

திருச்சியில் வசிக்கிறேன். சென்ற ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி முதுகலை இயற்பியல் படித்து முடித்தேன். படிக்கும்போது எனக்கு ஒரு தோழி கிடைத்தாள். இரண்டு ஆண்டுகளாக அவளைத் தெரியும் என்றாலும் கடந்த ஆறு மாதங்களாகத்தான் அவள் நெருக்கமானாள். இதுவரை நான் எந்த ஆண் நண்பரிடமும் இவ்வளவு நெருக்கமாகப் பழகியதில்லை, உன்னிடம்தான் அப்படிப் பழகுகிறேன் என்று அவளே சொன்னாள். இருவரும் ஒன்றாகத்தான் படிப்போம். அடிக்கடி போனில் பேசுவோம். உடல்நிலை சரி இல்லை என்றால் அக்கறையோடு நலம் விசாரிப்பாள். வெளியே செல்லும்போது என்னையும் அழைப்பாள். என்னுடைய கவலைகளை அவளிடம் சொல்லி அழுததுண்டு. சக மாணவர்கள் நாங்கள் இருவரும் காதலிப்பதாகவே நினைத்தார்கள். ஆனால் நான் அவளைக் காதலிக்கவில்லை. நீ வாழ்க்கை முழுவதும் தோழியாக எனக்கு வந்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். அதற்கும் சரி என்று சொல்லிவிட்டாள்.
ஆனால், என் மனம் புண்படும்படி அவள் நடந்துகொள்கிறாள். ஒரு நாள் கல்லூரி வாசலில் அவள் தோழிகளுடன் பேக்கரி வந்தாள். நான் என் தோழனை பஸ் ஏற்றிவிட வந்தேன். அப்போது அவள் என்னை அழைக்கவில்லை. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இரவில் போனில் அவளிடம் அரட்டை அடிக்கும் போது யாருடைய டிரீட் என்று கேட்டேன். அவள் நாங்க எங்க காசுல சாப்புடுவோம் என்றாள். எங்கள பார்த்தால் அடுத்தவங்க காசுல சாப்பிடுரவங்க மாதிரி தெரியுதா எனக் கேட்டேன். அவள் பின்ன இல்லையா என்றாள். அவளுக்காக நான் செலவு செய்ததைச் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அவள் அப்படிச் சொன்னதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இது போன்று பல நிகழ்வுகள் இருக்கின்றன. இப்படிப் பேசினால் எனக்கு வலிக்கிறது எனப் பல முறை சொல்லியிருக்கிறேன். அப்போதைக்கு இனிமேல் அப்படிப் பேச மாட்டேன் என்று சொல்லுவாள். ஆனால், மறுபடியும் அது போலவே பேசுவாள். இப்போதெல்லாம் நான் என் மனக் கவலைகளைப் பற்றிச் சொன்னால், ஆரம்பிச்சுட்டியா எனச் சலித்துக் கொள்கிறாள். பிறகு போன் செய்கிறேன் என்று போனை துண்டித்து விடுகிறாள். பிறகு போன் செய்வதே இல்லை.
அவளிடம் பேசாமல் இருந்து பாப்போம் என்று இருந்தேன். அவளுக்கு போன் செய்வதை நிறுத்தினேன். ஆனால் அவள் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இனிமேல் இவளது நட்பு தேவை இல்லை என்று அவளது போன் நம்பரை அழித்துவிட்டேன். அவளிடம் பேசிப் பத்து நாட்களுக்கும் மேலாகிறது. அவளிடம் இருந்தும் போன் வரவில்லை. கல்லூரியில் அவ்வாறு பழகிவிட்டு, பேசிவிட்டு இப்போது இப்படி நடந்துகொள்வது என் மனதை மிகவும் பாதித்தது. என்னால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அவள் நினைவாகவே இருக்கிறேன். அவள் இப்படி என்னிடம் நடித்து, கடமைக்காகப் பழகிவிட்டு இப்படி இருப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவள் நினைவாக உள்ள அனைத்தையும் அழித்து விட்டேன். ஆனாலும் அவள் நினைவை மட்டும் அழிக்கவே முடியவில்லை.
