

தத்தித் தத்தி அன்ன நடை பயிலும் இரண்டு வயதுப் பிஞ்சு மழலை சகஸ்ரா. எந்தப் பக்கத்தில் எந்த நாட்டு தேசியக் கொடியைக் காட்டினாலும், நொடியில் நாட்டின் பெயரைச் சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். மகளின் அசாத்தியத் திறமையை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு சாதனைக்காக விண்ணப்பித்துள்ளார்கள் சேலத்தில் வசிக்கும் சக்ஸ்ராவின் அம்மா ராதிகாவும், அப்பா பாலாஜியும்.
சொன்னதைச் சொல்லும் அறிவுப் பிள்ளை
சகஸ்ரா ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே அவளுடைய நினைவாற்றலைக் கண்டு அவருடைய தாய் ராதிகா வியந்துபோனார். சகஸ்ராவிடம் விலங்குகள், காய்கறி, பழங்கள், வண்ணங்களின் படங்களைக் காண்பித்து அதன் பெயர்களை உச்சரித்தார். சட்டெனப் படங்களை அடையாளம் கண்டு, ஒவ்வொன்றின் பெயரையும் அச்சு பிறழாமல் கொஞ்சும் மழலையில் கூற ஆரம்பித்தார் சுட்டிக் குழந்தை சகஸ்ரா.
ஒரு வாரம் கழித்து அம்மா காண்பித்துக் கேட்ட படங்களுக்கு உரியனவற்றை அப்படியே கூறினார். அசந்துபோன அவர் அம்மா, ஆங்கில மாதம், வாரம், தமிழ் மாதங்களை மகளுக்குச் சொல்லித்தந்தார். சகஸ்ராவின் நினைவுத்திறனைக் கண்டு பூரித்துப்போன ராதிகா, அடுத்த முயற்சியாக சகஸ்ராவுக்கு உலக நாடுகளின் கொடியைப் படமாகக் காட்ட ஆரம்பித்தார். இரண்டு வயதை எட்டிய சகஸ்ரா கொடிகளை நன்கு கண்டுணர்ந்து, நாடுகளின் பெயரை நினைவில் நிறுத்திக்கொண்டார்.
சாதனை படைக்கும் பாப்பா
210 நாடுகளின் கொடிகளைக் கண்டறிந்து கூறினார் சகஸ்ரா. நாடுகளின் பெயரைக் கூறும் வீடியோ பதிவு இந்திய புக் ஆஃப் ரெக்கார்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாராட்டிய புக் ஆஃப் ரெக்கார்டு குழு சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திடப் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
“இவளின் நினைவாற்றலை ஆறு மாதங்களில் கண்டு அதிசயித்தேன். அவளின் நினைவுத் திறனை வளர்க்கச் சாப்பாடு ஊட்டும் நேரம் போக, புத்தகமும் கையுமாய் அலைந்தேன். விளையாட்டில் ஆர்வம் காட்டுவதைக் காட்டிலும், சகஸ்ரா புத்தகத்தில் அபாரமான உற்சாகத்தை வெளிப்படுத்தினாள். உலகில் மொத்தம் உள்ள 210 நாடுகளின் கொடிகளில் சில நாடுகளின் கொடிகள் ஒரே மாதிரியானதாக இருக்கும். ஒரே மாதிரியான வண்ணம், அளவில் மட்டும் மாற்றம், ஆங்காங்கே சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருக்கும்.
ஆனால், சகஸ்ரா, நுணுக்கமாகக் கவனித்துச் சரியான விடையை அளிக்கிறார். அவ்வளவு ஏன், கொடியைத் தலைகீழாகக் காட்டிக் கேட்டாலும், உரிய நாடுகளின் பெயரைச் சரியாகத் தெரிவிக்கும் வல்லமை படைத்தவளாக உள்ளார். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளோம்.
ஏழு நிமிடங்களில் 196 நாடுகளின் பெயரைச் சகஸ்ரா கூறுகிறார். இதனை ஆறு நிமிடங்களில் கூறும் அளவுக்குத் தயார் செய்யும்படி சாதனைப் புத்தகக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். பின், சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்வதற்கான நிகழ்ச்சி நடக்கும்” என்கிறார் அசாதாரணக் குழந்தையைப் பெற்றெடுத்த சகஸ்ராவின் அம்மா.