அறிவொளி தேவதைகள்!
உலகிலேயே அற்புதமானவை புத்தகங்கள்! புத்தகங் களைப் படிப்பதும் அதிலிருந்து கற்றுக்கொள்வதும் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய அழகான அனுபவம். இந்த அனுபவம் படிக்க வாய்ப்பற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ‘books with no bounds’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்கள் கனடாவைச் சேர்ந்த எம்மா மற்றும் ஜுலியா சகோதரிகள்.
டிவி இல்லை புத்தகங்கள்தான்
கனடாவில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். ஏழ்மையும் கல்வியறிவின்மையும் அவர்களின் முக்கியமான பிரச்சினைகள். தங்களைப் போன்ற குழந்தைகள் புத்தகங்கள் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் நிலையைக் கண்டு வருந்தினர் 9 வயது எம்மாவும் 10 வயது ஜுலியாவும். இருவரும் தீவிரமாக யோசித்து, படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்குப் புத்தகங்களை வழங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்.
“மனித வாழ்க்கையில் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்யக்கூடியவை புத்தகங்கள். எங்கள் வீட்டில் டிவி கிடையாது. புத்தகங்களைத்தான் எங்கள் பெற்றோர் அறிமுகம் செய்து வைத்தனர். நல்ல புத்தகங்களைத் தேடித் தேடிப் படிப்போம். கிறிஸ்துமஸ், பிறந்தநாளுக்குக் கிடைக்கும் பணத்தை வைத்து, மலிவு விலை பதிப்பில் வெளியாகும் புத்தகங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு வந்துவிடுவோம்” என்கிறார் எம்மா.
எம்மாவும் ஜுலியாவும் தங்கள் எண்ணத்தை அம்மாவிடம் சொன்னார்கள். அம்மாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பழங்குடி மக்களைப் பற்றி மேலும் தகவல்களைத் திரட்டினார்கள்.
“கல்வியறிவு இல்லாததால் பழங்குடி மக்களிடம் அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. நாங்கள் வசிக்கும் இதே நாட்டில்தான் அவர்களும் வசிக்கிறார்கள். ஆனால் எங்களைவிட 5, 6 வருடங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினைகள் அதிக அளவில் பெரும்பாலானவர்களின் கவனத்துக்கு வருவதில்லை என்ற தகவல்கள் எல்லாம் எங்களை அதிர்ச்சியடைய வைத்தன” என்கிறார் ஜுலியா.
பழைய புத்தகங்கள், புதிய திறப்பு
எம்மாவும் ஜுலியாவும் தங்களின் சேமிப்பு முழுவதையும் கொடுத்துப் புத்தகங்கள் வாங்கினார்கள். தங்களிடமிருந்த புத்தகங்களையும் சேர்த்தார்கள். 400 புத்தகங்களை எப்படி அனுப்புவது, யாருக்கு அனுப்புவது என்ற கேள்விகள் வந்தன. அரசாங்கத்தின் உதவியை நாடினர். எந்தெந்த இடங்களுக்கு, யார் மூலம் புத்தகங்கள் அனுப்ப வேண்டும் என்ற விவரங்கள் கிடைத்தன. புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்குப் பிறகுதான் பழங்குடி மக்கள் படிப்பதில் எவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறார்கள் என்பதும், புத்தகங்களின் தேவை அதிகம் இருப்பதும் தெரிய வந்தன.
தொடர்ந்து புத்தகங்களைச் சேகரிக்க முடிவுசெய்தனர். பதிப்பாளர்கள், புத்தகக் கடை உரிமையாளர்களைச் சந்தித்தார்கள். சிறிய குறைபாடுள்ள நல்ல புத்தகங்களை மிகக் குறைந்த விலைக்குத் தர முன் வந்தனர். புத்தகங்கள் சேகரிப்பதைவிட அவற்றை அனுப்புவதற்கு அதிகம் செலவானது. அதனால் பழங்குடிகளுக்காக இயங்கும் அமைப்பிடம் உதவி கேட்டனர். சில தனியார் விமானங்களில் மிகக் குறைந்த செலவில் புத்தகங்களை அனுப்பும் வாய்ப்பைப் பெற்றனர். தனி நபர்கள் செய்வதைக் காட்டிலும் ஓர் அமைப்பு மூலம் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைத்தனர்.