இந்த உறவை நட்பு என்றே கொள்கிறேன். தோழியைச் சார்ந்தே வாழ்ந்ததால், அவர் விலகுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றம் ஒன்றுதான் மாறாதது! நம் எல்லோருடைய ஆளுமையும் மாறிக்கொண்டே இருக்கும்; அதனால் வயதாக ஆக நம்மிடம் மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். உங்கள் தோழி மாறிவிட்டார்; இப்போது உங்கள் கம்பெனி அவருக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது; குற்றம் கண்டுபிடிக்கிறார். இதுதான் உண்மை. இதை ஏற்றுக்கொள்ள என்ன செய்யலாம்?
ஒரு அட்டவணை தயாரியுங்கள். அதில் இடது பக்கம் தோழியின் நினைவில் காலம் கழிப்பதில் உள்ள நல்லவை - நல்லதல்லாதவை இரண்டையும் ஒன்றின் கீழ் ஒன்றாக இரண்டு கட்டங்களில் எழுதுங்கள். இதில் நல்லவை மிகக் குறைவாகவும், நல்லதல்லாதவை (அவரை மிஸ் பண்ணுவது, எதிலும் பிடித்தமில்லாமலிருத்தல், எரிச்சல் படுதல், கவனச் சிதைவு, உடல் உபாதைகள், தூக்கமின்மை போன்ற பல) அதிகமாகவும் இருக்கும். அடுத்து தோழியை நினைக்காதிருத்தலில் உள்ள நல்லவை - நல்லதல்லாதவை இரண்டையும் எழுதும்போது நல்லவை அதிகமாகவும் அல்லாதவை குறைவாகவும் இருப்பதைக் கவனிப்பீர்கள்.
சரி, தோழியை நினைக்காதிருக்க என்ன வழி? அவர் உங்களிடம் மோசமாக நடந்துகொண்ட சம்பவங்களை மட்டும் மனதுக்குள் தெளிவாகப் படம் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். கோபமாக இருந்தபோது அவருடைய முகபாவம், அவர் பேசிய வார்த்தைகள் எல்லாவற்றையும் நினைவில் கொண்டுவாருங்கள். வருத்தம் தந்த சம்பவங்களை அடிக்கடி நினைவில் கொண்டுவரும்போது அவரைப் பிடிக்காமல் போய்விடும்.
இந்த விஷயத்தில் நான் சொல்வதைக்கூட ஏற்க முடியாத நிலையில் இருக்கிறீர்கள் அல்லவா? தனிமையில் இருப்பதைத் தவிர்த்து நண்பர்களோடு சேர்ந்து சில பொழுதுபோக்குச் செயல்கள் செய்வது, விளையாடுவது, வரைவது, பாடுவது போன்றவை உங்களுக்கு உதவும். மறக்க முடியுமா என்பதைவிட, மறப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள்.
எனக்கு 26 வயதாகிறது. நல்ல குடும்பம், நண்பர்கள் என எல்லாம் நிறைவாக இருந்தன. மகளிர் பள்ளியில் படித்ததால், வெளி ஆண் பழக்கமோ, நட்போ இல்லாமல் இருந்தேன். 2006-ல்
நானும் என் அப்பாவும் மருத்துவ சிகிச்சைக்காக ஒரு மருத்துவரை அணுகி னோம். அந்த மருத்துவர் என்னுடன் பழகத் தொடங்கினார். அடிக்கடி அப்பாவின் மொபைலில் எனக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தார். 2007-ல் அப்பா புற்றுநோயால் இறந்து போனார். அந்த நேரத்தில் அடிக்கடி வீடு தேடி வந்து மருத்துவர் ஆறுதல் சொல்வார். என்னுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார். இப்படி மூன்று ஆண்டுகள் ஓடிய பின் வேறொரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டார்.
