

குடிமை விழிப்புணர்வுக்கான குழந்தைகள் இயக்கம் மற்றும் இந்தியச் சந்தை ஆய்வு அமைப்பான ஐஎம்ஆர்பி இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திய இளைஞர்களில் பாதி பேர் ராணுவ ஆட்சியை விரும்புவதாகத் தெரியவந்துள்ளது. ஆண்களும், பெண்களும் பொது இடத்தில் சந்திப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று பெரும்பாலான இளைஞர்களும் யுவதிகளும் விரும்புவதாகவும் அதிர்ச்சிகரமான அந்தக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவின் பன்மைத்தன்மை, சமூக நீதி, பாலினச் சமத்துவம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் 10 ஆயிரம் மாணவர்களிடம் 11 நகரங்களில் கருத்து கேட்கப்பட்டது.
பெரும்பாலான இளைஞர்களுக்கு ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் தேர்தல் முறை போன்ற அடிப்படையான விஷயங்கள்கூடத் தெரிவதில்லை என்று இக்கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. 35 சதவீதம் இளைஞர்கள்தான் தங்களை இந்தியக் குடிமகன்களாக உணர்கின்றனர்.
பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் பகுதிக்கு வந்து வேலைகள் செய்வதைச் சகிக்க முடியாதவர்களாக ஐம்பது சதவீத இளைஞர்கள் இருக்கின்றனர். அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கொடுப்பதுகூட நியாயம் என்று அவர்கள் கருதவில்லை.
“என்ன மாதிரியான கல்வியை நாம் இளைஞர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தும் ஆய்வு இது. ஒருவரின் பொருளாதார நிலையை உயர்த்துவதாகவே நமது கல்விமுறை உள்ளது. மனிதாபிமானம் கொண்ட குடிமக்களை உருவாக்கும் முழுமையான கல்வியை நாம் தரவில்லை என்பதையே இந்தக் கருத்துக் கணிப்பு நிரூபிக்கிறது” என்கிறார் குடிமை விழிப்புணர்வுக்கான குழந்தைகள் இயக்கத்தின் இயக்குநர் மஞ்சுநாத் சதாசிவா.
உலகளாவிய அளவில் மனித வளர்ச்சி என்பது பாலின சமத்துவ உணர்வு மற்றும் தன்னிறைவை அடிப்படையாகக் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தக் கருத்துக்கணிப்பில் பதில் சொன்ன மாணவிகளே பெண்களின் தன்னிறைவுக்கு எதிரான கருத்துகளைக் கூறியுள்ளனர்.