Published : 15 May 2015 03:33 PM
Last Updated : 15 May 2015 03:33 PM

மாறும்வரை போராடு

சினிமா, சாட்டிங் எனக் காலத்தை வீணடிக்கும் இளைஞர்கள் மத்தியில், சமுதாய சேவைகளுக்காக இணைந்திருக்கும் திருச்சி `சுழியம்’ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆரவாரமின்றி, சமூக மேம்பாட்டுப் பணிகளைச் செய்து அமைதிப் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளியில் பயிலும்போதே சமூகச் சிந்தனைகளை ஏற்படுத்திக்கொண்ட மாணவர்கள், கல்லூரியில் கால் வைத்தவுடன் தங்களது சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்துள்ளனர்.

மாற்றம் வேண்டும்

‘சுழியம்’ இதுதான் மாணவர்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்திவரும் அமைப்பின் பெயர். அதென்ன ‘சுழியம்’என்று கேட்டதற்கு, “எந்த ஒரு நிகழ்ச்சியும் பூஜ்ஜியத்தில் இருந்துதான் ஆரம்பிக்கும். நாங்களும் எங்கள் முயற்சியை அப்படித்தான் தொடங்கியுள்ளோம்” என்கிறார் அமைப்பின் தலைவர் செல்வகுகன்.

‘மாற்றம் வேண்டும், மாற்றதைக் கொண்டு வர’ என்ற வாசகமே இவர்களது தாரக மந்திரம். ‘சுழியம்’அமைப்பின் மூலம் ‘விடியல், சிகரம் தொடு, டாக்டர் சுழியம்’ என மூன்று திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். 2011-ல் தொடங்கப்பட்ட சுழியம் அமைப்பில் 13 மாணவர்கள், 7 மாணவியர் உட்பட 20 பேர் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். 30-க்கும் மேற்பட்ட ஜூனியர் மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

விடுமுறை நாட்களில்...

இவர்கள் அனைவரும் ஒரே கல்லூரியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது ஆச்சரியம். திருச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாஸ்த்ரா, பி.ஆர்.பி, சாரநாதன், பிஷப் ஹீபர், எம்ஐடி, கேர் உள்ளிட்ட வெவ்வேறு கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.

ஒவ்வொரு திட்டத்துக்கும் ஒரு திட்ட மேலாளர், அவருக்குக் கீழ் 7 முதல் 10 பேர் கொண்ட குழுவாகச் செயல்படுகிறார்கள். பெரும்பாலும் கல்லூரி விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒன்றிணைந்து பணியாற்றுகிறார்கள்.

ஆதரவற்ற மாணவ, மாணவியர் தங்கிப் படிக்கும், விடுதியுடன் கூடிய பள்ளிகளே இக்குழுவின் முதல் சாய்ஸ். ‘விடியல்’ திட்டக் குழுவினர், இந்தியப் பொருளாதாரம் குறித்தும், இந்தியத் தயாரிப்புகளை வாங்குவதால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார உயர்வு, பேஸ்புக், வாட்ஸ்-ஆப் பயன்பாட்டால் ஏற்படும் நன்மை, தீமைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த குழு தயார்

அடுத்து, ‘சிகரம் தொடு’ குழுவினர். இவர்களின் முக்கிய இலக்கு சுகாதாரம் மற்றும் பொது அறிவுக்கான தேடல். இவற்றை மக்களிடம் கொண்டுசேர்ப்பதே இக்குழுவின் முதன்மை நோக்கம்.

மூன்றாவதாக ‘டாக்டர் சுழியம்’, இந்தக் குழுவினர் தங்களுக்கு அறிமுகமான, சேவை மனப்பான்மை கொண்ட டாக்டரை அழைத்துச் சென்று, மாணவ, மாணவியருக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து தருவதுடன், வாரந்தோறும் ஏதாவது ஒரு பள்ளியில் மருத்துவச் சேவையாற்றுகிறார்கள்.

சுழியத்தின் முக்கிய உறுப்பினர்களுக்கு இந்தக் கல்வியாண்டுடன் படிப்பு முடிவதால், வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். “அடுத்தகட்டமாக அமைப்பில் ஆர்வமாக இயங்கும் ஜூனியர் மாணவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள் என்பதைக் கண்காணிப்போம்” என்கிறார் செல்வகுகன்.

குற்றங்கள் பூஜ்ஜியம் ஆகவேண்டும்

குழந்தைத் தொழிலாளர் முறை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் குழந்தைகள் எனச் சமூகத்தில் நடக்கும் வேண்டத்தகாத செயல்கள் எல்லாம் குறைந்து, எப்போது குற்றங்கள் பூஜ்ஜியம் ஆகிறதோ அதுவரை ‘சுழியம்’ அமைப்பின் செயல்பாடுகள் தொடரும் என்கிறார் அவர்.

வருங்காலத் தலைமுறையான பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைத் தொய்வின்றித் தொடர்வோம் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார் செல்வகுகன். “சமூக நலனில் ஆர்வமும், அக்கறையும் கொண்ட மாணவர்கள் எங்களுடன் கைகோக்கலாம்” என்று உற்சாக அழைப்பும் விடுக்கிறார் அவர். சமுதாய மாற்றத்தை எதிர்நோக்கிப் போராடும் இந்த இளைய பட்டாளத்தில் இன்னும் நிறைய கரங்கள் இணையட்டும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x