

பிரேமம்னா என்னன்னு சொல்ல வேண்டியது இல்ல. அந்தச் சொல்லோட மகத்துவம் அப்படி. கேரளத்தில் வெளியாகி சக்கைப் போடு போடும் படம் பிரேமம். அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய இந்தப் படத்தின் கன்னாபின்னா வெற்றியால் மலையாளத் திரையுலகமே மிரண்டுபோயிருக்குது.
ஆட்டம், பாட்டம், கூத்து, கும்மாளம்னு நகரும் இந்தப் படத்தை இளைஞர்கள் கொண்டாடித் தீர்க்குறாங்க. காதல், காதல், காதல். இதுதான் படத்தின் ஜீவநாதம். திரையரங்குகளில் விசில் பறக்குது. திருவனந்தபுரத்துல இந்தப் படம் பார்க்க காலேஜுக்கு கட் அடிச்சிட்டுப் போன சுமார் 60 பசங்கள போலீசார் பிடிச்சி வீட்டுக்கு அனுப்பினாங்கன்னு போன வாரம் நியூஸ் வந்துச்சு.
இந்நிலையில் இந்தப் படத்தின் பைரஸி பிரிண்ட் நெட்டில் வெளியானது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. பொதுவாகவே படம் வந்து இரண்டொரு நாளில் படத்தைச் சுட்டு இணையதளத்தில் போடுவதை பரம்பரை வழக்கமாகவே யாரோ செஞ்சுட்டு இருக்காங்க. அதேபோல் இந்தப் படமும் நெட்டுல லீக்காயிருச்சு.
அது இயல்பானதுதானேன்னு விட்டுற முடியாது. ஏன்னா, லீக்கானது சென்ஸாருக்கு அனுப்பிய பிரிண்டாம். சென்ஸார் காபிங்கிற எழுத்து கொண்ட அந்த பிரிண்ட் எப்படி லீக்காச்சு? அது சென்ஸார் பிரிண்ட்ன்னா அதைக் கசியவிட்டது யார்? படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத், ஆண்ட்டி பைரஸி செல்லில் புகார் பண்ணியிருக்கிறார். எப்படியும் லீக்காவப்போகுது அத நாமளே பண்ணிருவோம்னு, சென்ஸார் போர்டு மெம்பர்ஸ் யாராவது நல்ல காரியம் பண்றதா நெனச்சுப் பண்ணிருப்பாங்களோ என்னவோ?