

என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. விமானப் பொறியியல் முடித்து விட்டு சேலத்தில் வசிக்கிறேன். கணக்கில் புலி என யாரேனும் சொல்லிவிட்டால் போதும் பள்ளிக்கூட நாட்களின் பேச்சுகள் நினைவுக்கு வந்துவிடும். வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போதே அடுத்த சனிக்கிழமை எப்போது வரும் என்று கணக்குப் போட ஆரம்பித்துவிடுவேன்.
ஒவ்வொரு நாளாகக் குறைந்துகொண்டே வரும். நாளின் எண்ணிக்கை குறையக் குறைய மனதில் சந்தோஷம் அதிகரித்துக் கொண்டே வரும். கல்லூரிக்கு வந்த பின்னரும் இந்தப் பழக்கம் தொடர்ந்தது. கணக்கு போட்டு விடுமுறையை எதிர்பார்க்கும் உள்ளம் அப்படியேதான் இருந்தது.
இப்போது வாரம் முழுக்கப் புத்தகங் களைப் படிப்பதும் ஏதாவது எழுதுவதும் எனப் பொழுதைக் கழிக்கிறேன். வார இறுதி நாளில் பள்ளி நண்பர்கள் அனைவரும் சினிமாவுக்குப் போவோம். இல்லையெனில் நண்பர்களுடன் பெண்கள் காதல், காமம் என ஜாலியான அரட்டை அடிப்பது எனப் பொழுது கழிகிறது.
எங்களைப் பொறுத்தவரை சினிமாவுக்குப் போவதுதான் வாழ்வின் வேடிக்கையான அனுபவம். யார் நடித்த படமாக இருப்பினும் தொண்டை கிழியக் கத்துவோம். சமீபத்தில் கொஞ்சமும் பயமுறுத்தாத பேய்ப் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தோம். இடையில் மின்சாரம் நின்றுபோனது.
திரையரங்கம் முழுக்க வயதானவர்களால் மட்டுமே நிறைந்திருந்தது. இத்தனைக்கும் படம் வெளியான இரண்டாம் நாள்! மின்சாரம் தடைப்பட்ட உடன் “ஃபேன சீக்கிரம் போடுய்யா வேகுது… படத்தகூட அப்பறம் போடு” எனக் கத்த ஆரம்பித்தோம். தியேட்டரில் இருந்த சில பெரியவர்கள் சிரித்ததும் இன்னும் அதிகமாகக் கத்தினோம். படம் ரொம்ப மொக்கையாக இருந்தால் தூங்கிவிடுவோம்!
வெள்ளிக்கிழமையின் ராத்திரியே எனக்கான வீக்கெண்ட் கொண்டாட்டம் ஆரம்பித்துவிடும். சமீபத்தில் படித்த புத்தகத்தை அப்படியே மனத்தில் ஓட்டிப் பார்ப்பது. நண்பர்களுடன் கடந்த வாரம் கழித்த வார இறுதி நாட்கள் பற்றிய சந்தோஷத்தில் மூழ்குவது. வானத்தைப் பார்த்தபடி மனத்தில் தவழும் கற்பனையில் மிதப்பது.
விடியலில் நண்பர்களுடன் கொண்டாடும் தருணத்தை ஆசையோடு எதிர்பார்ப்பது. இவையெல்லாம் அந்தக் கொண்டாட்டத்தின் பகுதிகள் வீக் எண்ட் நாட்கள் மட்டும் விரைவாக முடிந்துவிடுகிறதே என்ற எண்ணம் எப்போதும் எழும். ஒவ்வொரு வீக் எண்டும் முடியும்போது அடுத்த வீக் எண்ட் வரையான ஐந்து நாட்களை ஓட்ட வேண்டுமே என்ற எண்ணம் மனத்தில் எழுந்துவிடும். இன்னும் மனதில் அந்தப் பள்ளிக்கூடப் பழக்கம் போகவே இல்லை. வாரம் முழுவதுமே வீக்கெண்டாக இருக்கக் கூடாதோ!!!
‘இது என் வீக்எண்ட்’ பகுதியில் நீங்களும் உங்கள் வீக்எண்ட் அனுபவங்களை ஜாலியாகப் பகிர்ந்துகொள்ளலாம். உங்கள் வீக்எண்ட் கொண்டாட்டங்களை ‘இளமை புதுமை’ வரவேற்கிறது. உங்களைப் பற்றிய விவரங்களுடன் புகைப்படத்தையும் இணைத்து அனுப்புங்கள்.
வயது வரம்பு: 16 - 30.
தொடர்புக்கு: ilamaiputhumai@thehindutamil.co.in
கடிதத் தொடர்புக்கு:
இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை - 600002.