

நம் வாழ்க்கை அகம்-புறம் என்று இரண்டு தளங்களில் நடக்கிறது. இரண்டும் சம அளவிலான முக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் நம்மில் பெரும்பாலானோரின் மனங்கள் பெருமளவுக்கு உள்ளேயோ, அதிக அளவுக்கு வெளியேயோதான் நிலைகொண்டிருக்கின்றன.
வெளியே நோக்கிக் கவனத்தை வைத்திருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது, பணம் சம்பாதிப்பது போன்ற விஷயங்களிலேயே கவனம் செலுத்துகிறார்கள். உள்நோக்கிய பார்வையுடன் இருப்பவர்கள் தம் உணர்ச்சிகளிலும் மன ஓட்டத்திலும் லயித்து வாழ்கிறார்கள். இருவருமே அரை வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை.
வெளிப்புறப் பார்வை உள்ளவர்கள் தம் அக வளர்ச்சி குறித்த அக்கறை ஏதும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் மனத்தில் பல சிக்கல்களும் குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றன. உட்புறப் பார்வை உள்ளவர்கள் வெளியே நடக்கும் விஷயங்களில் அக்கறை ஏதும் செலுத்தாமல், வாழ்க்கை ஓட்டத்தில் பங்கு கொள்ளாமல் காலம் கழிக்கிறார்கள்.
நதியின் இரண்டு கரைகள் போல உள்ளும் புறமும் வாழ்க்கை ஓட்டத்தின் இரண்டு கரைகள். இந்த இரண்டு கரைகளின் இடையேதான் வழ்க்கை நதி சீராக ஓட முடியும்.
நான் ஒரு இல்லத்தரசி. என் கணவர், எல்லோரிடத்திலும் கேலி கிண்டலாகப் பேசும் சுபாவம் உடையவர். ஆனால் சமீபகாலமாக அவர் நடவடிக்கையில் எனக்குச் சில குழப்பங்கள் உள்ளன. அவர் அடிக்கடி ஒரு பெண்ணுடன் தொலைபேசியில் சிரித்து சிரித்துப் பேசுகிறார். சரி, ஏதோ ஒரு தோழிதான், தவறாக எண்ணக் கூடாது என விட்டுவிட்டேன்.
ஆனால் ஒரு நாள் வீட்டிலிருக்கும்போதே தொலைபேசியில் அந்தப் பெண்ணிடம் ஆபாசமான வார்த்தைகளில் கேலி, கிண்டலாகப் பேசிக்கொண்டிருந்தார். அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவரை அழைத்துக் கண்டித்தேன். உடனே அவர் “நான் அப்படிப் பேசியது தவறுதான். தெரியாமல் விளையாட்டுத்தனமாகப் பேசிவிட்டேன். இனி மேல் இப்படி நடந்து கொள்ளமாட்டேன். என்னை மன்னித்துவிடு” என்றார்.
ஆனால் என் மனம் சமாதானம் அடையவில்லை. நானோ வீட்டுக்குள்ளேயே இருப்பவள். அவரும், அந்தப் பெண்ணும் நகரத்தில் ஒரே இடத்தில்தான் வேலை பார்க்கிறார்கள். என் கணவர் மீது சந்தேகம் கொள்ளக் கூடாது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நான் சஞ்சலத்துக்கு உள்ளாகியிருக்கிறேன். என் மனம் தெளிவடைய ஒரு வழி சொல்லுங்கள்.
இதுபோல் பெண்களிடம் பேசும் பழக்கம் உள்ள ஆண்கள் உண்டு. அவர்களுக்கு அது தவறாகத் தெரியாது. அவர்கள் மனப்பாங்கிலேயே இப்படி ஒரு பழக்கம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு உடனடியாக அவர்களைப் பற்றி எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.
மறுபுறம் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் வழக்கம் உள்ளவர்களும் உண்டு. தொட்டதெற்கெல்லாம் இது இப்படியோ, அப்படியோ என்று நினைக்கும் சந்தேகப் பிராணியாக அவர்கள் இருப்பார்கள். ஆனால் நீங்கள் சொல்வதிலிருந்து நீங்கள் அந்த மாதிரியானவர் இல்லை என்பது தெரிகிறது.
