

மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் மாற்றுத் திறனாளியாக இருந்தபோதும் இறகுப் பந்து போட்டி பயிற்சியாளராகக் கன்னியாகுமரியைக் கலக்கிவருகிறார். மாற்றுத் திறனாளி என்பதால் அவர் நான்கு சுவர்களுக்குள் முடங்கிவிடவில்லை. சமூகத்துக்குத் தன்னாலான பங்களிப்பைத் தரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.
பிறந்ததிலிருந்து அவரது வலது கை செயல்படவே இல்லை. ஆனாலும் ஊக்கத்துடன் அவர் சராசரியான மனிதர்களுக்கு இறகுப் பந்து விளையாட்டுக்கான பயிற்சியளித்துவருகிறார்.
அவர் கன்னியாகுமரி மாவட்டம் கேசவன்புத்தன்துறையைச் சேர்ந்த ஜேசு ஆண்டனி அடிமை. எம்.காம் பட்டதாரியான அவர் இறகுப் பந்து போட்டியில் சாதனைகள் பல நிகழ்த்தியுள்ளார்.
அவருடைய தந்தை மரியலிகோரி மீனவர். ஆண்டனியும் விடுமுறை நாள்களில் தந்தையுடன் கடலுக்குப் போய்வருகிறார். “பிறவியிலேயே என்னோட வலது கையில் குறைபாடு இருந்துச்சு. ஆகவே யாரும் இரக்கப்படும் நிலைமைக்கு ஆளாகிவிடக் கூடாதுன்னு உறுதியாயிருந்தேன்” என்று கண்களில் தன்னம்பிக்கையின் வெளிச்சம்படரச் சொல்கிறார்.
அப்படியான முடிவெடுத்ததால் கால்பந்து, இறகுப் பந்து போட்டிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். கடற்கரைக் கிராமத்தில் கடல் மணலில் பலரும் வந்து கால்பந்து விளையாடுவது வழக்கம். அவரும் தினசரி மாலையில் விளையாட்டுகளில் கலந்துகொண்டு தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய தொடர் முயற்சியால் எம்.காம் படித்துள்ள ஜேசு ஆண்டனி அடிமைதான் அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பட்டதாரி. கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இறகுப் பந்து போட்டியில் மாவட்ட, மாநில அளவில் பலமுறை பரிசு பெற்றுள்ளார்.
தேசிய அளவில் 30க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இரட்டையர் பிரிவில் 2-வது இடமும்,ஒற்றையர் பிரிவில் மூன்றாவது இடமும் பெற்றிருந்தார். 2010-ம் ஆண்டு இஸ்ரேலில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உலக தரவரிசை போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார்.
பெரும்பாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட மைதானம் கிடைப்பதில்லை, அந்தச் சிக்கலைத் தான் எதிர்கொண்டதாகவும் ஆனால் தன் ஆசிரியர் மூலம் கங்காதரன் என்பவருடன் ஏற்பட்ட அறிமுகம் திருப்புமுனையாக அமைந்தது என்றும் தெரிவிக்கிறார். கங்காதரனிடம் பயிற்சிபெற்றுள்ளார்.
அவர் கொடுத்த ஊக்கமும், உற்சாகமுமே தன்னைத் தொடர்ந்து இயக்கத் தொடங்கியது என்று உற்சாகமாகச் சொல்கிறார். முறையான பயிற்சி கிடைத்ததால் கடந்த ஓர் ஆண்டாகப் பயிற்சியாளராக இருந்து வருகிறார். நாகர்கோவில் டென்னிஸ் கிளப், கூடங்குளம் அணு மின் நிலைய ஊழியர்களின் குழந்தைகள், நாகர்கோவில் இந்து கல்லூரி ஆகிய இடங்களுக்குச் சென்று பயிற்சியளித்து வருகிறார்.
தன் தனித் திறமையால் இறகுப் பந்து விளையாட்டுப் பயிற்சியாளராக மாறியிருக்கும் ஜேசு ஆண்டனி அடிமைக்கு அதை முறைப்படி படித்துச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதே விருப்பம். “பெங்களூரில் உள்ள இறகுப் பந்து போட்டி பயிற்றுநருக்கான பயிற்சி மையத்தில் சேர கடந்த மூன்று ஆண்டுகளாக விண்ணப்பித்து வருகிறேன். ஆனால் மாற்றுத் திறனாளி என்பதால் தொடர்ந்து எனது விண்ணப்பத்தை நிராகரிக்கிறார்கள்” என்று தெரிவித்த அவரிடம் ஆனால் அதை அடைவதே எனது லட்சியம் என்ற உறுதி தென்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் விளையாட்டு துறை சார்ந்த கல்வியில் இல்லை என்பதற்கு ஆண்டனி ஒரு நடைமுறை உதாரணம். தடைகளைத் தன்னால் தகர்க்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் பயணத்தைத் தொடர்கிறார்.
விளையாட்டு துறை சார்ந்த கல்வியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய அங்கீகாரம் இல்லை என்பதற்கு ஆண்டனி ஒரு நடைமுறை உதாரணம்.