மனம் நொறுங்கிய நிலையில் நான் என் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தேன். என் வகுப்பு ஆசிரியருடன் ஒரு சூழலில் பழக்கம் உருவானது. நான், அவரை ஆசிரியராகத் தான் பாவித்தேன். ஆனால் அவர் எல்லை மீறுவதாகத் தோன்றிய பின் அவரிடமிருந்து விலகினேன். படிப்பு முடிந்து ஒரு வருடம் கழித்து வேலையில் சேர்ந்தேன்.
என் தோழியின் மூலம் பாஸ்கர் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு என் கடந்த காலம் முழுவதையும் சொன்னேன். நாங்கள் இருவரும் காதலித்தோம். நல்ல வேலை கிடைத்த பின் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்றார். அவர் முனைவர் பட்டம் படிக்க ஜப்பான் சென்றார். அவருக்குப் பணம் தேவைப்படும்போதெல்லாம் நான் அனுப்பிவைத்தேன். லட்சக்கணக்கில் அனுப்பியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் 1.4 லட்சம் ரூபாய் கடன் வாங்கி அனுப்பி வைத்தேன். அதன் பின் ஏனோ என்னைத் தகாத வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தார்.
இந்த விவகாரம் என் அண்ணனுக்குத் தெரியவந்தது. என்னைக் கண்டித்து, பணத்தைத் திருப்பித் தரும்படி பாஸ்கரை என் அண்ணன் எச்சரித்தார். இப்போது பாஸ்கர் என்னோடு பேசுவதே இல்லை. நான் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றேன். என் அம்மா, அண்ணன், தோழிகள் என்னைக் காப்பாற்றி னார்கள். இப்போது அம்மா எனக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறார். நான் ஆண் களால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் மனமுடைந்திருக்கிறேன்.
உணர்வுகள் உங்களை ‘ஹைஜாக்' செய்யவே, அவற்றின் சொல்லைக் கேட்டு பலமுறை தவறுகள் செய்துவிட்டீர்கள். வயதுக் கோளாறு என்று இதைத்தான் சொல்வார்கள். பெரியவர்கள் யாரிடமாவது கலந்து பேசியிருந்தால் சரியாக வழிகாட்டியிருப்பார்கள். ஏனெனில் அனுபவம் பேசும் அங்கே! பாஸ்கருடன் உறவைத் தொடர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தால் புரியும், படுகுழியில் விழுவதிலிருந்து தப்பித்தது உங்கள் நல்ல காலம் என்று.
கசப்பான அனுபவங்களை மனதிலிருந்து தூக்கிப் போடுங்கள். ஆனால், அவற்றிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மறக்கவே மறக்காதீர்கள். அவை எதிர்காலத்துக்குக் கைகொடுக்கும். ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டால், உங்களுக்கு ஏற்றவரா, நம்பிக்கைக்குப் பாத்திரமானவரா என்று உறுதி செய்த பின்பே அந்த உறவைத் தொடர வேண்டும். இதைத்தானே கற்றுக்கொண்டீர்கள்? நடக்க இருந்த விபத்திலிருந்து தப்பித்தற்காக உங்கள் மனம் மகிழ வேண்டும்! இனி ஒரு புதிய ஆரம்பத்துக்குத் தயாராகுங்கள்.
பெற்றோர் கொண்டுவரும் மாப்பிளையுடன் பேசி உங்களுக்கு ஏற்றவரா என்று குடும்பத்தாருடன் கலந்தாலோசித்த பின் மணந்துகொள்ளுங்கள். ‘அடல்ட்' ஆன பின்னும் சரியான தீர்மானங்கள் எடுக்கத் முடியாதபோது, வழிகாட்டுதலை நாடுவதுதான் புத்திசாலித்தனம்.