கவலைப்பட்டுக்கொண்டு, எந்நேரமும் சஞ்சலத்தில் மூழ்கி இருக்காதீர்கள். உங்கள் கணவரிடம் மனம்விட்டு உங்கள் வருத்தங்களைப் பற்றி நேரடியாகப் பேசுங்கள். உங்கள் கவலைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மேற்கொண்டு கொஞ்ச காலம் கவனியுங்கள்.
தொடர்ந்து இதேபோல் நடந்தால் அவரை அழைத்துக்கொண்டு உளவியல் ஆலோசரைச் சந்தியுங்கள். ஒரு புறநிலைக் கண்ணோட்டத்துடன் விஷயத்தை அணுகிப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும்.
சென்னையில் பொறியியல் கல்லூரி ஒன்றில் 2-ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவன் நான். நான் பல விஷயங்களில் மிகவும் குழப்பம் அடைந்துள்ளேன். அவற்றை இங்கு அடுக்குகிறேன்.
1. என் சிறுவயது முதல் பல கலை இலக்கியப் போட்டிகளில் பங்கெடுத்து வருபவன் நான். ஆனால் சமீபகாலமாக கூச்சம் மற்றும் பயம் காரணமாக எந்த ஒரு போட்டியிலும் பங்கெடுப்பதில்லை. ஆனால் அது ஏன் என்று எனக்கே புரியவில்லை.
2. இப்பொழுதெல்லாம் சின்ன சின்ன விஷயங்களுக்குக்கூடக் குற்றவுணர்ச்சி என்னுள் மேலோங்குகிறது. உதாரணமாக, ஒரு முறை ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது தவறுதலாக இரு முறை ஆர்டர் செய்துவிட்டேன். ஆனால் அந்த ஆர்டரை ரத்து செய்ய முடியவில்லை. இது ஒரு சிறிய தவறுதான் என்றாலும் அதீத குற்றவுணர்ச்சிக்கு உள்ளாகி அழுதுவிட்டேன். இது போல பல நேரங்களில் உடைந்துபோகிறேன். ஏனென்று புரியவில்லை.
3. இப்பொழுதெல்லாம் என் நண்பர்களிடம் நான் வெளிப்படையாகப் பேசுவதில்லை. நான் சொல்ல நினைக்கும் விஷயங்களில் 10சதவீதம் மட்டுமே பகிர்ந்துகொள்கிறேன். ஏதோ ஒன்று என்னைத் தடுக்கிறது.
4. பெரும்பாலான நேரங்களில் என்னோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். நான் பேச நினைக்கும் நபராக என்னையே கற்பனை செய்துகொண்டு நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
5. தனிமைச் சிறையில் இருப்பதாக உணர்கிறேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்.
முன்பு பல போட்டிகளில் கலந்துகொண்டிருந்த நீங்கள் இப்போது பயம், கூச்சம் காரணமாகப் போட்டிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள். சிறிய தவறுகளுக்கும்கூட மிகவும் குற்றவுணர்ச்சி கொண்டு கஷ்டப்படுகிறீர்கள்.
முன்பு போல் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதில்லை. பேச நினைப்பதில் 10 சதவீதம்தான் வெளியே சொல்கிறீர்கள். உங்களுக்குள்ளேயே பேசிக்கொள்கிறீர்கள். மிகவும் தனிமையாக உணர்கிறீர்கள்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பெருமளவுக்கு நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறீர்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. உங்களை நீங்களே தாழ்மையாக நினைத்துக்கொள்கிறீர்கள் என்று பொதுவாகச் சொல்லலாம். சமீப காலத்தில் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதாவது நிகழ்ந்திருக்கிறதா என்பதும் முக்கியம்.
ஆனால் மேலும் விவரமாகவும் ஆழமாகவும் பேசினால்தான் உங்களுக்குப் பயன்படும்படியாக ஏதாவது சொல்ல முடியும். நீங்கள் மனநல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பது பயன் அளிக்கக்கூடும். கூடவே உளவியல் ஆலோசகர் ஒருவரையும் சந்தியுங்கள். காலம் தாழ்த்த வேண்டாம்.
உளவியல் ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணாவுடன் உரையாடலாம். உங்கள் கேள்விகள், எண்ணங்கள், குழப்பங்கள், உறவுச் சிக்கல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in