

மின்சாரம்,மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டுச் சில நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் இன்னும் மின்சார வசதி கிடைக்காமல் 160 கோடி பேர் மக்கள் உலகில் வசித்துவருகிறார்கள். சூரியன் மறைந்தவுடன் இவர்களின் வாழ்க்கையும் இருளடைந்துவிடுகிறது.
குறிப்பாகப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மின்சாரம் இல்லாத இடங்கள் ஆபத்தானவையாக இருக்கின்றன. மின்சாரம் இல்லாமல் படிப்பது, சமைப்பது, எந்த வேலையும் செய்வது கடினமான காரியமாக இருக்கிறது. உணவு, உடை, இருப்பிடத்துக்கு அடுத்த இடத்தில் விளக்கின் தேவை இருக்கிறது.
விளக்கை ஏந்திய தோழிகள்
அமெரிக்காவில் வசிக்கும் ஆண்ட்ரியா ஸ்ரெஸ்டாவும் அன்னா ஸ்டார்க்கும் பள்ளித் தோழிகள். ஒரு புராஜக்ட் செய்வதற்காகச் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியைச் சேமித்து, இரவு நேரங்களில் ஒளிரும் விளக்குகளை உருவாக்கினார்கள். பள்ளியில் ஏகப்பட்ட வரவேற்பு! தொடர்ந்து சூரிய விளக்கில் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் செய்துவந்தனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆண்ட்ரியாவும் அன்னாவும் கட்டிடவியல் படித்துக்கொண்டிருந்தனர். 2010-ல் ஹைதியில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் நொறுங்கி விழுந்தன. உயிர்கள் பலியாயின. ஆண்ட்ரியாவுக்கும் அன்னாவுக்கும் செய்திகளைப் பார்க்கப் பார்க்க மிகவும் கஷ்டமாகிவிட்டது.
“மக்கள் கூடாரங்களில் தங்கியிருந்தனர். எங்கும் இருள். மோசமான சூழ்நிலையிலும் மோசமான காரியங்களைச் செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள். கடத்தல், பாலியல் வன்முறைகள், திருட்டு என்று பல்வேறு குற்றங்களும் அரங்கேறிய செய்தி எங்களை உறைய வைத்துவிட்டது. உடனே எங்கள் சூரிய ஒளி விளக்குகளை அங்கே அனுப்பிவைக்க முடிவு செய்தோம்” என்கிறார் ஆண்ட்ரியா.
பகலில் சேமிப்பு, இரவில் பயன்பாடு
விலை குறைவான, எடை குறைவான, தண்ணீரில் மிதக்கக்கூடிய, காற்றால் நிரப்பக்கூடிய சூரிய ஒளி விளக்குகளை இவர்கள் தயாரித்தனர். பகல் நேரத்தில் சூரிய ஒளி மூலம் பேட்டரியில் மின்சக்தியைச் சேமித்துக்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் விளக்காகப் பயன்படுத்த வேண்டும். 4 மணி நேரம் இந்த விளக்கு வெளிச்சம் தந்துகொண்டிருந்தது. இதற்காக ‘லூமின் ஏய்ட்’ (luminAid) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
அமெரிக்காவில் இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் போன்றவற்றைத் தொடர்புகொண்டனர். விளக்குகள் தயாரிப்புக்கான பணத்தை நன்கொடையாகப் பெற்றனர். ஹைதியில் 80 சதவிகித மக்கள் இருளில் இருந்தனர். அவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்குச் சூரிய ஒளி விளக்குகள் அனுப்பிவைக்கப்பட்டன.
அமெரிக்காவின் இளம் தொழிலதிபர்கள்
கொலம்பியா பல்கலைக்கழகம் மூலம் ஆண்ட்ரியா, அன்னா உட்பட ஒரு குழு ஜப்பானுக்குச் சென்றது. அங்கே உள்ள கட்டிடங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தபோதுதான் மிகக் கோரமான பூகம்பமும் சுனாமியும் ஏற்பட்டன. பேரழிவில் சிக்கித்தவித்த மக்களைக் காப்பாற்ற மேம்படுத்தப்பட்ட சூரிய விளக்கைத் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர். பகலில் 7 மணிநேரம் சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் வரை வெளிச்சம் தரக்கூடிய அளவுக்குக் கொண்டுவந்தனர். இந்த வெளிச்சம் குழந்தைகள் படிப்பதற்கும், அவர்களுக்கு உணவு சமைப்பதற்கும் போதுமானது.
அமெரிக்காவின் இளம் தொழிலதிபர்களாகத் தேர்வு செய்யப்பட்டு, தொழிலை மேலும் முன்னேற்ற வழங்கப்பட்ட கடன்களையும் பெற்றுக்கொண்டனர். தொழில் வேகமாக வளர்ந்தது. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் விளக்கு சென்றடைந்தது. 1,500 பேர் கலந்துகொண்ட இளம் கண்டுபிடிப்பாளர்கள் போட்டியில் லுமின்எய்ட் சிறந்த கண்டுபிடிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. சுற்றுச் சூழலுக்கு உகந்த விளக்காகவும் அறிவிக்கப்பட்டது. 65 லட்சம் ரூபாய் பரிசாகக் கிடைத்தது. தொழில் விரிவுபடுத்தப்பட்டது.
இந்தியா வந்த தேவதைகள்
கடந்த 5 ஆண்டுகளில் 50 நாடுகளில் அன்னா, ஆண்ட்ரியா சூரிய விளக்குகள் வெளிச்சத்தைப் பரப்பி வருகின்றனர். இந்தியாவுக்கும் இந்தத் தோழிகள் வந்தனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல கிராமங்களுக்கு விளக்குகளை வழங்கியிருக்கிறார்கள்.
சமீபத்தில் நேபாள பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விளக்குகளை வழங்கிவருகிறார்கள். விளக்குகளின் தேவை உலகம் முழுவதும் இருந்துகொண்டே இருக்கிறது. அதில் சிறிய பங்களிப்பையாவது செலுத்தும் வாய்ப்புக் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி என்கிறார்கள் இந்தத் தோழிகள்.