நூலுக்கு எல்லை இல்லை
2012-ல் ‘books with no bounds’ என்ற அமைப்பை உருவாக்கினார்கள். பலரும் புத்தகங்களை நன்கொடையாக அளிக்க முன்வந்தனர். பாடப் புத்தகங்கள், பொது அறிவுப் புத்தகங்கள், கதைப் புத்தகங்கள் என்று அந்த ஆண்டு மட்டும் 20 ஆயிரம் புத்தகங்களைச் சேகரித்தனர். அவற்றுடன் பள்ளிப் படிப்புக்குத் தேவையான பென்சில், நோட்டு, பேனா, ஸ்கேல் போன்றவற்றையும் அனுப்பிவைத்தனர்.
புத்தகங்களைப் பெற்றுக்கொண்ட குழந்தைகளிடமிருந்து ஏராளமான கடிதங்கள் எம்மாவுக்கும் ஜுலியாவுக்கும் வந்து குவிந்தன. சிலர் நன்றி சொன்னார்கள். சிலர் நேரில் வரச் சொல்லி அழைப்பு விடுத்தார்கள். எல்லாக் கடிதங்களிலும் அன்பு நிரம்பி வழிந்தது.
“பழங்குடி மக்களிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறியிருக்கிறது. இன்று அவர்களுடைய குழந்தைகள் படிக்கிறார்கள். அழகாக எழுதுகிறார்கள். இதைவிடச் சந்தோஷமான விஷயம் வேறு என்ன இருக்க முடியும்! புத்தகங்களால் மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும் என்பதை எங்களைப் போல மற்றவர்களும் உணர்ந்திருப்பார்கள்” என்கிறார் எம்மா.
வறுமையிலிருந்து விடுபட…
மூன்று ஆண்டுகளில் எம்மா, ஜுலியாவின் அமைப்பு அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. கனடா, அமெரிக்காவில் மட்டுமல்லாமல் பல உலக நாடுகளுக்கும் புத்தகங்களை அனுப்பிவைக்கிறார்கள். பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்கள், பைகள், எழுது பொருட்கள், விளையாட்டுச் சாமான்கள், கணினிகள், மருந்துகள், கம்பளி ஆடைகள் போன்றவற்றையும் வழங்கிவருகிறார்கள்.
“புத்தகம் நன்கொடை அளிப்பதன் மூலம் குழந்தைகளின் கற்பனை உலக ஜன்னல்களைத் திறந்துவிடுங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கும் இவர்களது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களைப் பார்த்து ஏராளமானவர்கள் இந்த அற்புதமான பணியில் தங்களையும் இணைத்துக் கொண்டுள்ளனர்.
ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் ஏழைக் குழந்தைகள்வரை எம்மா, ஜுலியாவின் உதவி எட்டியிருக்கிறது.
16, 17 வயதுகளில் இருக்கும் எம்மாவும் ஜுலியாவும் இதுவரை 77 ஆயிரம் புத்தகங்களைச் சேகரித்து அளித்திருக்கின்றனர். தங்கள் வாழ்நாட்களில் 3 ஆயிரம் மணி நேரங்களை இந்தப் பணிக்காகச் செலவிட்டிருக்கிறார்கள்.
புத்தகங்கள் வழங்குவதுடன், அந்த இடங்களுக்குச் சென்று பார்வை இடுகிறார்கள். மாணவர்களின் தலைமைப் பண்புகளை வளர்க்கும் விதத்தில் பயிற்சிகளையும் அளித்து வருகிறார்கள். குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் இணைந்து, பணியாற்றுகிறார்கள். ‘World’s Children’s Prize’ ஜுரியில் ஒருவராக இருக்கிறார் எம்மா. கடந்த ஆண்டு இந்த அமைப்பின் மூலம் மலாலாவுக்கு விருது வழங்கியிருக்கிறார்கள்.
எம்மா, ஜுலியாவின் சேவையைப் பாராட்டாத பத்திரிகைகளோ, தொலைக்காட்சிகளோ இல்லை. பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் வாங்கிக் குவித்திருக் கிறார்கள். “படிப்பு மட்டுமே வறுமையில் இருந்து விடுபடும் வழி. எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாமும் கிடைக்கக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை” என்கிறார்கள் இந்த அறிவொளி தேவதைகள்!
