பழங்களை நறுக்கும்போது...

பழங்களை  நறுக்கும்போது...
Updated on
1 min read

வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி, ஐஸ்க்ரீம் மற்றும் பழச்சாறுகளைத் தயாரித்து விற்கும் வயோதிகர் ஒருவர் எங்கள் பகுதியில் இருக்கிறார். அவர் மங்களூரைச் சேர்ந்தவர். முதுமையிலும் உயிர்ப்பு ததும்பும் கொங்கணி முகம். கண்களும் சிரிக்கும். ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சாயல்.

ஒவ்வொரு கோடையிலும் எங்கள் நட்பு அவருடன் துளிர்விடத் தொடங்கும். அவரிடம் ஷுகர் ஃப்ப்ரீ ஐஸ்கிரீம் கிடையாது. ஆனாலும் அதையும் தயாரியுங்கள் என்று ஒவ்வொரு ஆண்டும் சொல்கிறேன். விட்டேத்தியாகச் சிரிப்பார். வெண்ணிலா ஐஸ்கிரீம் மேல் சூடான ஹாட் சாக்லேட் பாகை ஊற்றிச் சாப்பிட்டபடியே, வாடிக்கையாளர் அதிகம் இல்லாத சமயத்தில் எங்களுக்குள் உரையாடலும் நடக்கும். வீட்டின் பிரதான அறையில் தனது கடையை அவர் அமைத்துள்ளார். அவருக்கு மனைவியும், திருமணமாகாத முதிர்கன்னி மகளும் உண்டு. எல்லாருக்கும் கொங்கணி முகங்கள். பிரியத்துடன் சிரிப்பார்கள். சில காலைகளில் அப்பாவும் மகளுமாக நடைப்பயிற்சியும் செய்யும்போது நாங்கள் கைகளை உயர்த்திக் கொள்வோம். அன்றாட வியாபாரம் குறித்தும் பேசியிருக்கிறோம். அவருடைய ஒரே மகன் தனது குடும்பத்தோடு வேறெங்கோ வசித்து வருகிறான். மகன் மீது அவருக்கு அதிருப்தி உண்டு. அதைச் சொல்லும்போது கசப்புடன் சிரிப்பார்.

காதலர்கள், குடும்பங்கள், மாணவர்கள் எல்லாரும் வரும் கடை அது. எட்டுப் பேர் ஒரே நேரத்தில் வந்தால் நெரிசல் ஆகிவிடும். குளிர்பதனப் பெட்டி, விதவிதமான கண்ணாடிக் குவளைகள், லஸ்சி கடையும் எந்திரம், மிக்சி, பழச்சாறு எந்திரம், குளிர்சாதனப் பெட்டி, பழங்கள் என நிறைந்திருக்கும் பகுதியை ரொம்பவும் சுத்தமாக வைத்திருப்பார் . ஐஸ்க்ரீமை அவர் கரண்டியில் எடுத்து வைக்கும்போதும், அதற்கு வண்ண, வண்ணப் பழங்களால் அலங்காரம் செய்யும்போதும், அவருடைய உதவியாளராக வேலைபார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்படும். இளநீர் வழுக்கை, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக் கரெண்ட் என இயற்கையாகக் கிடைப்பவற்றிலிருந்து ஐஸ்க்ரீம் தயாரிப்பார். உயரமான கண்ணாடிக்ளாசில் அவர் தன்கையால் தயாரித்துத்தரும் ஃபலூடா ஒரு கனவுத் தோற்றத்தில் இருக்கும். அவர் பழங்களை வெட்டும்போதும், பழச்சாறு தயாரிக்கும்போதும் அந்த இடத்தில் ஆழ்ந்த அமைதி நிலவும். சாத்துக்குடிகளின் தோலை உறிக்கும்போது ஒரு நாள் பார்த்தேன்; அத்தனை சாந்தமாக சின்ன நெருடல்கூட இல்லாமல் கத்தியால் தோலை மட்டும் கீறி, ஒவ்வொரு தோலாக உரித்ததை. அந்த ஒழுங்கை, ஆத்மார்த்தத்தை எங்கிருந்து பெற்றார்?

சென்னையில் பல ஆண்டுகளாக வசிக்கும் அவரது தலையில், மலையின் உச்சியில் உள்ள குளிர்ச்சி இன்னும் இருக்கும்போல. அவரிடம் நான் உணரும் குளிர்ச்சிக்கு, அவரது மனைவியுடனான கனிந்த உறவும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in