

ஒரே ஒரு சிந்தனை உங்கள் வாழ்க்கையையே மாற்றிடும் என்ற பிரபலமான வசனத்தைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் சிலருக்கு ஏற்படும் சிந்தனை சமூகத்தையே மாற்றிவிடும். தென்னாப்பிரிக்க ரயில் பயணம், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்னும் தனி மனிதருக்கு அம்மாதிரியான ஒரு சிந்தனையைத் தந்தது.
அந்தச் சிந்தனை தோன்றியிருக்காவிட்டால் இன, மொழி, மத ரீதியாகப் பாகுப்பட்டுக் கிடந்த இந்தியாவை ‘சுதந்திரம்’ என்னும் ஒரு குடையின் கீழ் இணைப்பது சாத்தியமில்லாததாக இருந்திருக்கும். இப்படித் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் தோன்றும் சிந்தனைகள் சமூகத்திற்கு நன்மையைப் பெற்றுத் தரும். அம்மாதிரியான ஒருவர்தான் நாராயணன் கிருஷ்ணன்.
மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன், எல்லோரையும் போல் வழக்கமான வாழ்க்கையிலேயே இருந்திருக்கிறார். உணவுத் தொழில்நுட்பம் படிப்பை விருப்பத்துடன் கற்றுத் தேர்ந்தவர். தான் எடுத்துக்கொண்ட துறையில் அர்ப்பணிப்புடன் இருந்தார். உணவுத் தொழில்நுட்பம் பயிலும் எல்லோருக்கும் கனவாக இருக்கும் தாஜ் ஹோட்டலில் அவருக்கு வேலை கிடைத்தது.
அங்கும் சிறப்புடன் பணியாற்றிப் பரிசு வென்றார். சுவிட்சர்லாந்து பயிற்சிக்கும் அவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். மகனின் இந்த வளர்ச்சி அவருடைய அப்பா, அம்மாவுக்கும் பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
ஆனால் இந்தச் சமயத்தில் கிருஷ்ணனுக்குத் தோன்றிய சிந்தனை அவர் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. சுவிட்சர்லாந்து செல்வதற்கு ஒருநாள் முன்பு மதுரையின் முக்கியச் சாலையில் ஒரு காட்சியைப் பார்த்திருக்கிறார் கிருஷ்ணன். ஆதரவற்ற ஒரு முதியவர் தன் மலத்தைத் தானே சாப்பிடும் காட்சிதான் அது. உடனே அருகில் இருந்த ஹோட்டலில் 10 இட்லியும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்தார்.
ஆனால் பிரம்மாண்டமான 5 ஸ்டார் ஹோட்டலில் புழங்கிய கிருஷ்ணனின் மனத்தில் அந்தச் சம்பவம் மனத்தில் ஒரு குருட்டு ஈயைப் போல உட்கார்ந்து கொண்டது.
அந்த நாள் இரவு முழுவதும் அந்தச் சம்பவம் அவர் மனத்தில் வந்துகொண்டே இருந்தது. பிறகுதான் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். சுவிட்சர்லாந்து பயணத்தைக் கைவிட்டார். வேலையையும் விட்டார்.
தனி ஒருவனாகச் சமையல் செய்து, அதைப் பார்சல் கட்டி மதுரையைச் சுற்றி இருக்கும் ஆதரவற்றோருக்குக் கொடுத்தார். பிறகு நண்பர்கள், உறவினர்களின் உதவியால் ஒரு வேனை வாங்கி அதில் சாப்பாட்டுப் பொட்டலங்களை விநியோகிக்கத் தொடங்கினார். முதலில் கிருஷ்ணனின் பெற்றோருக்கு இதில் எல்லாம் விருப்பமே இல்லை. நல்ல வேலையை விட்டுவிட்டான் என்கிற ஆதங்கமே இருந்தது. ஆனால் இப்போது அவரைப் பெற்றதற்காகப் பெருமைப்படுகிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் சி.என்.என்.ஐ.பி.என். தொலைக்காட்சி கிருஷ்ணனுக்கு சாதனையாளர் விருதை வழங்கிக் கெளரவித்தது. இந்த விருது மூலம் கிருஷ்ணனுக்கு இந்திய அளவிலும் அங்கீகாரம் கிடைத்தது. இவர்
கதையை அடிப்படையாகக் கொண்டு மலையாளத்தில் ‘உஸ்தாத் ஹோட்டல்’ என்ற பெயரில் ஒரு படமும் வெளிவந்துள்ளது. இந்தச் சமூகப் பணியை மிகச் சிறிய அளவில் செய்துவந்த கிருஷ்ணனுக்கு இந்த அங்கீகாரத்தால் உலக அளவிலான உதவிகள் கிடைத்திருக்கின்றன.
தனக்குக் கிடைத்த உதவிகள் மூலம் மதுரை சோழவந்தானுக்கு அருகில் 3 ஏக்கர் அளவில் ஆதரவற்றோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியவருக்கான ஒரு காப்பகத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்தக் காப்பகம் மருத்துவம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இருக்கிறது. மதுரையில் இனி ஆதரவற்றோரே இருக்கக் கூடாது என்னும் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் கிருஷ்ணன் தான் எடுத்த காரியத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.