது என்னும் எண்ணத்தில், அவரை இறுக்கிப் பற்றிக்கொண்டீர்கள்- அவருக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அன்பைப் பொழிந்திருப்பீர்களோ? சிவா உங்களை மறக்க மாட்டார் என்றும், உங்களை உபயோகப்படுத்திக்கொள்ளும் காரியவாதி இல்லை என்றும் நீங்கள் நினைப்பது சரியாக இருக்கலாம்.

அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று மனதைக் குடையும் இந்த விஷயத்தை மனம் திறந்து சிவாவிடம் பேசுங்களேன். அவருக்கு உங்கள் நட்பு தேவையா? தேவையென்றால் நீங்கள் எப்படி நடந்துகொண்டால் அவருக்குப் பிடிக்கும் என்று வெளிப்படையாகக் கூறச் சொல்லுங்களேன்! இந்த அளவுக்கு அவரைச் சார்ந்து வாழ்வது உங்களுக்கு நல்லதல்ல; திருமண வாழ்வில் பிரச்சினைகளை உண்டுபண்ணும்.

உங்கள் கவனம் மற்ற விஷயங்களில் போகாமல் அவரைச் சுற்றியே இருக்கும். அதனால் உங்கள் மனதைத் திசைதிருப்புங்கள். அரசுத் தேர்வுகளுக்கு நன்றாகத் தயார் செய்யுங்கள். தனிமையைத் தவிர்த்து, நண்பர்களோடு சேர்ந்து உங்களுக்குப் பிடித்த விளையாட்டில் நேரத்தைக் கழியுங்கள். தொலைக்காட்சியில் காமெடிக் காட்சிகளைப் பார்த்து சிரியுங்கள். டிபெண்டன்ஸி குறைந்துவிடும்.

உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,

124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x