

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியில் சுருண்டபோது நம் நாட்டு ரசிகர்கள் துவண்டுபோனார்கள். ஆனால் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றவுடன் சென்னையில் உள்ள சிலர் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஏனென்றால் சென்னை வாசிகளில் 34 பேருக்கு ஒரு நூதனமான உலகக் கோப்பை பரிசாகக் கிடைத்தது.
உலகக் கோப்பை ஆட்டம் தொடங்கியதும் சென்னையில் ஹாரிங்டன் தெருவில் உள்ள பிரெஞ்சு லோஃப் பேக்கரி ‘லீ சாக்லேடியர்ஸ் சாக்கோ வர்லட் கப் ’ எனும் போட்டியை அறிவித்தது. உலகக் கோப்பையில் அரையிறுதி ஆட்டம் ஆரம்பிக்கும் முன்பே இறுதியில் ஜெயிக்கப்போவது எந்த அணி என்பதை ஊகிக்க வேண்டும்.
சரியாக ஊகிப்பவர்களுக்கு நிஜ உலகக் கோப்பையைப் போன்றே காட்சியளிக்கும் சுவையான சாக்லேட் உலகக் கோப்பை வழங்கப்படும் என அறிவித்தது.
படு உற்சாகமாகக் களம் இறங்கிய சென்னைவாசிகளில் 34 பேர் ஆஸ்திரேலியாதான் ஜெயிக்கும் எனத் துல்லியமாகக் கணித்தார்கள். அவர்கள் அனைவருக்கும் முழுக்க முழுக்க சுவையான சாக்லேட் கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டரை கிலோ எடையிலான சாக்லேட் உலகக் கோப்பை ஏப்ரல் முதல் நாளன்று பரிசாக அளிக்கப்பட்டது. ஓரியண்டல் குஸைன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான நரேந்திரா மல்ஹோத்ரா வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவித்தார்.
பரிசை வென்றவர்களுள் ஒருவரான கிஷோர் எனும் இளைஞர் படு குஷியாக நண்பர்களோடு குத்தாட்டம் போட்டுக்கொண்டிருந்தார். துடிப்புமிக்க கிரிக்கெட் ரசிகரான அவர் இந்தியா வெல்ல வேண்டும் என நினைக்கவில்லையா எனக் கேட்டதற்கு, “2010-ல் இந்தியா வென்றெடுத்த உலகக் கோப்பையைத் திரும்பத் தரமாட்டோம் என கோஷமிட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் என் உள்ளுணர்வு ஆஸ்திரேலியாதான் உலகக் கோப்பையை ஜெயிக்கும் எனச் சொல்லிக்கொண்டே இருந்தது.
ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து அற்புதமாக ஆடி கொண்டே இருந்தார்கள். ஆகவே இந்தப் போட்டியில் பங்கேற்றேன். சென்டிமெண்ட்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு இப்போது என் மனதில் ஓடுவது ஒன்றுதான். இந்தச் சுவை மிகுந்த சாக்லேட் கோப்பையை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு இணைந்து ருசித்துச் சாப்பிட வேண்டும்” என வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்.