

நாய்கள் தங்கள் எஜமானர்களை அதிக நேரம் வெறித்துப் பார்க்கும்போது எஜமானர்களின் தலையில் ஹார்மோன் எழுச்சி அடைகிறது. அந்த ஹார்மோனின் விரைவு நடவடிக்கைதான் இருவரையும் பிரியம் கொள்ளத் தூண்டுகிறது என்று ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக நீடிக்கும் மனிதர்கள்-நாய்கள் நட்புக்கு இந்த ஹார்மோன் அடையும் உற்சாகம்தான் காரணமாம். அந்த ஹார்மோனின் பெயர் ஆக்சிடோசின். எஜமானர்களுக்கு கிடைக்கும் உற்சாகம் அதே அளவு நாய்களின் மூளையிலும் நிகழும் என்கின்றனர்.
இதே ஆக்சிடோசின் ஹார்மோன் தான், குழந்தையின் கண்களைத் தாய் பார்க்கும்போதும் அவருடைய மூளையில் பெருகிவழியுமாம். இந்த உடல்ரீதியான விளைவுதான் தாய்மை உணர்வை உருவாக்குகிறது. அத்துடன் அந்த நிகழ்வு தாய்க்கும் குழந்தைக்கும் உள்ளப் பிணைப்பையும் அதிகரிக்கிறது.
நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இவ்வளவு சிறப்பான பிணைப்பு ஏன் திகழ்கிறது என்பதைப் புலனாய்வு செய்வதற்கு சில வேடிக்கையான பரிசோதனைகளையும் விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். 30 நாய் உரிமையாளர்களை அரைமணி நேரம் அவரவர் செல்லப் பிராணிகளுடன் விளையாடச் செய்தனர்.
அவற்றில் ஆண் நாய்களும் பெண் நாய்களும் உண்டு.விளையாட்டுக்கு முன்னும், பின்னும் எஜமானர், பிராணிகள் இரு தரப்பினரிடமும் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனைகளில் ஹார்மோன்கள் கிளர்ச்சி அடைந்திருப்பது தெரியவந்தது.
மனிதர்களுடன் ஏன் நாய்கள் இணக்கமாக இருக்கின்றன என்பது குறித்து ஆழமாக அறிந்துகொள்வதன் வழியாக நமது நாகரிகத்தின் தொடக்கத்தை நோக்கிப் போகலாம்.