

வந்துட்டான்யா வந்துட்டான்! வரும் ஆனா வராது! நான் ஒரு தடவே சொன்னா நூறு தடவச் சொன்ன மாதிரி! இப்படி நண்பர்களுடன் பேசும்போதே சீன் போடுற பார்ட்டியாக நீங்கள் இருந்தால் நிச்சயம் ‘டப்ஸ் மாஷ் அப்’ உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
உங்களுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் நடிகரைத் தட்டி எழுப்பும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்தான் இது. இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து உங்களுக்குப் பிடித்த நடிகர்களின் வசனங்களை உங்களது முகப் பாவனையில் அவர்களது குரலில் பேசலாம்.
அதெப்படி? டப்ஸ் மாஷ் ஆப்பில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் படங்கள் என பஞ்சு டயலாக்குகள் பதிவாகியிருக்கும். அது மட்டுமல்லாமல் அரசியல்வாதிகள், பிரபலங்களின் முக்கிய வசனங்களும் ஒரு குரல் வங்கிபோலச் சேமிக்கப்பட்டிருக்கும்.
அதில் ஏதோ ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் ஸ்மார்ட் போன் செல்ஃபி கேமரா தானாகவே ஆன் ஆகிவிடும். உடனடியாக அந்த வசனம் ஒலிக்கும் அதன் வரிகளும் ஓடும்.
இப்போது அந்த வசனம் ஆடியோவாக ஓட அந்தப் படத்தில் நடிகர் காட்டிய ரியாக்ஷனை நீங்களே நடித்துக் காட்டி அதை வீடியோவாகப் பதிவு செய்வதுதான் டப்ஸ்மாஷ். இதில் நடிகர் வடிவேலு மற்றும் ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள்தான் எக்கச்சக்கமாக பதிவு செய்யப்பட்டுப் பேஸ் புக்கில் ஷேர் செய்யப்படுகின்றன.