சுட்ட கதை: துப்பறியும் கூகிள்

சுட்ட கதை: துப்பறியும் கூகிள்
Updated on
1 min read

ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தில் இடம்பெற்ற ‘கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன்’ பாட்டை ரசித்துக் கேட்டிருப்பீர்கள். கூகுள் பண்ணிப் பார்ப்பது என்பது ஒரு தமிழ்ப் பாடலில் இடம்பிடித்ததற்குக் காரணம் இருக்கிறது. இன்று கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்யும் பெரும்பாலானோர் சிறு சிறு தகவல்களுக்கும் கூகுள் செய்து பார்ப்பது வழக்கம். ஏனெனில் அடிப்படைத் தகவல்கள் ஓரளவுக்கு அதில் சரியாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை.

இது ஒரு புறம் இருக்கட்டும். அமெரிக்க இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனைத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும். அதுவும் அவர் இயக்கிய இன்ஸெப்ஷன், மெமண்டோ போன்ற படங்களை மாய்ந்து மாய்ந்து பார்த்தார்கள். மெமண்டோ என்ற உடன் பட்டென உள்ளுக்குள் ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து கஜினி கஜினி எனக் காதோரம் கிசுகிசுக்கும்.

தமிழில் வெளியான கஜினி திரைப்படத்தை இந்தியில் ஆமீர் கானைக் கதாநாயகனாக வைத்து இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் துண்டு துண்டாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இந்த மூன்றுக்கும் தொடர்பு இருக்கிறது. கூகுளில் கிறிஸ்டோபர் நோலன் மூவிஸ் என்று தேடினால் வரும் பக்கத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். ஏனெனில் 2008-ம் ஆண்டில் வெளியான படம் என அதில் இந்தி கஜினி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கஜினி என்பதை க்ளிக் செய்தால் வரும் ஐஎம்டிபி பக்கத்தில் கஜினியின் கதை எழுதியவர்கள் என முருகதாஸையும் கிறிஸ்டோபர் நோலனையும் குறிப்பிட்டுள்ளது. விக்கிபீடியாவை அடிப்படையாக வைத்து இந்தத் தகவலைப் போட்டிருக்கக்கூடும். ஏனெனில் விக்கிபீடியாவில் இது கிறிஸ்டோபர் நோலனின் மெமண்டோ படத்தின் தாக்கத்தில் உருவான படம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷார்ட் டேர்ம் மெமரி லாஸால் பாதிக்கப்பட்டிருக்கும் கதாநாயகன், தன் மனைவியைக் கொன்ற எதிரிகளைக் கொல்வதே மெமண்டோவின் கதை. ஆனால் முருகதாஸோ ஆமீர் கானோ கஜினி மெமண்டோவின் ரீமேக் என்றோ அதன் பாதிப்பில் உருவானது என்றோ சொல்லவே இல்லை.

கூகிள் தகவலை மட்டும்தான் சொல்லுமா அல்லது துப்பறியும் வேலையும் செய்யுமா?

தொகுப்பு: ரிஷி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in