

பணம் பத்தும் செய்யும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு செய்யுமா என ஆச்சரியப்பட வைக்கிறார் அருண் பரத்வாஜ் எனும் 24 வயது இளைஞர். ஏழு வருடங்களுக்கு முன்புவரை அக்மார்க் இந்தியக் குடிமகனாக இருந்த இவர் இப்போது நியூசிலாந்தில் உள்ள வெலிங்டன் நகரில் வசிக்கிறார்.
அருண் பரத்வாஜ் இந்திய கிரிக்கெட் அணியின் பரம விசிறி. தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உயிரைவிட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறார். எப்படியாவது நியூசிலாந்து அணி உலகக் கோப்பையை வென்றெடுக்க வேண்டும் என்பதே அருணின் வேட்கை. “இனியும் என் அன்புக்குரிய இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிக்க முடியாது” என்கிறார் இவர். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர், இந்திய கிரிக்கெட் அணியைக் கொண்டாடும் ஒருவர் எப்படித் திடீரென்று நியூசிலாந்துதான் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என நினைக்க முடியும் எனக் குழப்பமாக உள்ளதா? எல்லாம் ஒரு டி ஷர்ட் செய்யும் வேலைதான்.
துயி கேட்ச் அ மில்லியன்
கடந்த சனிக்கிழமை நியூசிலாந்தின் ஈடன் பார்க்கில் இந்தியா, ஜிம்பாப்வேக்கு இடையே போட்டி நடைபெற்றது இல்லையா! நம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அசத்தலான ஆட்டத்தின் மூலம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் 288 அடித்து ஜிம்பாப்வேயை மண்ணைக் கவ்வ வைத்தார்களே! இந்த மேட்ச்சை நாம் தொலைக்காட்சியில் குதூகலமாகப் பார்த்து ரசித்த, அதே வேளையில் அருண் பரத்வாஜ் ஈடன் பார்க் அரங்கத்தில் இருந்தபடி ஆரவாரமாகப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.
ஆனால் இதற்கிடையில் வேறொரு சம்பவமும் நிகழ்ந்தது. அதுதான் அருணை இந்தியாவுக்கு எதிராகத் திருப்பியது. ஜிம்பாப்வேயின் பிராண்டன் டெய்லர் அசத்தலான சிக்ஸர் ஒன்றை விண்ணில் பாய்ச்ச, “துயி கேட்ச் அ மில்லியன்” (Tui Catch a Million) எனும் வாசகம் அச்சிட்ட ஆரஞ்சு நிற டீ சர்ட்டை அணிந்தபடி கேலரியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்த அருண் அந்தப் பந்தை நச்சென ஒரே கையில் பிடித்தார். இதன் மூலம் துயி நிறுவனம் நடத்தும் பந்தைப் பிடித்து 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வெல்லும் பந்தயத்தில் 6-வது நபராகத் தேர்வாகியுள்ளார். இந்தியப் பண மதிப்பின்படி 6 கோடியே 27 லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்.
10 லட்சம் டாலர்கள் வேண்டுமா?
துயி எனும் மதுபானம் தயாரிக்கும் நிறுவனம் “கேட்ச் அ மில்லியன்” பந்தயத்தை 2015 கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் அறிவித்துள்ளது. 2015-ன் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளில் 23 ஆட்டங்கள் நியூசிலாந்தில் நடக்கவிருக்கின்றன. அப்போது “துயி கேட்ச் அ மில்லியன்” டி ஷர்ட் ட்டை அணிந்த கிரிக்கெட் ரசிகர்கள் அரங்கத்தில் இருந்தபடி சிக்சர்களைச் சரியாகக் கைப்பற்ற வேண்டும். உலகக் கோப்பையை நியூசிலாந்து வெல்லும் பட்சத்தில் அவ்வாறு பந்தைப் பிடித்த அத்தனை பேருக்கும் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பிரித்துத் தரப்படும் என அறிவித்துள்ளது துயி.
இந்த அறிவிப்பால் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் பரவச நிலையில் குத்தாட்டம் போடுகிறார்களாம். நியூசிலாந்து அணியின் சட்டை நிறம் கறுப்பு என்பதால் பொதுவாக அந்த அணியின் ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்துதான் ஆரவாரமாக ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால் இப்போது பெருவாரியான நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆரஞ்சு நிறத்தில்தான் வலம் வருகிறார்களாம். இதனால் துயி சட்டைகள் பெரும் கிராக்கியாக மாறிவிட்டன. பிளாக்கில்கூட ஆரஞ்சு சட்டை விற்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. துயி நிறுவனத்தின் புத்தி சாதுர்யமான இந்த வியாபாரமும், விளம்பரமும் புதுசுதான். அதைக் காட்டிலும் இப்பெல்லாம் ரசிகர்கள்தான் அதிக கேட்ச்சுகளை பிடிக்கிறார்கள் என்ற கிண்டல் பேச்சும் நிலவுகிறது.