

சினிமாவில் பைக் ஸ்டண்ட்டுகளை ரசிப்பதற்குத் தனி ரசிகர் கூட்டமே உண்டு. பைக் ஸ்டண்ட் ஷோக்கள்கூடத் தற்போது அதிகரித்துவருகின்றன. அதற்கு முக்கியக் காரணம் சந்தையில் ஸ்டைலான பைக்குகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான். தற்போது அழகான-ஸ்டைலான பைக்குகளை ரசிக்க மட்டுமல்ல வாங்கவும் இளைஞர்கள் விரும்புகின்றனர்.
ஆளும் மேலே வீலும் மேலே!
புதுச்சேரியில் பைக் நிறுவனம் ஒன்று தங்கள் மாடல் பைக்குகளைக் கொண்டு ஸ்டண்ட் ஷோ நடத்தியது. வண்டியின் முன்பக்க டயரைத் தூக்கிக்கொண்டு ஓட்டுதல். வண்டி மேல் நின்றுகொண்டு ஓட்டுதல். வண்டியின் முன்பக்க டயரைத் தூக்கியபடி அருகில் ஒரு மாடல் கேட்வாக் செல்ல இணைந்து ஓட்டுதல் எனச் சாகசங்கள் பார்வையாளர்களை அசத்தின.
பலே பாண்டியன்
இந்திகழ்ச்சியில் சாகசங்கள் புரிந்த இளைஞர்களில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த ஹெல்பாய் பாண்டியன். “ஸ்டண்ட் ஷோக்களைத் திறன் வாய்ந்த குழுக்கள் மட்டுமே செய்ய வேண்டும். அதற்குப் பயிற்சி தேவை” என அவர் பேசத் தொடங்கினார். ஸ்டண்ட் ஷோவை எப்படி நடத்த வேண்டும் என்பதை சுயமாக முயன்றும், வெளிநாட்டு வீடியோக்களைப் பார்த்தும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.
கடந்த 8 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட ஷோக்களை ஹெல்பாய் பாண்டியன் நடத்தியுள்ளார். “பிரத்தியேகமான ரேஸ் டிராக்குகளிலும், பெரிய நிகழ்ச்சிகளிலும் மட்டுமே பைக் ஸ்டண்ட் செய்வேன். அதில் பாதுகாப்பு மிக முக்கியம். பைக் ஷோ செய்யும் முன் தொடர் பயிற்சி செய்வேன். தற்போது பலரும் ஸ்டண்ட் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். ஆகவே பலருக்குக் கற்றுத் தருகிறேன். என்னைப் போன்ற பலரின் இலக்கே சர்வதேச பைக் ரேசர் ஆவதுதான்” என உணர்ச்சி பொங்கப் பேசுகிறார்.
வெளிநாடுகளைப் போல இந்த விளையாட்டுக்கு இந்தியாவில் ஏகபோக வரவேற்பு இல்லாவிட்டாலும் சமீபகாலமாக இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது என்கிறார்.
பைக் ஸ்டண்ட் முயற்சிகள் ஆபத்தானவை எனத் தன்னுடைய குடும்பத்தார் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், தனது பயிற்சி, ஆர்வத்தைப் பார்த்து பிறகு ஏற்றுக்கொண்டார்கள் எனக் கூறுகிறார். “பார்வையாளர்களின் கைத்தட்டலைக் கேட்டாலே நாங்கள் பட்ட கஷ்டங்களெல்லாம் மறந்து போயிடும்.
சென்னை, கோவை ரேஸ் டிராக் எனக்கு மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக சர்வதேச ரேஸராக மாறுவேன். அதே நேரத்தில் சாலையில் பைக் ஸ்டண்ட் ஷோவைப் பரிசோதனை செய்து பார்க்காதீர்கள் என்பதுதான் எனது முக்கிய அறிவுரை” என்கிறார் பாண்டியன்.
படங்கள் எம். சாம்ராஜ்