

புதிது புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்களின் டச் ஸ்கிரீனை விரல்களால் வருடியபடி, உலகத்தை உள்ளங்கையில் உருட்டும் இன்றைய இளைஞர் கூட்டத்தில் இருந்து சரவணன் நிறையவே வித்தியாசப்படுகிறார். இவர் பழைய பொருள்களை நேசித்துச் சேகரிப்பவர்.
டேப் ரெக்கார்டர் காதல்
பொறியியல் படித்திருக்கும் சரவணனுக்குப் பழைய பொருட்கள் மீது சிறு வயது முதலே தீவிர ஆசை. 8-ம் வகுப்பு படித்தபோது விடுமுறைக்குத் தாத்தா வீட்டுக்குச் சென்றபோது, அங்கு தூக்கிப்போடத் தயாராக இருந்தது பழைய ஸ்பூல் டேப் ரெக்கார்டர்.
அப்போதுதான் சரவணனின் ஆன்டிக் கலெக்ஷன் (பழம்பொருள் சேகரிப்பு) தொடங்கியது. அதன் பின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வேண்டாத பழைய பொருட்கள், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தால் சரவணனின் வீட்டுக்குத் தேடி வந்துவிடும்.
தீப்பெட்டி முதல் பியானோ வரை
கடந்த 13 ஆண்டுகளில் 1,500-க்கும் அதிகமான பழைய பொருட்கள் திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள சரவணன் வீட்டில் அடைக்கலம் அடைந்துள்ளன. திருச்சியின் மிகப் பழமையான சர்ச் ஒன்றில் 80 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பிரம்மாண்ட பியானோ, 2 சிறிய பியானோக்கள், 100 ஆண்டு கடந்த பாக்கெட் வாட்ச், 60 ஆண்டு பழமையான பெண்டுலம் சுவர்க் கடிகாரங்கள், 50 ஆண்டுக்கு முந்தைய கேமராக்கள், பயாஸ்கோப், மேசைக் கடிகாரம், கிராமஃபோன், புல்புல்தாரா இசைக்கருவி, சிகரெட் லைட்டர், பழங்கால ஓவியங்கள், விளையாட்டுப் பொருட்கள், விதவிதமான தீப்பெட்டிகள் என ஆயிரக்கணக்கான பழைய பொருட்கள் அணிவகுக்கின்றன இவரது வீட்டில்.
எல்லாம் பொக்கிஷம்!
பழைய பொருட்கள் மீது கொண்ட ஆர்வம் காரணமாகவே பொறியியல் படிப்பில்கூட எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் படிப்பைத் தேர்ந்தெடுத்தார் சரவணன். படிக்கும் காலகட்டத்தில் பழைய பொருட்கள் சேகரிப்பதற்காகப் பணம் கேட்டுப் பெற்றோரைத் தொந்தரவு செய்ததே இல்லையாம். தற்போது ஏற்றுமதி தொழில் செய்யும் சரவணன், அதில் வரும் வருமானத்தில் குறிப்பிட்ட பணத்தைத் தனது பழைய பொருள் சேகரிப்புக்காகவே செலவு செய்கிறார்.
“சேகரிக்கத் தொடங்கிய புதிதில் ‘குப்பையை ஏன் வீட்டில் குவிக்கிற?’ என்று என்னுடைய அப்பா திட்டத்தான் செய்தார். நம் முன்னோர்கள் பயன்படுத்திய இந்தப் பொருட்கள் எல்லாம் என்னைப் பொறுத்தவரை வரலாற்றுப் பொக்கிஷங்கள். தொழில்நுட்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு இது மாதிரி அரிய பொருள்களை உருவாக்க முடியுமா?” எனக் கேள்வி கேட்கும் சரவணன்,
“ஒவ்வொரு பழைய பொருளுக்கும் பின்னால் ஒரு கதையும், அதற்கெனத் தனி மதிப்பும் இருக்கிறது. வீட்டில் இடத்தை அடைக்கிறதென எடைக்குப் போடுபவர்களுக்குப் பழமையின் மதிப்பும், அருமையும் தெரியாது. என்னிடம் இருக்கும் பொருட்களும், இனி நான் சேகரிக்கும் பொருட்களும் அடுத்த தலைமுறை இளைஞர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார்.
பயனற்றவை பாதுகாப்பில்!
தற்போது செயல்படாமல் இருக்கும் பழைய பொருட்களைப் பழுது நீக்கிச் செயல் வடிவம் கொடுத்து விரைவில் காட்சிக்கு வைக்கவுள்ளார். “சிலரைப் போல ஒரு குறிப்பிட்ட பொருட்களை மட்டும் சேகரித்து என் வட்டத்தைச் சுருக்கிக்கொள்ள விரும்பவில்லை.
சந்தையில் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பயன்பாட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட எந்தவொரு பொருளையும் சேகரித்துப் பாதுகாப்பேன்” என்று கூறும் சரவணன், தன்னுடைய சேகரிப்புகளைக் காண வரும் எல்லோரிடமும், “பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு” எனும் திருக்குறளைக் கோடிட்டுக் காட்டிப் பழமையின் சிறப்பை விளக்குகிறார்.