

சினிமாக்களை வாய் பிளந்து பார்க்கும் காலம் போயாச்சு. வந்துவிட்டது 7டி சினிமா. திரையில் தோன்றும் உருவங்கள் தொலைவில் இயங்கும் தட்டையான வடிவங்களாக இல்லாமல் நிஜமாகவே நம்மிடம் நெருங்கி வந்து ஆடி, பாடி, குதிப்பது போலக் காட்சியளிப்பதுதானே 3டி! இந்த எஃபெக்ட்ஸ் நம் கண்களுக்கும், காதுகளுக்கும் மட்டுமே விருந்தளிக்கும்.
ஆனால் 7டி என்னும் அனுபவமே வேறு. ‘ஐ’ பட பாணியில் சொல்லணும்னா 7டி என்பது அதுக்கும் மேல! சமீபத்தில் மாமல்லபுரத்தில் உள்ள க்ராணிகில்ஸ இந்தியா 7டி எகஸ் தியேட்டரில் (Chronicles India 7Dx Theatre) 20 நிமிட ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தபோது அதைப் புரிந்துகொள்ள இல்லை, இல்லை அனுபவிக்க முடிந்தது.
பல்லவ ராஜ்ஜியம் என்ற அந்த ஆவணப்படம் தொடங்கியதும் மாமல்ல புரத்தின் பிரசித்தி பெற்ற கல் மண்டபங்கள் ஒன்றின் பின் ஒன்றாகக் காட்டப்பட்டன. முதல் ஃபிரேமில் கேமரா டில்ட் செய்தபடி கடற்கரைக் கோயிலை நெருங்கியது. கட்! அடுத்த ஃபிரேமில் கேமரா மேலிருந்து கீழே ஸ்லோ மோஷனில் நகர்ந்தபடி யானை சிற்பத்தைக் காட்டுகிறது. கட்!
மூன்றாவது ஃபிரேமில் புகை மூட்டத்துக்கு இடையில் மெல்ல வராக மண்டபம் தென்படும் இடமிலிருந்து வலமாகக் கேமரா நகர்கிறது. அட! 3டிதான் பா! சும்மா ஓவர் பில்ட் அப் கொடுத்தாங்களே எனும் சிந்தனை மனதில் பாய்ந்தபோது மீண்டும் திரையில் கடற்கரைக் கோயில் தோன்றியது. இந்த முறை கோயிலைச் சுற்றிலும் அலைபாயும் கடல். கடல் அலை கோயில் சுவரை வந்து மோதும்போது தியேட்டரில் இருந்த பார்வையாளர்கள் மீது மூச்சு முட்டும்படி குளிர்க்காற்று வீசியது. தடால் என முகத்தில் கடல் நீர்த் திவலை தெறித்தது. ஒரு நொடி திணறிப்போனோம்!
அடுத்தடுத்த காட்சிகளில் வானிலிருந்து பூக்கள் சொரியும் போது மணக்கும் காற்று அரங்கில் வீசியது, இடி மின்னல் வெட்டியபோது பளீர் ஒளியுடன் மின்சாரமும் பாய்ந்ததுபோல இருந்தது, புகை மண்டலம் ஏற்பட்டபோது அரங்கில் புகை மூட்டம் சூழ்ந்தது, நீர்க் குமிழி நம்மை வந்து தொட்டு உடைந்தது, எல்லாவற்றுக்கும் மேலாகப் போர்க்களக் காட்சிகள் திரையில் விரிந்தபோது நாமே போர் புரிவதுபோல இருக்கைகள் அதிர்ந்தன, மேலும், கீழும் நம்மைச் சுழற்றின. ஒரு ஆவணப்படத்தை இத்தனை சுவாரசியமாகப் படைக்க முடியுமா என்னும் வியப்பு ஏற்பட்டது. 1200 வருடங்கள் பின்னோக்கி பயணித்து அற்புதங்கள் நிறைந்த பல்லவ சாம்ராஜியத்தில் வாழ்வதுபோன்ற பிரமையே ஏற்பட்டது.
பாரலாக்ஸ் சினிமாஸ், சிங்கப்பூரைச் சேர்ந்த வைட்ஸ்கிரீன் மீடியா, மற்றும் 7டி+ டெக்னாலஜி நெட்வர்க் கம்பெனி ஆகியவை இணைந்து எஸ்3டி எனப்படும் ஸ்டீரியோஸ்கோப்பிக் அனிமேஷன் யுக்திகள் மற்றும் வீசும் காற்று, பனிப்பொழிவு, மழைச் சாரல், தடதடக்கும் இடி, வெட்டும் மின்னல், பூக்களின் மணம், நில அதிர்வு போன்ற விஷயங்களை அசலாக அனுபவிக்கும் விதத்தில் இந்த 7டி சினிமாவை உருவாக்கியுள்ளார்கள். இனி பார்வையாளர்களை ஆட்டிப்படைக்கப்போவது இந்த 7டி எஃபெக்ட்ஸ்தான் போல!