பேஸ்புக் மணியார்டர்
“எனக்குக் கொஞ்சம் பேஸ்புக் வழியா பணம் அனுப்பிருப்பா” என்ற குரலை இனி பல இடங்களில் கேட்கலாம். பேஸ்புக் அறிவித்துள்ள மெஸஞ்சர் செயலி மூலமாக இனி நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் பணம் அனுப்பிக்கொள்ளலாம். இதற்கு எந்தக் கட்டணமும் இல்லை.
பேஸ்புக் மெஸஞ்சரில் அதற்கு என்று தனியாக ஒரு ஐகான் இருக்கும். அதை அழுத்திவிட்டு அதில் அனுப்பவேண்டிய தொகையை டைப் அடிக்கவேண்டும். அதன்பிறகு உங்களின் டெபிட் கார்டின் எண்ணை அதில் டைப் அடிக்க வேண்டும். அதன்பிறகு ‘அனுப்புக’ என்ற ஆணையைக் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். பணத்தைப் பெறுபவர் தனது மெஸஞ்சர் வந்து சேர்ந்துள்ள அந்தச் செய்தியில் தனது டெபிட் கார்டின் எண்ணை பதிவு செய்தால் போதும். பணம் உங்களிடம் வந்து சேர்ந்து விட்டதாக உடனடியாகத் தகவல் வரும்.
பணம் உடனடியாக ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டாலும் அதனை நீங்கள் எடுப்பதற்கு இரண்டு நாட்கள் ஆகும் எனப் பேஸ்புக் அறிவித்துள்ளது. இது பாதுகாப்புதானா? சின்னபுள்ள விளையாட்டா ஆயிறப்போது என்று பயப்படுபவர்களைப் பார்த்து “ நாங்கள் 2007 முதலாக தினமும் தங்களின் விளம்பரதாரர்களோடு 10 லட்சம் கொடுக்கல் வாங்கல்களை இந்த முறையில் செய்து வருகிறோம்” என்கிறது பேஸ்புக். இது ஆப்பிள், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களிலும் டெஸ்க்டாப் கணினிகளிலும் முதலில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாங்கிய கடனை தராமல் ரொம்ப நாளா பேஸ்புக் அரட்டையடிச்சுக்கிட்ட இருக்கிறவன்கிட்ட இன்னைக்கு “பேஸ்புக்லயே பணத்தை உடனே அனுப்புய்யா” ன்னு சொல்லிறலாம்னு வேகமாக எழுந்திருக்கிறீங்களா? அதெல்லாம் முடியாது. இது முதலில் அமெரிக்காவில் நடக்கிறது. சில மாதங்களுக்குப் பிறகு தான் இந்தியாவுக்கு வருமாம்.
