

சமீபத்தில் சென்னை ‘ஆர்ட் ஹவுஸ்’ கேலரியில் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் கவின்கலைத் துறை இறுதியாண்டு மாணவிகளின் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. அந்தக் கல்லூரி மாணவிகளின் கலைத் திறமையை கல்லூரிச் சுவர்களில் இப்போதும் நாம் பார்க்கலாம். இந்தக் கல்வியாண்டின் மாணவிகள் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கண்காட்சியை நடத்தியிருக்கின்றனர்.
இதில் பதினைந்து மாணவிகளின் எழுபத்தைந்து ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. அக்ரலிக், ஆயில், மிக்ஸ்ட் மீடியம் எனப் பல வகையான ஓவியங்களை இந்தக் கண்காட்சியில் பார்க்க முடிந்தது. இந்த ஓவியங்கள் சமகாலத்தின் பிரச்சினையான பாலினப் பாகுபாடுகளையும், நவீன வாழ்க்கையின் முகத்தையும், சுய அலசல்களைப் பதிவுசெய்வதாகவும் இருந்தன.
இயற்கையின் குறியீடுகள - பி. மானசி
இயற்கையைச் சைகை மொழியில் வெளிப் படுத்துவதாக அமைந்திருந்தன மானசியின் ஓவியங்கள்.
ஆனால், ஏன்? - டி. ரேச்சல் ஸ்வேதா
ரேச்சலின் ஓவியங்கள் மனிதர்களிடம் வளர்ந்துவரும் அந்நியமாகும் மனநிலை, பாலின ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பேசுகின்றன.
அந்நியன் - ஏ. அலமேலு
மனிதர்கள் அனைவருக்குள்ளும் அவர்களுக்கே தெரியாமல் ஓர் அந்நியன் ஒளிந்திருப்பான். அந்த அந்நியனைப் பற்றி அலசுகின்றன அலமேலுவின் ஓவியங்கள். “மனிதர் களின் ஆளுமையைக் கவனிப்பது எனக்குப் பிடித்தமான விஷயம். அதன் விளைவாகவே என் ஓவியங்களில் மனிதர்களுக்குள் இருக்கும் அந்நிய மான இயல்புகளைப் பதிவு செய்திருக் கிறேன்” என்கிறார் அலமேலு.
பிரிவினால் கிடைக்கும் நிரந்தரம் - மரியா சாக்கோ
உடலையும், மனதையும் இணைக்கும் உள்ளு ணர்வுகளை விவரிக்கிறது மரியாவின் ஓவியங்கள். அத்துடன், அவரின் ஓவியங்கள் ‘உலகளாவிய பெண்மை’யையும் பிரதிபலிக்கின்றன.
உள்ளத்தின் விரிசல்கள் - எம். அனுஷியா ஆர்த்தி
சில நாட்களைச் சாதாரணமாகக் கடந்துவிடு வோம். ஆனால், சில நாட்கள் கடக்க முடியாத அளவுக்குக் கடினமானதாக இருக்கும். அப்படிப்பட்ட கடுமையான தருணங்களில் உடைந்துபோகும் உள்ளத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது அனுஷியாவின் ஓவி யங்கள்.
நெற்றிக் கண்ணின் பிரதிபலிப்பு - எல். பாரதி
சைவ மரபின் தாக்கத்தில் இருக்கின்றன பாரதியின் ஓவியங்கள். “தமிழகத்தின் மரபை என் ஓவியங்கள் வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதனால், சைவ மரபின் கடவுளான சிவனின் பல்வேறு அம்சங்களை என் ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்கிறார் பாரதி.
கட்டவிழ்ப்பின் கதைகள் - சஞ்சனா ஸ்ரீநிவாசன்
மேற்கத்திய பின்நவீனத்துவச் சிந்தனையாளர் ழாக் தெரிதாவின் (Jacques Derrida) ‘கட்டவிழ்ப்பு’ கொள்கையைப் பிரதானமாக வைத்து உருவாகி யிருக்கின்றன சஞ்சனாவின் ஓவியங்கள். மனித வாழ்க்கையில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைப் பின்நவீனத்துவப் பாணியில் பேசுகின்றன இவரது ஓவியங்கள்.