Last Updated : 22 May, 2015 03:17 PM

 

Published : 22 May 2015 03:17 PM
Last Updated : 22 May 2015 03:17 PM

துறுதுறு துப்பறியும் விளையாட்டு

கண்விழித்துப் பார்த்தபோது, சுற்றிலும் இருட்டு, கைகள் விலங்கிடப்பட்டிருந்தன, ஒருவிதமான பயம் தொற்றிக்கொள்ள அங்கிருந்து எப்படித் தப்பிப்பது என்று யோசித்தோம்.

பயப்பட வேண்டாம், எங்களை யாரும் கடத்தவில்லை, நுங்கம்பாக்கத்திலுள்ள ஃப்ரீயிங் இந்தியாவின் ‘தி லாஸ்ட் சேம்பர்’ விளையாட்டைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. சிறியவர்களுடன் சேர்ந்து பெரியவர்களுக்கும் விடுமுறை தேவைப்படுகிறது. இதோ பெரிய பிள்ளைகளுக்காகவும் சிறுவர்களுக்காகவும் இந்தியாவிலேயே முதல் முறையாக எஸ்கேப் ரூம் கேம்ஸ். ஆக்‌ஷன், ஹாரர், த்ரில்லர் எல்லாம் கலந்து, சினிமாவில் இருப்பது போன்ற உணர்வைத் தந்து, பொழுதுபோக்குக்கு ஒரு புதிய அர்த்தத்தைக் கொடுக்கிறது ஃப்ரீயிங் இந்தியா.

வீடியோ கேமில் பிள்ளைகள் எப்போதும் மூழ்கிக் கிடக்கின்றனர் என்று வருத்தமா? அவர்களை உண்மையிலேயே வீடியோ கேமுக்குள் அழைத்துச் செல்லுங்கள். குடும்பத்துடன், அனைவரும் இங்கே சென்று விடுமுறை நாளைக் கழிக்கலாம். இந்த விளையாட்டை ஒரு குழுவாகச் சேர்ந்து விளையாடும்போது ஒற்றுமையும், படைப்பாற்றல் திறனும், நம்பிக்கையும் வளர்வதாகக் கூறுகின்றனர்.

ஃப்ரீயிங் இந்தியா மொத்தம் நான்கு விளையாட்டுகளை நமக்காகத் தருகிறது. அதிநவீனமாக வடிவமைக்கப்பட்டுள்ள அறைகளில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு அந்த அறையில் இருந்து, நிர்ணயிக்கப்பட்டுள்ள நேரத்துக்குள் தப்பிக்க வேண்டும். வீடியோ கேம்ஸ் பிரியர்களின் வெகு நாள் கனவை உண்மையாக்கி இருக்கிறார்கள். ஒரு வீடியோ கேமுக்குள் சென்று விளையாடுவது போன்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறார்கள்.

தி லாஸ்ட் சேம்பர் (The Lost Chamber)

உங்களை யாரோ கடத்திவிடுகின்றனர், நீங்கள் கண் விழித்துப் பார்க்கும்போது இருட்டறை ஒன்றில் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் டார்ச் விளக்கைக் கண்டுபிடித்து, அங்கே இருக்கும் புத்தகங்கள் மற்றும் பயணப் புகைப்படங்களைக் கொண்டு புதையல் பெட்டியையும், அங்கிருந்து தப்பிக்கும் வழியையும் கண்டுபிடித்துத் தவழ்ந்து வெளியே வர வேண்டும்.

இதை விளையாடிய மாணவி பவித்ரா, தான் உண்மையிலேயே ஷெர்லாக் போன்று உணர்ந்ததாகவும், இது ஒரு மறக்க முடியாத புது அனுபவமாக இருந்ததாகவும் கூறினார்.

லவ் ஆஃப் மிரர்ஸ் (Love Of Mirrors)

உங்கள் பக்கத்து வீட்டுக்காரப் பெண் எதனா (Athena) காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, கண்ணாடித் துண்டால் தன் கையை அறுத்துக்கொண்டு ஓரறையில் பதுங்கிக்கொள்கிறார். அவர் வீட்டுக்குச் செல்லும் நீங்கள் 45 நிமிடத்துக்குள் அவரைக் கண்டுபிடித்து, அந்த அறையில் இருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பு பரீட்சைக்குப் பின் தன் நண்பர்கள் பட்டாளத்துடன் வந்திருந்த பிரகாஷ், இந்த விளையாட்டின் தீம் மிகவும் பிடித்ததாகவும், 45 நிமிடங்கள் போனதே தெரியவில்லை என்றும் கூறினார்.

ப்ரிசன் கேயாஸ் (Prison Chaos)

ஒரு கிறுக்கு விஞ்ஞானி, ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளைச் சிறைப்பிடித்து அவர்களை நிலத்தடிச் சிறையில் அடைத்துப் பல ஆராய்ச்சிகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறார். நீங்கள் அங்கே சென்று குறிப்புகளைக் கொண்டு விஞ்ஞானிகளைக் காப்பாற்ற வேண்டும்.

இந்த விளையாட்டை விளையாடிய தாய் ஒருவர், தன் மகனுடன் சேர்ந்து வெகு நாட்கள் கழித்து ஒன்றாக இதுபோல் விளையாடுவது மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறினார்.

90 டிகிரி கிரிக்கெட் ஃபேண்டஸி (90 Degree Cricket Fantasy)

கிரிக்கெட் ரசிகரான உங்கள் நண்பர், தன் பெரும்பாலான நேரத்தை கிரிக்கெட் பார்ப்பதிலும், பந்தயத்திலும் செலவிடுகிறார். அவர் அண்மையில் சூதாட்டத்தில் சிக்கி, மாஃபியாவிடமிருந்து தப்பிக்க தன் வீட்டில் பல பொறிகளை அமைத்து அங்கிருந்து வெளியேறுகிறார். இதைப் பற்றித் தெரியாமல் நீங்கள் அவர் வீட்டுக்குச் சென்று சிக்கிக்கொள்கிறீர்கள். கேட்ஜெட்டுகள், குறிப்புகள், புதிர்கள் ஆகியவற்றை வைத்து அங்கிருந்து தப்பிக்கவேண்டும்.

சக பணியாளர்களுடன் வந்திருந்த கிரிக்கெட் ரசிகரான அசோக், இங்கே இன்னும் பல புதிர்களும் கருவிகளும் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், சென்னையில் இன்னும் பல இடங்களில் இது போன்ற புதுவிதமான விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் சொன்னார்.

இந்த விளையாட்டுகள் மட்டுமின்றிப் புதிதாக பாம் டிஃபூசர் (Bomb Defuser) என்ற விளையாட்டையும் கூடிய விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், அது அறிவியல் தொழில்நுட்பங்களுடனும், புதிய கேட்ஜெட்களுடனும் வரவிருப்பதாகவும், ஃப்ரீயிங் இந்தியாவின் நிறுவனரும் இயக்குநருமான முரளி D பாரதி கூறுகிறார்.

அவர் மேலும் பேசுகையில், ஃப்ரீயிங் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள நல்ல வரவேற்பால் இன்னும் சில மையங்கள் தொடங்குவதைப் பற்றி ஆலோசித்து வருவதாகக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x