Last Updated : 29 May, 2015 07:24 PM

 

Published : 29 May 2015 07:24 PM
Last Updated : 29 May 2015 07:24 PM

வேலு நாயக்கரின் பேத்தியும் பாட்ஷாவின் மகனும்

எந்தத் துறையாக இருந்தாலும் தற்போது இருக்கும் தலைமுறையைவிட அடுத்த தலைமுறையினரின் திறமை மேலோங்கி இருக்கும். இதற்குத் திரைப்படத் துறையும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் எல்.வி.பிரசாத் திரைப்பட, தொலைக்காட்சி அகாடமியின் பத்தாண்டு நிறைவையொட்டி, முன்னாள் மாணவர்கள் எடுத்த குறும்படங்களைத் திரையிட்டனர். இதில் சில குறும்படங்கள் தேசிய அளவிலும் உலகின் பல பகுதிகளில் நடக்கும் குறும்பட விழாக்களிலும் பங்கெடுத்துப் பரிசுகள் பெற்ற படங்களாக இருந்தன.

தேசிய விருது பெற்ற குறும்படம்

புராணக் காலச் சம்பவங்களை அடியொற்றி புனையப்பட்ட ஃபேன்டஸி வகைப் படமாக இருந்தது சியாம் சுந்தர் இயக்கிய ‘மத்ஸ்யாவதாரம்’. காதல், ஆக்‌ஷன், துரோகம் இவற்றின் கலவையாக இருந்தது ‘ட்வைஸ் அபான் எ டைம்’ (Twice upon a time). தகவல் தொழில்நுட்பத்தின் உச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய தலைமுறைக்கு, ‘ஊருக்குப் போய்க் கடுதாசி போடுங்க’ என்னும் பழைய திரைப்படத்தின் வசனங்கள் ஆச்சரியத்தை அளிக்கும். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குக்கிராமங்களில் ஏற்பட்ட மாறுதல்களைக்கூட மிகவும் நுட்பமாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் ஒரு தபால்காரரின் வழியாகவே உரக்கப் பேசும் படம் ‘தி போஸ்ட்மேன்’. சிறந்த குறும்படத்துக்கான தேசிய விருதை வென்றிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் மனோகர்.

அரிசி 2 ரூபாய்

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளர் எம்.கே.போல்வாரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் ‘கப்பு கல்லினா சைத்தானா’. மகள், மருமகள், பேரனோடு ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் குன்றில் வசிக்கிறார் ஒரு மூதாட்டி. ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 10 கிலோ அரசு தருவதாக ஊரில் பேசிக் கொள்கிறார்கள். அரிசியை அதிகம் பெற வேண்டி, கூரையால் வீட்டுக்குள் தடுப்பு எழுப்பி மூன்று தனிக் குடும்பங்களாக வசிப்பதாக அதிகாரிகளிடம் கூறத் திட்டமிடுகிறார்கள்.

ஊரிலிருந்து அவர்களின் வீட்டை நோக்கிவரும் இருவரை, அரசு அதிகாரிகள் என நினைத்துத் தாங்கள் மூன்று குடும்பங்களாக வாழும் விஷயத்தைக் கூறுகின்றனர். வந்தவர்கள் தாங்கள் அரசு அதிகாரிகள் அல்ல, ஜமாத்திலிருந்து வருகிறோம். மசூதி கட்டுவதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு உண்டியைக் கொடுக்கிறோம். நீங்கள் மூன்று குடும்பங்கள் ஆகவே மூன்று உண்டிகளைத் தருகிறோம். வாரம் 2 ரூபாய் அதில் போட்டுவிடுங்கள் என்கின்றனர். பீடி சுற்றி வறுமையோடு போராடும் அந்தக் குடும்பத்தின் சோகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

வேலு நாயக்கரின் பேத்தி…

காதல், ஆக்‌ஷன், ரொமான்ஸ், புதுமை எல்லாவற்றையும் கேப்ஸ்யூலாக ஒரு குறும்படத்துக்குள் தந்திருக்கும் படம் நாயகியின் மாணிக்கம். கவனத்தை ஈர்க்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் பரணி.

கோயிலுக்குள் நாயகன், நாயகியைச் சுற்றிவளைக்கின்றனர் எதிரிகள். இந்த இடத்தில் சண்டை வேண்டாம் என்கிறான் நாயகன். இருவரையும் ஆம்புலன்ஸில் நகருக்கு வெளியே இருக்கும் மைதானத்துக்குக் கொண்டு செல்கின்றனர் ரவுடிகள். போகும்போது, ‘நீ உண்மையில் யார்? உன்னை ஏன் ரவுடிகள் துரத்துகின்றனர்?’ என நாயகியிடம் கேட்கிறார் படத்தின் நாயகன். அதற்கு நாயகி, “நான் வேலு நாயக்கரின் பேத்தி” என்கிறாள்.

நாயகி, ரவுடிகளிடம் “உங்களுக்கு வேண்டியது நான்தானே இவரை விட்டுவிடுங்கள்” என்கிறார்.

ரவுடிகளோ, “நாங்கள் தூக்க நினைத்ததே அவனைத்தான். நீதான் தேவையில்லாம வந்து மாட்டிக்கிட்டே” என்கின்றனர்.

இப்போது படத்தின் நாயகி, நாயகனிடம் ஏன் இவர்கள் உங்களைக் கொல்லத் துடிக்கிறார்கள் என்கிறாள். அதற்கு நாயகன், “என் பெயர் மாணிக்கம். எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது” என்கிறார். இருவரும் சேர்ந்து ரவுடிகளைத் துவம்சம் செய்கின்றனர்.

இது எப்படி இருக்கு?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x