

விளையாட்டு உடல் நலத்துக்கு மட்டுமல்ல, வளமான எதிர்காலத்துக்கும் உதவும் என்பதற்கு மேலூரைச் சேர்ந்த பொ.தமிழ்ச்செல்வன் நல்ல உதாரணம். ‘விளையாட்டுப் பிள்ளை’யாக இருந்ததால், 21 வயதிலேயே அரசுப் பணி தேடிவந்திருக்கிறது தமிழ்ச்செல்வனுக்கு.
தம்பி நீ ஆடுடா…
சமீபத்தில் திருச்சியில் நடந்த பேட்மிண்டன் போட்டியில் வென்று அஞ்சல்துறையில் நல்ல பணிவாய்ப்பைப் பெற்ற தமிழக இளைஞர்கள் நால்வரில் இவரும் ஒருவர். இவரது சொந்த ஊர் நாகர்கோயில் அருகே உள்ள ஆதலவிளை. அம்மா மேலவளவு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளித் தலைமை ஆசிரியையாக இருப்பதால், குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. 10-ம் வகுப்பு வரை விளையாட்டில் பெரிதாக ஆர்வம் காட்டாத தமிழ்ச்செல்வன், பேட்மிண்டன் பக்கம் திரும்பக் காரணம் அவருடைய சகோதரி அனுஷா.
“அக்காவுக்கு பேட்மிண்டன் என்றால் அவ்வளவு பிடிக்கும். 12-ம் வகுப்புக்குப் பிறகு அவளால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. எனவே, ‘தம்பி நீ ஆடுடா’ என்று என்னை ஊக்கப்படுத்தினாள். அதுவரையில் பேட்மிண்டனை ஒரு பொருட்டாகவே கருதாத நான், 11-ம் வகுப்பு முதல் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன்” என்கிறார் தமிழ்ச்செல்வன்.
கை கொடுத்த கைகள்
மதுரையில் உள்ள டெம்பிள்சிட்டி பேட்மிண்டன் அகாடமியில் பயிற்சிபெறத் தொடங்கினார் தமிழ்ச்செல்வன். அங்கே சேர்ந்ததுகூட அக்காவின் அறிவுரைப்படிதான் என்கிறார். உள்ளூரில் சிறப்பாக விளையாடிய தமிழ்ச்செல்வன், செலவுக்குப் பயந்து வெளியூர்ப் போட்டிகளைப் புறக்கணிப்பதைக் கவனித்த பயிற்சியாளர் சத்யநாராயணா தனக்கு முழுமையாக ஸ்பான்சர் தர முன்வந்தார் என உணர்ச்சி பொங்கப் பேசுகிறார்.
மதுரைக் கல்லூரியில் படித்தபோது, பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தென்னிந்திய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக் குவிக்க அவரே காரணம் என்றும் நன்றி தெரிவிக்கிறார்.
அப்போதுதான் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் விளையாடும் எஸ்.எஸ்.கண்ணன் பழக்கமானார். பேட்மிண்டனில் சாதித்து, அரசுப் பணிக்குச் சென்ற அவர் அரசுத் துறையில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வை அளித்தார். அதற்கு விண்ணப்பிக்கச் செய்ததோடு, தினமும் 2 மணி நேரம் பயிற்சியும் தந்தார். மேலூரிலிருந்து தினமும் தமிழ்ச்செல்வன் வந்து செல்வதைக் கண்ட மதுரை கட்டிடக் கலைஞர் சரவணன் தன் வீட்டிலேயே தமிழ்ச்செல்வனை தங்க அனுமதித்தார். இவ்வாறாகத் தான் இன்று முன்னேறியதற்கு உதவியவர்களை நன்றியோடு நினைவுகூருகிறார் தமிழ்ச்செல்வன்.
கிடைத்தைக் கொடுப்பேன்
பயிற்சி நிறைவில் திருச்சியில் நடந்த அஞ்சல்துறைப் பணிக்கான போட்டியில் தமிழ்ச்செல்வன் பங்கேற்றபோது, போட்டி கடுமையாக இருந்திருக்கிறது. மொத்தம் 4 பணியிடங்களுக்குத் தமிழகம், ஆந்திராவில் இருந்து பலர் பங்கேற்றனர். ஒவ்வொரு வீரருடனும் தனித்தனியாக விளையாடி, கடைசியில் இந்தப் பணிவாய்ப்பைப் பெற்றார். இவரைப் போன்றே தமிழகத்தைச் சேர்ந்த வேலவன், சுதர்ஷன், ஜமீர் ஆகியோரும் தேர்வாகியுள்ளார்கள்.
“எல்லாக் குழந்தைகளுக்கும் விளையாடவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோரும் அதனை ஊக்கப்படுத்த வேண்டும். எல்லா ஊரிலும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் வளர முடியாதபடி அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கின்றன.
எனவே, வசதியானவர்களும், நிறுவனங்களும் மட்டுமின்றி ஏற்கெனவே சாதித்த வீரர்களும் அவர்களுக்கு ஸ்பான்சர் வழங்க முன்வர வேண்டும்” என்கிறார் தமிழ்ச்செல்வன். அதனைக் கடைப்பிடிக்கவும் செய்கிறார். கடலூர் மாவட்ட அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்த கையோடு, அப்பகுதி இளைஞர்கள் 4 பேருக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியிருக்கிறார். வாழ்த்துகள் தமிழ்ச்செல்வன்!