Last Updated : 24 May, 2014 12:00 AM

 

Published : 24 May 2014 12:00 AM
Last Updated : 24 May 2014 12:00 AM

தஞ்சை உணவுக் களஞ்சியம்

ஒரு காலத்தில் உலகுக்கே படியளந்தது தஞ்சை நெற்களஞ்சியம். அவ்வளவு பெருமை கொண்ட தஞ்சையின் பெயரில் ஒரு உணவு விடுதியைத் திறந்து சென்னைக்குப் படியளந்துகொண்டிருக்கிறார் ராமமூர்த்தி. சென்னை மேற்கு மாம்பலத்தில் இருக்கிறது இந்த ‘தஞ்சை மெஸ்’ உணவகம்.

முத்தரையர்கள், சோழர்கள், சரபோஜிகள் எனப் பல அரச வம்சங்கள் தஞ்சைப் பகுதியை ஆண்டுள்ளதால் தஞ்சைக்குப் பலவிதமான வண்ணங்கள் சேர்ந்துள்ளன. அந்த வண்ணங்கள் தஞ்சையின் உணவுப் பாரம்பரியத்திலும் பிரதிபலிக்கின்றன. அந்த வண்ணங்களில் சில வகைகளான ரஸவாங்கியும், கடப்பாவும்தான் தஞ்சை மெஸ்ஸின் சிறப்பு உணவுவகைகள். இதில் கடப்பா கும்பகோணத்தின் பிரசித்தி பெற்ற உணவு. ரஸவாங்கி தஞ்சைக்குப் பெருமை சேர்ப்பது. கடப்பாவை இட்லிக்குத் தொடுகறியாகச் சாப்பிடுகிறார்கள். ரஸவாங்கி என்பது ஒரு கூட்டு வகையாகும்.

இந்த இரு சிறப்பு உணவுவகைகளுக்காகப் பல மைல்கள் தாண்டி ‘தஞ்சை மெஸ்ஸு’க்கு வருபவர்கள் இருக்கிறார்கள் எனச் சொல்கிறார் ராமமூர்த்தி. இது மட்டுமல்லாமல் இங்கு தயிர் சாதத்துடன் கலந்து சாப்பிடுவதற்காக வத்தல் குழம்பு ஊற்றுகிறார்கள். அதன் சுவையை ஒப்பிட்டுச் சொல்லவே முடியாது. அவ்வளவு சுவை. இரவிலும் இங்கு தயிர் சாதம் கிடைக்கிறது. மிக எளிய அமைப்பைக் கொண்டதுதான் இந்த உணவகம். ஆனால் சரவண பவனுக்கு நிகரான தூய்மையைக் கடைபிடிக்கிறார்கள். அதுபோல இந்த உணவகத்தில் முதலில் நுழைபவர்களுக்கு இது ஒரு தொழில்முறை உணவகம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ஏதோ கல்யாணப் பந்தியில் அமர்ந்திருப்பது போலத் தோன்றும். அத்தனை கனிவான உபசரிப்பை இங்குள்ள சிப்பந்திகள் வழங்குகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், சில உணவகங்களில் தொடுகறிகளை நீங்கள் அதிகமாகக் கேட்கும் போது முகத்தைச் சிறியதாகச் சுண்ட வைத்துக்கொண்டுதான் பரிமாறுவார்கள். அதற்குப் பிறகும் கேட்க நமக்குத் துணிவிருக்காது. ஆனால், இங்கு நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் பரிமாறுகிறார்கள்.

கடப்பா, ரஸவாங்கியைப் பற்றி எல்லாம் முதன்முதலாக வருபவர்களுக்குத் தெரியாது என்பதால் சிப்பந்திகள் அவற்றை அறிமுகப்படுத்திச் சுவைத்துப் பார்க்கச் சொல்கிறார்கள். உணவின் விலையும் மிக அதிகம் இல்லை.

எளிய வசதிகள் கொண்டது எனினும் எல்லாத் தரப்பினரும் இங்கு வந்து சாப்பிடுகிறார்கள். குடும்பத்துடன் வருபவர்களும் உண்டு. இது இல்லாமல் பேச்சுலர்களுக்கு இந்த உணவகம் ஒரு சொர்க்கமாகத் திகழ்கிறது. சொல்லப்போனால் வயிற்றுக்குச் சோறிடுவது ஒரு மேலான தர்மம். அதை முக்கியமான அம்சமாக வைத்து இவர்கள் உணவகத்தை நடத்திவருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x